தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- களப்பிர மன்னர்கள்

 • 1.3. களப்பிர மன்னர்கள்

  களப்பிரர் காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட களப்பிர மன்னர்கள் பலர் ஆவர். சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும், கடுங்கோனுக்கு முன்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்று வேள்விக்குடிச் செப்பேடும் சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன. ஆனால் அக்களப்பிர மன்னர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களின் கால வரையறை பற்றியும் அறிந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் கிடைத்துள்ள சான்றுகளை நோக்கும்போது, ஒரு சில களப்பிர மன்னர்களைப் பற்றி அறிய முடிகிறது.

  • களப்ரன்

  சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து, அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களை வென்று கைப்பற்றியவன் களப்ரன் என்பவன ஆவான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. தமிழ் நாட்டில் களப்பிரர் ஆட்சியை முதலில் நிலைநாட்டியவன் இவனே எனலாம். கருநாடகத்திலிருந்து படையெடுத்து வந்து மதுரையைக் கைப்பற்றியவன் எனப் பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடுகின்ற அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு கலியரசன் எனக் குறிப்பிடுகின்ற இக்களப்ரனும் ஒருவனே என்பர்.

  களப்ரன் என்னும் இவன் மதுரையைக் கைப்பற்றியபோது வேள்விக்குடி என்னும் ஊர் பிராமணர்களுக்கு உரிமை உடையதாய் இருந்தது. சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்பவன், யாகங்கள் செய்வதற்குத் தனக்கு உதவிய பிராமணர்களுக்கு வேள்விக்குடி என்னும் ஊரைப் பிரம்மதேயமாக வழங்கியிருந்தான். அவன் காலம் முதல் பிராமணர்கள் இந்த ஊரின் உரிமையை வரி எதுவும் செலுத்தாமல் அனுபவித்து வந்தனர். களப்பரன் மதுரையைக் கைப்பற்றியதும், பிராமணர்களிடமிருந்து பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி அவர்களுக்கு வழங்கியிருந்த வேள்விக்குடி என்னும் ஊரையும் கைப்பற்றிக் கொண்டான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவன் சமண சமயத்தைச் சார்ந்தவன் என்றும், சைவ அடியார்கள் சிவபெருமானுக்குச் செய்யும் திருப்பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தான் என்றும் கல்லாடம் குறிப்பிடுகிறது.

  • அச்சுதக் களப்பாளன்

  தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன. அச்சுதன் என்பது சமணசமயக் கடவுளுக்கு உரிய பெயராகும். எனவே அச்சுதக் களப்பாளன் சமணசமயம் சார்ந்தவன் எனலாம்.

  • அச்சுத விக்கிரந்தன்

  புத்ததத்தர் என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த பௌத்த மதப் பெரியார் ஆவார். இவர் பாலிமொழியில் அபிதம்மாவதாரம் என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் தம்முடைய காலத்தில் அச்சுத விக்கிரந்தன் என்னும் களப்பிர அரசன் காவிரிப்பட்டினத்திலிருந்து (புகாரிலிருந்து) சோழ நாட்டை ஆண்டு வந்தான் எனக் குறிப்பிடுகிறார்.

  • கூற்றுவ நாயனார்

  நம்பியாண்டார் நம்பி என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சுருக்கமாகத் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் பாடியுள்ளார். அவர்களுள் ஒருவர் கூற்றுவ நாயனார் என்பவர் ஆவார். இவர் களப்பிர அரசன் என்பதை நம்பியாண்டார் நம்பி,

  ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒருகோலின் வைத்தான்
  கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே

  (திருத்தொண்டர் திருவந்தாதி, 47:3-4)

  என்ற அடிகளில் குறித்துள்ளார்.

  (ஓதம் – கடல்; தழுவிய – சூழ்ந்த; ஞாலம் – உலகம்; கோல் – செங்கோல்)

  சேக்கிழார் பெரியபுராணத்தில் கூற்றுவ நாயனாரின் வரலாற்றை விரிவாகப் பாடியுள்ளார். கூற்றுவ நாயனார் பகையரசர் பலரை வென்று முடிசூடிக் கொள்ள விரும்பித் தில்லை வாழ் அந்தணரை வேண்டினார். இவர் சோழர் குலத்தைச் சார்ந்தவர் அல்லர் என்பதால் தில்லைவாழ் அந்தணர் இவருக்கு முடிசூட்ட மறுத்து விட்டனர். பின்பு இவர் சிவபெருமானைத் தனக்கு முடிசூட்டுமாறு வேண்டினார். சிவபெருமானும் தமது திருவடியை இவருக்கு முடியாகச் சூட்டி அருளினார். இவ்வாறு சேக்கிழார் கூற்றுவ நாயனார் வரலாற்றைக் கூறுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-10-2019 16:02:29(இந்திய நேரம்)