தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங்காப்பிய, சிறு காப்பியப் போக்குகள்

 • 1.3 பெருங்காப்பிய, சிறு காப்பியப் போக்குகள்

  பெருங்காப்பியங்களுள் முதல் நூலாகத் திகழும் சிலப்பதிகாரம் மூல நூலாகத் திகழ்கிறது. அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாது சாதாரணக் குடிமக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அமைந்துள்ளது. சமணத் துறவியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்டிருப்பினும் அக்காலச் சூழலில் காணப்பட்ட பிற சமயங்களையும் இடையிடையே போற்றிப் பாடுகிறது. மூன்று கோட்பாடுகளை முன்னிறுத்தி அக்கோட்பாடுகளை ஊடுபாவாகக் கொண்டு அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எழுந்த மணிமேகலை, சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலை உயர்ந்த சிந்தனைகளைத் தன்னுள் கொண்டு அச்சிந்தனைகளைக் காப்பியம் முழுமையும் செலுத்தி நிற்கிறது. சமயம் சார்ந்த பல கருத்துகள் புகுத்தப்படினும், சமூகப் புரட்சிக்குரிய சில சிந்தனைகளையும் முன் வைத்துச் செல்கிறது.

  பின்வந்த சீவகசிந்தாமணி வடமொழி நூலைத் தழுவி எழுந்த காப்பியமாகத் திகழ்கிறது. சாதாரணக் குடிமகன் பாட்டுடைத் தலைவனாக நிறுவப்பட்ட நிலையிலிருந்து மாறி, அரசன் பாட்டுடைத் தலைவனாகப் பாடப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது. சமணக் கருத்துகள் பலவற்றை வலியுறுத்திக் கூறுகிறது.

  பின்வந்த குண்டலகேசி, வளையாபதி இரண்டிலும் சாதாரணக் குடிமக்கள் தலைமைப் பாத்திரப் படைப்புகளாக இடம் பெறுகின்றனர். இவ்விரு நூல்களும், சமண, பௌத்த சமயங்களைச் சார்ந்தனவாகக் கருதப்படுகின்றன. இவ்விரு காப்பியங்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

  சிறு காப்பியங்களில் பழையனூர் நீலி கதையில் இடம்பெறும் கதாபாத்திரம் கொண்டு தமிழில் எழுந்த சமண நூலாக நீலகேசி திகழ்கிறது. இக்காப்பியம் பௌத்த நூலாகிய குண்டலகேசிக்கு எதிராக எழுந்ததாக அறிஞர்கள் கூறுவர். பிற காப்பியங்களான யசோதர காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம் போன்றன பிறமொழிக் காப்பியங்களைத் தழுவி எழுதப் பெற்றனவாகக் காணப் பெறுகின்றன.

  தமிழில் மூல நூல்களாகத் திகழும் சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி போன்றன சாதாரண மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளன. முதற் காப்பியம் பிற சமயக் கடவுளர்களையும் காட்சிப்படுத்த, பின் எழுந்த காப்பியங்கள் குறிப்பிட்ட சமயம் குறித்தும் கடவுள் குறித்தும் படைக்கப்பட்டுள்ளன. இம்மூன்று காப்பியங்களுள்ளும் பெண்களே தலைமை மாந்தர்களாகக் காட்டப்பெற்றுள்ளனர். சிலப்பதிகாரத்தில் இல்லறத்தின் சிறப்பும், பெருமையும் எடுத்துரைக்கப் படுகின்றன. பின் இரு காப்பியங்களிலும் துறவு சிறந்ததாகக் காட்டப்பெறுகிறது.

  தமிழில் தோன்றிய பிற காப்பியங்கள் அரசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டனவாகவும், அந்தந்த வழிபடு கடவுளைப் போற்றும் தன்மையனவாகவும் திகழ்கின்றன. புறச் சமயக் காழ்ப்பு உடையனவாகத் திகழ்கின்றன. இவை மட்டுமின்றி, பின்வரும் கம்பராமாயணம், பெரிய புராணம், வில்லிபுத்தூரார் பாரதம், திருவிளையாடற் புராணம் போன்றன சமயச் சார்பும் இறைசார்பும் உடையனவாகத் தோற்றமளிக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-07-2017 15:59:02(இந்திய நேரம்)