தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • நாச்சியார் திருமொழி

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    இது பதினான்கு திருமொழிகளில் 143 பாசுரங்கள் கொண்ட அரிய இசையை, சூடிக்கொடுத்த நாச்சியார் பாடிய பாசுரங்களால் இப்பெயர் பெற்றது. இதுவும் வைணவ வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. வைணவ திருமணங்களில் ஆண்டாள் பாடிய அளவு திருமணப்பாடல் இன்றியமையாத ஒரு சடங்காக அன்று தொட்டு இன்று வரை அமைந்திருக்கிறது. ஆறாம் திருமொழி முழுதும் கனவைப் பாடுவது.

    வாரண மாயிரம் சூழ வலம் செய்து
    நாரணன் நம்பி நடக்கின்றா னென்றெதிர்
    பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
    தோரணம் நாட்டாக் கனாக்கண்டேன் தோழி நான்.

    நாளை வதுவை மணமென்று நாளிட்டு
    பாலை கமுகென்ப பரிசுடைப் பந்தற்கீழ்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
    காளைப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்.

    இந்திரன் உள்ளிட்ட தேவர்குழா மெல்லாம்
    வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
    மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
    அந்தரி சூட்டக் கனாகண்டேன் தோழிநான்.

    நால் திசையும் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
    பார்ப்பனச் சீட்டர்கள் பல்லாரெகுத் தேத்தி,
    பூப்பூனை கண்ணிப் புனிதனோடு வந்தென்றனை
    காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழிநான்.

    கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
    சதிரிள மங்கையர் தான் வந்து எதிர்கொள்ள
    மதுரையார் மன்னஞ் அடிநிலை தொட்டெங்கும்
    அதிரப் புகுதக் கனாகண்டேன் தோழிநான்.

    மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்.

    இத்திருமொழி போலவே பிற திருமொழிகள் எல்லாமே எளிய சொற்களும் சிறப்பான பொருள் சுவையும் இசைப் பொலிவும் பெற்று விளங்குவன. நாச்சியார் திருமொழியில் இசைக் குறிப்புக்கள் சில உள்ளன. அவை இன்னிசை, பண்ணுற நான்மறை, பண்பல செய்கின்றாய், பாஞ்ச சன்னியமே, மருள் ஆகியனவாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:15:45(இந்திய நேரம்)