தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சமுதாய நிலை

 • 6.2 சமுதாய நிலை

  சோழர் காலத்துச் சமுதாயம் சாதியின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஒவ்வொரு சாதியைச் சார்ந்தவர்களும் தனித்தனித் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். சாதிகளுக்கு இடையில் உள்ள தொடர்பை வரையறுக்கவும், சாதிகளின் நலனைப் பேணிக் காப்பதற்கும் தனித்தனிச் சாதிக் கழகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உயர் சாதியைச் சார்ந்தவர்கள் அதிக உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றிருந்தனர். கீழ்ச் சாதியைச் சார்ந்தவர்கள் வரி செலுத்தவும், கட்டாயப் பணி புரியவும் கடமைப்பட்டிருந்தனர்.

  6.2.1 வேதியர்

  வேதியர் சமுதாயத்தில் உயர் இடம் வகித்தனர். இவர்கள் அக்கிரகாரங்கள் அல்லது சதுர்வேதி மங்கலங்கள் என்னும் தனி இடங்களில் வாழ்ந்து வந்தனர். கோயில்கள், மடங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இவர்கள் தனிச் சலுகைகள் பெற்றனர். பிற சாதியைச் சார்ந்தவர்கள் இவர்களுக்கு உண்டியும், உறையுளும் அளித்து வந்தனர். மன்னர்களும், மக்களும் இவர்களுக்குத் தானங்கள் வழங்கினர். இவர்கள் பெற்றிருந்த நிலங்கள் வரிவிலக்குப் பெற்றிருந்தன. இந்தத் தனிச் சலுகைகள் வேதியரின் நிலையை உயர்த்தின.

  6.2.2 சேரி மக்கள்

  சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து வந்தனர். பறையர்களும், புலையர்களும் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு எனத் தனிச் சுடுகாடுகள் இருந்தன. கிணறுகளும் தனியாக வெட்டப்பட்டிருந்தன. விவசாயத் தொழில் செய்தலும், முரசு அறைதலும் அவர்களது தொழில்கள் ஆகும். இத்தகைய சமுதாய ஏற்றத்தாழ்வு அக்காலத்தில் இருந்தது.

  6.2.3 கலப்பு இனங்கள்

  சோழர் காலத்தில் தமிழகத்தில் பல கலப்பு இனங்களும் காணப்பட்டன. அனுலோமர்கள், பிரதிலோமர்கள், மாகிஷியர்கள், காரணிகர்கள், இரதகாரர்கள், பிரம்ம சத்தியர்கள், பிரம்ம வைசியர்கள் என்போர் கலப்பு இனத்தைச் சார்ந்தோர்கள் ஆவர். இவர்களுக்கு என்று தொழில்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

  கலப்பினத்தைச் சார்ந்தவர்களில் அனுலோமர்கள், பிரதிலோமர்கள் ஆகிய இரு பிரிவினரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். உயர்சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள் அனுலோமர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், உயர் சாதியைச் சார்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள் பிரதிலோமர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

  6.2.4 மகளிர் நிலை

  பெண்கள் புடவை கட்டி அதன் முந்தானையை மேலாடையாகப் பயன்படுத்தினர். அவர்களுக்குத் தனி மேலாடை இல்லை. அவர்கள் தங்கத்தாலும், முத்துக்களாலும் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். பந்தாடுவதும், ஊஞ்சலாடுவதும் அவர்களது பொழுதுபோக்காக இருந்தன. கற்பு பெண்களுக்கு அணியாகக் கருதப்பட்டது.

  சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குச் சொத்துரிமை இருந்தது. தங்களது சீதனச் சொத்தின் மீது பெண்கள் ஏகபோக உரிமையைப் பெற்றிருந்தனர். உயர்குடிப் பெண்கள் இன்னும் உயரிய நிலையை வகித்தனர். அரசியர்கள் பேரரசின் நிருவாகத்தில் தலையிட்டு அதனைத் திறம்பட நடத்துவதற்கு உதவினர். கோயில்கள் அவர்கள் ஆதரவைப் பெற்றன. உடன்கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது.

