Primary tabs
6.3 சங்க காலப் பொருளாதாரம்
நாடு வளம் பெற்று இருக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருத்தல் அவசியம் ஆகிறது. நாடு வளம் பெறுவதற்குப் பல விதமான தொழில்கள் சிறப்புடன் நடைபெறுதல் அவசியம். சங்க காலத்தில் விவசாயம் மிக முக்கியத் தொழிலாக விளங்கியது. இதனுடன் நெசவுத்தொழில், கால்நடை வளர்த்தல், மட்பாண்டத் தொழில், மீன் பிடித்தல், தோல் வேலை, முத்துக் குளித்தல், உள்நாட்டு வாணிபம், அயல்நாட்டு வாணிபம் போன்ற தொழில்களும் சிறப்புற்று விளங்கின.
சங்க காலத்தில் விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது.
இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்தது. இதனைக் கண்ட புலவர்கள் விவசாயத்தின் பெருமையினை எடுத்துக் கூறியுள்ளனர். அக்காலத்தில் பசிப்பிணியைப் போக்குவதற்குக் காரணமான விவசாயம் பெருமைக்குரிய தொழிலாகவும் எண்ணப்பட்டது. விவசாயம் செய்யப்பட்ட தானியங்களில் நெல் முக்கிய இடத்தை வகித்தது. காலம் செல்லச் செல்ல நெற்பயிர் விளைவித்தோருக்குச் சமுதாயத்தில் மதிப்புக் கூடியது. வரகு, தினை ஆகியவை நெல்லுக்கு அடுத்த இடத்தை வகித்தன. கானம், உளுந்து, சாமை, அவரை, மொச்சை, பயறு, கரும்பு ஆகியவைகளும் பயிரிடப்பட்டன. இவைகளோடு பருத்தியும், பலவகைப்பட்ட மூலிகைகளும் விவசாயம் செய்யப்பட்டன. இஞ்சி, மிளகு, தென்னை, கமுகு, புளி, மா, பலா, வாழை போன்றவைகளும் பயிரிடப்பட்டன.
மருத நிலம் நீர் வளம் பெற்றிருந்ததால் அங்கு விவசாயம் மிகுதியாக நடைபெற்றது. ஏனெனில் ஆறுகள் ஓடுவதாலும், நீர் நிலைகள், குளம், ஏரி போன்றவைகள் இருப்பதாலும் இப்பகுதியை மருத நிலம் என்றனர்.
காவிரி ஆறு வளப்படுத்திய பகுதியில் நடைபெற்ற விவசாயத்தைப் பற்றிப் பல சங்க பாடல்கள் கூறுகின்றன. கரிகால் சோழன் காடுகளை அழித்து அவற்றை விளை நிலமாக மாற்றினான். விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்ததால் நாட்டின் பொருளாதாரம் சற்று ஓங்கியே காணப்பட்டது.
விவசாய நிலங்களை உழுது சமன் செய்வதற்குக் காளைகளும்
எருதுகளும் தேவைப்பட்டன. பாலையும் பாலால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களையும் சங்க கால மக்கள் அன்றாட உணவாக உட்கொண்டனர். ஆடு மாடுகளை மேய்த்துப் பின்பு அவற்றை விற்பனை செய்தனர். தயிர், மோர், நெய் போன்றவற்றைத் தயாரித்தனர். இடையர்கள் இத்தொழிலை மேற்கொண்டனர். கிராமப்புறங்களில் பொருளாதார நிலை இடையர்களால் வளர்ச்சியடைந்திருந்தது என்று கூறலாம்.
சங்க காலத்தில் பருத்தி, பட்டு ஆகியவற்றால் ஆடைகள் நெய்தனர்.
உயர்ந்த துணிகளைச் சங்க காலத்தில் தயாரித்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. பெரிபுளூஸ் என்ற நூல் ஆசிரியர் தமிழகத்தின் துணிகளைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். பட்டாடையின் மேன்மை பற்றிப் பொருநராற்றுப்படை கூறுகின்றது. பருத்தி நூல் நூற்பதில் மக்கள் திறமை பெற்றிருந்தனர். நூல் நூற்ற பெண்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். ஆடைகளைத் தைப்பதற்கும் அவர்கள் அறிந்திருந்தனர். கலிங்கம் என்னும் துணி வகை கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சங்க காலத்தில் துணிகளின் மூலம் பொருளாதாரமும் உயர்ந்தது.
