தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 1.7 தொகுப்புரை

  இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள் என்னும் இப்பாடம் கீழ்வரும் கருத்துகளை உள்ளடக்கி நிற்கிறது:

  அவ்வக் காலச் சூழல்களுக்கு ஏற்ப இலக்கியங்கள் தோன்றுகின்றன. அவற்றுள் ஒன்று காப்பியம் எனலாம்.

  காப்பியங்களுக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறவில்லை. இலக்கண நூலான தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணத்தை எடுத்துரைத்துள்ளது.

  தன்னேரில்லாத் தலைவனைக் கொண்டதாய் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினைப் பெற்று வருவது பெருங்காப்பியம்.

  நாற்பொருள்களுள் ஒன்று குறைந்து வருவது சிறுகாப்பியம்.

  மக்களிடையே வாய்மொழி மரபில் பயின்று வந்து, மக்கள் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு ஏட்டிலக்கியமாக மலர்வது வளர்ச்சிக் காப்பியம்.

  கவிஞர்களது கற்பனை வளத்தால் உருப்பெறுவது கலைக் காப்பியம். பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்களின் பெயர்கள் காட்டப்பெற்றுள்ளன.

  காப்பியக் காலம் எது என அறுதியிட்டுக் கூற இயலாது என்பதும் கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு கால இடைவெளியில் காப்பியங்கள் தோன்றியுள்ளன என்பதும் பெறப்பட்டுள்ளன.

  தமிழில் தோன்றிய முதல் காப்பியத் தலைவர்கள் மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழில் தோன்றிய தழுவல் மற்றும் சார்பு நூல்களில் அரசர்கள் பாட்டுடைத் தலைவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் தொடக்கத்தில் பிற சமயங்களையும் எடுத்துரைத்த காப்பியப் போக்கு பின்னர் மெல்ல மாறித் தனித்தொரு சமயம் சார்ந்த தன்மையதாகப் படைக்கப்பட்டுள்ளது.

  இருபதாம் நூற்றாண்டில் பல காப்பியங்கள் தோன்றி உள்ளன. இக்காப்பியங்களில் இரட்சணிய யாத்திரிகம், மனித தெய்வம் காந்தி காதை, பாரத சக்தி மகாகாவியம், பூங்கொடி, இராவண காவியம் ஆகிய முக்கிய ஐந்து நூல்களின் போக்குகள் குறித்தும் இலக்கிய நயம் குறித்தும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

  இரட்சணிய யாத்திரிகம் சாதாரணக் குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கினும், அதில் சமயத் தலைவராகிய இயேசுவின் வரலாறும் இடம் பெற்றுள்ளது. பெருங்காப்பியமாகக் கருதப்படினும் வீடுபேறு குறித்து இக்காப்பியம் பெரும்பாலும் பேசுகிறது.

  அடுத்து இடம் பெற்றுள்ள பாரதசக்தி மகா காவியம் உயர்ந்த இலட்சியம் கொண்ட கதாபாத்திரத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது.

  கடவுள் வாழ்த்து, காப்பியப் பாவகை, கால இடமயக்கம், உருவக முறை ஆகியவற்றால் மாறுபட்ட போக்கினதாக அமைந்துள்ளது.

  மணிமேகலை போன்றே பூங்கொடி அமைந்திருப்பினும் பல நிலைகளில் மாறுபட்டதாய் அமைந்துள்ளது. அதில், தமிழ்மொழி, தமிழிசை, தமிழ் நூல்கள் தோற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் காலச் சூழலுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது.

  கம்பராமாயணத்துக்கு எதிராகத் தோன்றிய இராவண காவியம் வாழ்த்து, அவையடக்கம், காலம் கூறல், ஆசிரியர் யாரெனக் கூறல் எனப் பல புதுவகைப் போக்குடன் காட்சியளிக்கிறது.

  20ஆம் நூற்றாண்டில் எழுந்த பிற காப்பியங்கள் அரசியல் தலைவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாய்க் கொண்டு அவர்தம் பெருமையைப் பற்றிப் பேசுகின்றன.

  பெருங்காப்பியங்களுக்கு அதாவது செவ்வியல் இலக்கியங்களுக்கு ஏற்ப 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்களும் இலக்கிய நயம் உடையனவாய்க் காணப்படுகின்றன.

  தன்மதிப்பீடு : வினாக்கள் - II

  1.

  இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலின் மொழிபெயர்ப்பு? நூலின் ஆசிரியர் யார்?

  2.

  காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்களில் சிலவற்றைக் குறிப்பிடுக.

  3.

  தலைவர்களைக் காப்பிய மாந்தர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காப்பியங்கள் யாவை?

  4.

  பாரத சக்தி மகாகாவியத்தின் காப்பிய அமைப்பினைத் தருக.

  5.

  இராவண காவியம் எந்நூலுக்கு எதிர்நூலாகத் தோன்றியது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 15:00:38(இந்திய நேரம்)