தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களின் இலக்கிய நயம்

 • 1.6 இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்களின் இலக்கிய நயம்

  இருபதாம் நூற்றாண்டின் காப்பியங்கள் செவ்விலக்கியக் காப்பியங்களிலிருந்து சில நிலைகளில் மாறுபட்டுக் காணப்படினும் இலக்கிய நயத்தில் ஒரு சிறிதும் குறையாத வளம் உடையனவாய் அமைந்துள்ளன. வருணனை, உவமை, உருவகம், அணி, பின்னோக்கு, கற்பனை நாடக முறைமை, திணை வருணனை, சந்த வேறுபாடு எனப் பெருங்காப்பியங்கள் மற்றும் சிறு காப்பியங்களுக்கு நிகராக அமைந்துள்ளன.

  இலக்கிய வாசகன் உய்த்துணர்ந்து மகிழும் வண்ணம் தான் கூறப்புகுந்த செய்தியினைக் கவிஞன் இலக்கிய நயம்பட, பல்வேறு உத்திகளைப் புகுத்திக் கூறிச் செல்வான். இத்தகைய உத்திகளையும் இக்காப்பியங்களில் காண முடிகின்றது. ஒவ்வொரு காப்பியத்திலிருந்து ஒரு சான்றினைக் காண்போம்.

  1.6.1 தேசிய உணர்வு

  மனித தெய்வம் காந்தி காதை என்னும் காப்பியம் காந்தியின் குழந்தைப் பருவக் குறும்புகளை எடுத்துரைக்கிறது. சின்னஞ்சிறு குழந்தையொன்று வீதியில் விளையாட ஓடி வருகிறது. அங்கே ஏற்கெனவே ஒரு சில குழந்தைகள் வீதியில் மணல் வீடு கட்டி மகிழ்ச்சியோடு ஆடிக் கொண்டுள்ளனர். குழந்தைக் காந்தி தன் சின்னஞ்சிறு கால்களைத் தரையில் அழுத்தமாகப் பதித்து நடந்து வருகின்றது. அப்படி நடந்து வருதலைக் கவிஞர் அக்குழந்தையின் ஒவ்வோர் அடியும் எடுத்து வைக்கும்போது, "இப் பரதகண்டத்தை ஆளவந்த அயலாரே! நீங்கள் பல ஆண்டுகள் எங்கள் நாட்டை ஆள முடியாது. இதோ நானே நடை பயிலத் தொடங்கிவிட்டேன்" என்பது தொனிக்கக் கவிதை புனைந்துள்ளார்.

  மேலும் அக்குழந்தை தன் பிஞ்சுக் கால்களால் அச்சிற்றில்களை ஓங்கி உதைத்ததாம். அப்படிச் சிதைக்கும் காட்சியில் அயலாரின் அடி ஆழத்தில் இந்தியாவை வெகுகாலம் ஆளலாம் எனக் கட்டிய மனக்கோட்டை சிதையும் வண்ணம் ஓங்கிச் சிதைத்ததாகக் கவிஞர் புனைகின்றார்.

  மகாத்மா காந்தி பாரத தேசத்திற்குத் தேடித் தந்த சுதந்திரவுணர்வை, அவரது மனவலிமையை உலகிற்கு உணர்த்த இக்காட்சியைக் கவினுறப் படைத்துக் காட்டியுள்ளார் எனலாம். இத்தகைய சுவையான இலக்கிய மணம் கமழும் காட்சிகளை இக்காப்பியத்தில் ஆங்காங்கே காணமுடிகின்றது.

  1.6.2 உவமை

  பூங்கொடிக் காப்பியத்தில் 19ஆம் காதையான கோமகன் மீண்டும் தோன்றிய காதையில் கோமகனின் செயல்பாடுகள் காட்டப்படுகின்றன. பூங்கொடி மீது காதல் கொண்ட கோமகன் பூங்கொடியின் தோழி அல்லியின் உதவியை நாடினான். அல்லி, பூங்கொடியின் காமம் கடந்த தன்மையை எடுத்துக் கூறி, கோமகனை விலக்கினாள். இந்நிலையில், இதனைத் தெரிந்து கொண்ட பூங்கொடியின் பாட்டி வஞ்சி, கோமகனைச் சந்தித்து, பூங்கொடியிடம் கோமகன் தன்னுடைய காதலை மீண்டும் வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகிறாள். இதனை, இக்கவிஞர் அழகான உவமையின் மூலம் பொருத்தமுற எடுத்துரைத்துள்ளார்.