மட்பாண்டத் தொழில் வளர்ச்சியடைந்திருந்தது.
ஒவ்வொரு கிராமத்திலும் தனிப்பட்ட இடங்களில் குயவர் குடியிருப்புகள் இருந்தன. குயவர்கள் குடம், பானை, குவளை ஆகியவற்றைத் தயாரித்து, காளவாய்களில் சுட்டு எடுத்தனர்.
பரதவர் என்னும் குலத்தார் மீன் பிடிக்கும் தொழிலை மேற் கொண்டனர்.
கட்டு மரங்களிலும், படகுகளிலும் அவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்தனர். பரதவப் பெண்கள் ஆண்கள் பிடித்து வந்த மீன்களைத் தலையில் சுமந்து கடைவீதிக்குக் கொண்டு சென்று அவைகளைப் பண்டமாற்று முறைப்படி விற்றனர். இதனால் மீன்பிடிக்கும் தொழிலாலும் பொருளாதாரம் மேன்மை அடைந்தது எனலாம்.
தோல் பொருட்கள் செய்யும் தொழிலும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது. தோலாலும், மரத்தாலும் கால் அணிகள் செய்து கொண்டனர்.
முத்துக் குளிக்கும் தொழில் மூலமாகத் தமிழ் நாட்டின் வாணிபமும் பொருளாதாரமும் வளர்ந்தன. தமிழ் நாட்டு முத்துக்கள் ரோமப் பேரரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
உள்நாட்டு வாணிபத்திற்குப் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது. நெல்லுக்குப் பதில் உப்பு விற்கப்பட்டது. மோரும், நெய்யும் நெல்லுக்கு மாற்றப்பட்டன. தேனும், கிழங்கும் விற்று மீனும், கள்ளும் பெற்றுக் கொண்டனர். நெய்தல் நிலத்துப் பரதவர் உப்புடன் மருத நிலத்திற்குச் சென்று நெல் பெற்றுக் கொள்வர். குறிஞ்சி நிலத்துத் தேனும் கிழங்கும், நெய்தல் நிலத்து மீனுக்கும் கள்ளுக்கும் விற்கப்பட்டன. இவ்வாறான பண்டமாற்று முறையால் உள்நாட்டுப் பொருளாதாரம் தாராளமாக இருந்தது.
அயல் நாட்டு வாணிபத்திற்குத் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது. இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்ததால் தமிழகத்திற்குச் சாதகமான வாணிபம் நிலவியது. புகார் முக்கியத் துறைமுகப்பட்டினமாகச் சங்க காலத்தில் விளங்கியது. ரோமாபுரியுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் தமிழகத்திற்குப் பெரும் செல்வம் கிடைக்கப் பெற்றது. இதன் காரணமாகச் சங்க காலத்தில் பொருளாதாரம் வளம் பெற்றது. ரோமாபுரி வாணிகர்கள் அரேபியாவின் தென் பகுதியிலுள்ள துறைமுகங்களைப் பயன்படுத்தித் தமிழகத்துடன் நீண்ட நாள் வாணிபத்தில் ஈடுபட்டனர். இதற்குச் சான்று ரோமாபுரி நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றதேயாகும்.
எகிப்தியர், பினீசியர், கிரேக்கர் ஆகியோரும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். மேலும் சீனா, மலேயா, சுமத்திரா போன்ற நாடுகளும் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பில் இருந்தன. மிளகு, இலவங்கம் போன்ற பொருள்கள் தமிழகத்தின் ஏற்றுமதியில் முதலிடம் பெற்றிருந்தன என்பதனை முந்தைய பாடங்களில் படித்து அறிந்தோம். ஆடை வகைகள், வாசனைத் திரவியங்கள், தந்தம், அரிய வகை மரங்கள், உயர்வகைக் கற்கள், மருந்து முதலியனவும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களாகும். கண்ணாடி, உலோகப் பாத்திரங்கள், துணி வகைகள், மதுபானங்கள் போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பொதுவாக அயல்நாட்டு வாணிபத்தால் பொருளாதாரம் நிறைவு பெற்று இருந்தது.