தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முடிவுற்றது. தமிழகத்தை மூவேந்தர்கள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த சங்க காலத்தில், தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசர்களின் ஆட்சி (கி.மு.230-கி.பி.225) நடந்து வந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர்கள் என்பவர்கள் சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்து, திறை செலுத்தித் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தனர். கி.பி. 225இல் சாதவாகனர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

    சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தமிழக அரசியலில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. தொண்டை மண்டலத்தின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் பல்லவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வரலாயினர். இதே நேரத்தில் தமிழகத்திற்கு வடக்கிலும், வடமேற்கிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்திருந்த களப்பிரர் என்னும் வேற்றுமொழி இனத்தவர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தபடியால் களப்பிரர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தின் தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றனர். அப்போது தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த மூவேந்தர்கள் வலிமை குன்றியும், தங்களுக்குள் ஒற்றுமை இன்றியும் இருந்தனர். களப்பிரர் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். பின்பு சேர, சோழ நாடுகளைக் கைப்பற்றினர். கி.பி. 250 முதல் 575 வரை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளைக் களப்பிரர் ஆட்சி செய்தனர். களப்பிரர் ஆட்சி செய்த இக்காலமே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் எனப்படுகிறது.

    களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆண்டு வந்த களப்பிர மன்னர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களது ஆட்சி முறை பற்றியும், அவர்கள் காலச் சமுதாய நிலை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே களப்பிரர் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (Dark Age) என்றும் கூறப்படுகிறது.

    இப்பாடத்தில் களப்பிரர் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் கூறப்படும் பல்வேறு கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட களப்பிர மன்னர்கள் பற்றித் தெரியவரும் செய்திகள் காட்டப்படுகின்றன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சமுதாய நிலை, சமய நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பது விளக்கிக் கூறப்படுகிறது. களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பது விளக்கிக் காட்டப்படுகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:25:41(இந்திய நேரம்)