Primary tabs
-
2.4 அயல் நாட்டவர் சான்றுகள்
அயல்நாட்டவர் சான்றுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. அயலவர் குறிப்புகள்
2. ஐரோப்பியர் கால ஆவணங்கள்தமிழர்களைப் பற்றி அயல் நாட்டவர் கூறுவன அயலவர் குறிப்புகள் எனப்படும். பெரும்பாலும் அயல் நாட்டைச் சேர்ந்த கல்வியில் சிறந்தோர் குறிப்பிடுவதாகும். கி.மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்கர் தாம் இயற்றிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார்.
பெரிபுளூஸ் என்ற நூலிலும், ரோம ஆசிரியர்களான ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகியோரின் நூல்களிலும் சங்க காலத் தமிழகத்தின் நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பற்றியும், அயல் நாட்டு வாணிபம் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.
வாஸ்கோடகாமாவின் வருகையின் விளைவாக இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம் ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றின. கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் வாணிகத்தின் பொருட்டும் கிறித்துவ சமயத்தைப் பரப்பும் பொருட்டும் இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் வாணிகத் தளங்களையும் சமய இருப்பிடங்களையும் அமைத்துக் கொண்டு தத்தம் பணிகளைத் தொடங்கினர். இவ்வாணிகர்களும், கிறிஸ்தவப் பாதிரியார்களும் தங்கள் தாய் நாடுகளுக்கு எழுதிய கடிதங்களும் குறிப்புகளும் அக்காலத்துத் தமிழக அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றித் தெளிவுபடுத்துகின்றன.
கி.பி.19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய அவர்களது ஆவணங்கள், அவர்கள் இயற்றிய சட்டங்கள், தாய்நாட்டு மன்னர்களுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள், கடிதப் போக்குவரத்துகள் முதலியவை பயன்படுகின்றன. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்து ஆவணங்களும், அதற்குப் பின்னர் தோன்றிய ஆவணங்களும் சென்னை ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் இராஜாக்கள், சிவகங்கை இராஜாக்கள் ஆகியோரது ஆவணக் காப்பகங்கள், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், கொடைக்கானல் இயேசு சபை ஆவணக்காப்பகம், திருச்சிராப்பள்ளி, வேலூர், நாகர்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கிறிஸ்துவ சமய அலுவலகங்கள் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தமிழ் நாட்டு வரலாற்று உண்மைகளைக் கொண்டுள்ளன. தற்காலத்தில் எழுந்த உரைநடை இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள் ஆகியவை தமிழக மக்களது சமுதாயம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.