தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

களப்பிரர் யார்?

 • 1.2. களப்பிரர் யார்?

  தமிழக வரலாற்றாசிரியர்கள் மேலே கூறிய களப்பிரர் பற்றிய வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்த களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் பலவகையான கருத்துகளைக் கூறியுள்ளனர். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஈண்டுக் காண்போம்.

  1.2.1 களப்பிரர் வேங்கடத்திலிருந்து வந்தவர்கள்

  தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்தையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த கள்வர் அல்லது களவர் இனத்தவரே களப்பிரர் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர். சங்க காலத்தில் வேங்கடமலைப் பகுதியைப் புல்லி என்ற அரசன் ஆண்டு வந்தான் என்பதை மாமூலனார் என்ற புலவர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

  கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
  மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
  விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்

  (அகநானூறு, 61:11-13)

  இவ்வடிகளில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டைப் பணியச் செய்தவன் என்றும், திருவிழாக்களை உடைய மிகச் சிறப்புவாய்ந்த வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் இனத்தவன் என்பது பெறப்படும். இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.

  புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார்.

  புடையல்அம் கழல்கால் புல்லி குன்றத்து….
  மொழிபெயர் தேஎம்

  (அகநானூறு, 295:11.15)

  (புடையல் – ஒலிக்கின்ற; அம் – அழகிய; கழல் – வீரக்கழல்; குன்றம் – வேங்கடமலை; மொழிபெயர் தேஎம் – வேற்றுமொழி வழங்கும் நாடு; தேஎம் – தேயம், தேசம், நாடு.)

  வேங்கட மலைப்பகுதியை ஆண்டு வந்த புல்லியின் கள்வர் இனத்தவர் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து தமிழ்நாடடின் பல பகுதிகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி ஆண்டனர். அக்கள்வர் இனத்தவரே களப்பிரர் ஆவர் என்று கருதுகின்றனர். கள்வர் என்ற சொல் தமிழில் களவர் (களவு செய்பவர்கள்) என்றும் வழங்கும். களவர் என்பது வடமொழியில் களப்ரா என வழங்கும். அதுவே தமிழில் களப்பிரர் என்று வழங்கியது என்று கூறுகின்றனர்.

  1.2.2 களப்பிரர் முத்தரையரின் மூதாதையர்

  கி.பி. 650 முதல் கி.பி. 860 வரை முத்தரையர் என்போர் சோழ நாட்டில் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியைச் செந்தலை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். செந்தலை என்னும் ஊர் தற்போது, தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊருக்கு அருகில் ஒரு சிற்றூராக உள்ளது. இம்முத்தரையர் மேலே குறிப்பிட்ட களவர் இனத்தவராகிய களப்பிரர் குலத்தின் வழி வந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

  கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர். களப்பிரர் முத்தரையரின் மூதாதையர் என்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

  முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்.

  மேலே கூறியவற்றால் களப்பிரர் வேங்கடமலைப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், அவர்கள் களவர் இனத்தவர் என்பதும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் கைப்பற்றி ஆண்டனர் என்பதும், அதனால் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர் என்பதும் புலனாகும்.

  1.2.3 களப்பிரர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்

  சோழ நாட்டில் களப்பாள் என்ற ஊர் இருந்தது. இவ்வூரில் முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற்றான். அவன் வழியினரே களப்பாளர் எனவும், களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர். பாண்டிய நாட்டைக் கைப்பற்றியவர்களை வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூற, தளவாய்புரச் செப்பேடு களப்பாளர் என்று குறிப்பிடுகிறது. எனவே சோழ நாட்டில் வாழ்ந்து வந்த களப்பாளரே களப்பிரர் ஆவர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

  1.2.4 களப்பிரரும் கங்கரும் ஒருவரே

  கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் வலிமையின்மையைப் பயன்படுத்திக்கொண்டு கங்கர்கள் பாண்டிய நாட்டில் ஊடுருவினர் என்றும், அக்கங்கர்களே களப்பிரர்கள் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்துப் பொருந்தாது. ஏனெனில் கங்கர்களைச் சிலப்பதிகாரமும், பல்லவர் காலத்தில் தோன்றிய செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கங்கர் என்றே குறிப்பிடுகின்றன. எந்த ஒரு இடத்திலும் அவர்களைக் களப்பிரர் என்று குறிப்பிடவில்லை.

  கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
  பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்

  (சிலப்பதிகாரம், காட்சிக் காதை:156-157)

  1.2.5 களப்பிரர் கர்நாடகத்தில் இருந்து வந்தவர்கள்

  களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன. வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.

  • பெரிய புராணம்

  • பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.

   கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
   மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
   யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
   சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்

   வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
   சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
   சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
   கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்.

   (பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)

   (வடுகக் கருநாடர் – வடுகு என்னும் ஒரு மொழியைப் பேசும் கருநாடர்; சிந்த – அழிய; செரு – போர்; மதுராபுரி – மதுரை மாநகர்.)

  • கல்லாடம்
  • கி.பி. பதினோராம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் நூல் கல்லாடம். இது ஓர் அகப்பொருள் நூல். இந்நூலை இயற்றியவர் கல்லாடர் என்பவர் ஆவார். இவர் இந்நூலில் கருநாட வேந்தன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவன் சமணர்களோடு சேர்ந்து கொண்டு, சிவபெருமானுக்குச் சைவர் செய்யும் திருப்பணிகளைச் செய்ய விடாமல் தடுத்தான் என்றும் குறிப்பிடுகிறார்.

   படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து
   மதுரை வவ்விய கருநாட வேந்தன்
   அருகர்ச் சார்ந்து அரன்பணி அடைப்ப

   (கல்லாடம்,56)

   (உடன்று-போர் செய்து; பஞ்சவன்-பாண்டியன்; துரந்து-விரட்டியடித்து; வவ்விய-கைப்பற்றிய; அருகர்-சமணர்; அரன்-சிவபெருமான்; அடைப்ப-தடுக்க)

  • வேள்விக்குடிச் செப்பேடு
  • வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

   அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
   களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்

   (அளவரிய-எண்ணற்ற; அதிராசர்-பாண்டிய அரசர்கள்; அகலிடம்-அகன்ற பாண்டிய நாடு; களப்ரன் - களப்பிரன்; கலியரசன்-கலி அரசன்)

   எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது.

   கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன.

   களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. களபோரா குலத்தினர் சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சியுற்றனர். அவர்களால் தெற்கில் தொண்டை மண்டலத்தில் ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை எனவே அவர்கள் அக்காலத்தில் வலிமை குன்றியிருந்த சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

   மேற்கூறியவற்றால் சங்க காலத்தின் இறுதியில் கி.பி. 250அளவில், படையெடுத்து வந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிரர் கர்நாடகத்துடன் (கன்னட நாட்டுடன்) தொடர்பு கொண்டவர்கள் என்பது புலனாகும். இருப்பினும் இவர்கள் பண்டைக் கர்நாடகத்தில் எப்பகுதியிலிருந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதை அறிய முடியவில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 13:18:36(இந்திய நேரம்)