  6.2.5 வலங்கை – இடங்கைப் பிரிவுகள்

  பிற்காலச் சோழர் காலச் சமுதாயம் சாதியின் அடிப்படையில் அமைந்திருந்தது என்பதை மேலே பார்த்தோம். பல்வேறு தொழில்கள் அடிப்படையில் சாதிகள் பலவாகப் பெருகிக் கிடந்தன. கலப்பினங்கள் உருவாக்கிய சாதிகளும் பலவாக இருந்தன. சாதிகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது. இதன் விளைவாகப் பிற்காலச் சோழர் காலத்தில் வலங்கை–இடங்கை என்னும் இரு பெரும்பிரிவுகள் உருவாயின.

  • இடங்கையர்

  பிராமணர், கம்மாளர் (கொல்லர்), வேளாளர், வாணிகர் போன்றவர்கள் உயர்ந்த சாதியினர் எனக் கருதப்பட்டனர். இவர்கள் இடங்கையர் என அழைக்கப்பட்டனர். அரசு இவர்களுக்கு அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியிருந்தது. இதனால் இவர்கள் வசதியுடன் வாழ்ந்தனர்.

  • வலங்கையர்

  உழுதொழில் செய்து அதனால் வரும் கூலியில் வாழ்க்கை நடத்தும் பல்வேறு சாதியினர், மற்றும் குயவர், வண்ணார், நாவிதர் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கருதப்பட்டனர். இவர்கள் வலங்கைர் என அழைக்கப்பட்டனர். இடங்கையர்க்கு வழங்கப்பட்ட சலுகைகளும், உரிமைகளும் இவர்களுக்குத் தரப்படவில்லை. இவர்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப அரசு இவர்களுக்கு வரிகளை விதித்தது. இதனால் இவர்கள் இடங்கையரைப் போல வசதியுடன் வாழ முடியவில்லை.

  • வலங்கை – இடங்கையரிடையே பூசல்கள்

  சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்த வலங்கையர், இடங்கையர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும் பெற வேண்டிப் போராடினர். இதனை இடங்கையர் எதிர்த்தனர். இதனால் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே பல பூசல்கள் ஏற்பட்டன. இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பல உள்ளன.

  முதலாம் குலோத்துங்கனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1071இல்), இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊரில் வலங்கை – இடங்கைப் பிரிவினரிடையே ஒரு பெரிய கலகம் நடைபெற்றது. இக்கலகத்தின்போது, கலகக்காரர்கள் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினர்; கோயில்களை இடித்துத் தள்ளினர். இக்கலகம் முடிந்த பின்னர் ஊரை மீண்டும் சீரமைக்கவும், கோயில்களை மீண்டும் எழுப்பவும் ஊர்ச்சபையினர் கோயில் பண்டாரத்திலிருந்து ஐம்பது கழஞ்சு பொன்னைக் கடன் வாங்கினர். இக்கலகம் பற்றிய செய்தியை முதலாம் குலோத்துங்கனின் பதினோராம் ஆட்சியாண்டில் திருவரங்கக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று விரிவாகத் தெரிவிக்கிறது.

  • காலப்போக்கில் வலங்கை – இடங்கையர் பூசல்கள்

  வலங்கை – இடங்கையர்க்கு இடையிலான பூசல்கள் பிற்காலச் சோழப் பேரரசர் காலத்தில் தோன்றி, விசயநகரத்துப் பேரரசர் காலத்தில் தொடர்ந்து வளர்ந்துவந்து, ஆங்கிலேயர் அரசாட்சியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் தீவிரம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இவ்விரு பிரிவினர்க்கு இடையே நடந்த பூசல்கள் காரணமாகச் சென்னை நகரின் தெருக்களில் மனித இரத்தம் சிந்தப்பட்டது உண்டு. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை – இடங்கை வேறுபாடுகள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு அப்பெயர்களின் பொருள்கூட இன்னதென விளங்குவதில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2019 15:56:55(இந்திய நேரம்)