  நெய்யின்றி ஒளியிழந்து கிடக்கும் விளக்கில் மீண்டும் திரியைத் தூண்டி நெய்யை ஊற்றிட அது எவ்வாறு சுடர்விட்டுப் பிரகாசிக்குமோ அதுபோல, கோமகனது காமம் தளர்வுற்ற வேளையில் வஞ்சி அவனைத் தூண்டி அவனது உணர்வுகளை மேலெழச் செய்தனள் எனக் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு:

  திரியின் பிழம்பு சிறிது சிறிதாகக்
  குறுகி அணைந்து மறையும் நிலையில்
  குறை திரி தூண்டிக் குறையா நெய்யும்
  ஊற்றிட நிமிர்ந்தொளி ஓங்குவதென்ன
  சாற்றிய காமம் தளர்ந்திறும் நிலையில்
  செற்றிருந் தோனை விறலிதூண்ட

  இதில் மனத்தை விளக்காகவும், ஆசை வார்த்தைகளை நெய்யாகவும், அவளது செயலைத் திரிதூண்டும் செயலாகவும் படைத்துக் காட்டியிருப்பது படித்து இன்புறுதற்குரியது. வலிவிழந்த எண்ணம் வலுப்பெற்று மீண்டும் மேலெழுவது ஒளியிழந்த விளக்கு மீண்டும் நெய் பெற்று ஒளிர்வதோடு உவமிக்கப்படும் தன்மை ஆசிரியரது கற்பனைத் திறத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. குறை திரி, குறையா நெய் என்னும் தொடரில் குறை என்ற சொல்லை நேர் பொருளாகவும் எதிர்மறைப் பொருளாகவும் பயன்படுத்தியிருப்பது கவிஞரது இலக்கியத் திறத்திற்கும் சொல் வளத்துக்கும் ஒரு சான்று.

  1.6.3 வருணனை

  இக்காப்பியத்தைப் போன்று சுத்தானந்தரின் பாரதசக்தி மகாகாவியம் பலவிடங்களில் பெருங்காப்பியங்களை நினைவிற்குக் கொண்டு வருவதாய் அமைந்துள்ளது. கற்பனை கலந்தும் கலவாதும் வரும் வருணனைப் பகுதிகள் பல இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. பாரதப் புண்ணிய பூமியைப் பற்றிக் கவியோகியார் பாடும்போது, அங்கு இரப்பவர் இல்லை; இரப்பவர்க்கு இல்லை எனக் கூறுவார் இல்லை; மறைப்பவரும் இல்லை; மக்களிடையே உயர்வு தாழ்வு காணும் பேதமுடையோரும் இல்லை; அன்பை என்றும் துறக்க வேண்டுபவரும் இல்லையென மக்கள் மனோபாவத்தை எடுத்துரைக்கிறார். இந்த அடிகளைக் காணும்போது கம்பரின் கோசலை நாட்டு வருணனையில் இடம்பெறும்.

  ‘வண்மையில்லையோர் வறுமையின்மையால்’ என்னும் பாடல் வரி நினைவுக்கு வருகிறது.

  இரப்பவர் இல்லை ‘இல்லை’ என்பவரில்லை; உள்ளங்
  கரப்பவரில்லை; பேதங் காண்பவரில்லை; அன்பைத்
  துறப்பவரில்லை, வஞ்சந் தொல்லையும் இல்லை, தன்னை
  மறப்பவரில்லை, உண்மை மறுப்பவரில்லை மாதோ?

  (பாரத சக்தி மகாகாவியம்)

  என வரும் பாடல் கவிஞரின் கற்பனை ஆற்றலைக் காட்டுகின்றது.

  1.6.4 பிற காப்பியச் செல்வாக்கு

  இராவண காவியம் காப்பியச் சுவையில் குறைந்ததல்ல! புலவர் குழந்தை இராவணன் மண்டோதரி காதல் பற்றிக் குறிப்பிடும்போது இராவணன் கூற்றாகப் படைத்துள்ள பாடல் திருக்குறளைப் பிரதிபலிப்பதாக விளங்குவதைக் காணலாம்.

       யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
       தான்நோக்கி மெல்ல நகும்         (1094)

  என்னும் இத்திருக்குறளைப் புலவர் குழந்தை,

  என்னை நோக்காதி யானோக்க
       இருகண் கொண்டு நிலனோக்கும்

  என்னும் அடிகளில் அவ்வாறே கையாண்டு இருப்பது திருக்குறள் மீது அவருக்குள்ள அவாவினைக் காட்டுகின்றது.

  மண்டோதரி நாணத்தால் தன் கைகளைக் கொண்டு கண்களைப் பொத்திக் கொள்வதைக் கவிஞர் முற்றுருவமாகப் படைத்துள்ளார்.

  பூங்கைப் போதால் முகமதியம்
       பூத்த குவளை மலர் மூடும்

  - (காட்சிப் படலம் 86 :1-2)

  இந்த அடிகளில் கைகளைத் தாமரைப் போதாகவும் முகத்தை நிலவாகவும், கண்களைக் குவளையாகவும் உருவகித்து, தாமரைப் போது, முகமதியத்தில் பூத்த குவளையை மூடிக் கொண்டது நாணத்தால் என மண்டோதரியின் செயலை வருணிப்பது இராவண காவியத்தில் நிறைந்து கிடக்கும் இலக்கிய இன்பத்திற்கு ஒரு சான்று எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-07-2017 17:50:26(இந்திய நேரம்)