தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- கலை வளர்ச்சி

  • 6.5 கலை வளர்ச்சி

    பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்த தமிழ்நாட்டில் கலைகள் புகழ்பெற்று விளங்கின. கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை போன்ற கலைகள் சோழ மன்னர்களின் அரவணைப்பில் சிறப்புற வளர்ந்தன. அவற்றின் வளர்ச்சியைக் காண்போம்.

    6.5.1 கட்டடக் கலை

    சோழர் காலத்துக் கோயில்களை அவற்றின் அமைப்பினை வைத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முடியும். அவையாவன: முற்காலம், இடைக்காலம், பிற்காலம் ஆகும். முற்காலத்துக் கோயில்கள் சிறியதாகவும், பல்லவர் காலத்துக் கலையைத் தழுவியதாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்களுள் தஞ்சைப் பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் குறிப்பிடத்தக்கன ஆகும். தஞ்சைப் பெரிய கோயிலின் பெரிய கோபுரம் பார்ப்போரைப் பிரமிக்கச் செய்கின்றது. சோழர் காலத்துக் கட்டடக் கலைத் திறனை இக்கோயில் எடுத்துரைக்கின்றது.

    பிற்காலச் சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்களின் வரிசையில் தாராசுரம், திருப்புவனம் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் குறிப்பிடத்தக்கன.



    தாராசுரம்



    திருப்புவனம்

    கோயில்கள் மட்டும் அல்லாமல் கட்டடக் கலைக்குச் சான்றாகச் சோழப் பேரரசரின் அரண்மனைகளும் அமைந்துள்ளன. இதற்குத் தஞ்சையிலுள்ள அரண்மனையைச் சான்றாகக் கூறலாம். தஞ்சை மட்டுமின்றிப் பழையாறை, சிதம்பரம், காஞ்சி ஆகிய இடங்களிலும் அரண்மனைகள் இருந்தன. அதுபோலக் கங்கைகொண்ட சோழபுரத்திலும் அரண்மனை இருந்தது. இவைகளோடு அரசியர்களுக்கு என்று அந்தப்புரங்களும், விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    6.5.2 சிற்பக் கலை

    சோழர் காலத்துச் சிற்பக் கலை வளர்ச்சியைப் பல்வேறு கோயில்களில் உள்ள சிற்பங்களும், லண்டன், பாரீஸ், ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களிலுள்ள பொருட்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ள சோழர் காலத்துச் சிற்பங்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சிற்பிகள் தங்களது கைவண்ணத்தைப் பயன்படுத்தி வெண்கலம், செம்பு, கருங்கல் போன்றவற்றில் சிற்பங்களை வடித்துள்ளனர்.

    6.5.3 ஓவியக் கலை

    சோழர் காலத்தில் சிற்பக் கலையுடன் ஓவியக் கலையும் வளர்ச்சியுற்றது. தஞ்சை, திருமயம், மாமண்டூர், காஞ்சி, நார்த்தாமலை மலையடிப்பட்டி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் கண்ணைக் கவரும் சித்திரங்கள் உள்ளன. சோழர் காலத்துச் சித்திரங்களில் பெரும்பாலானவை சமயச் சார்புடையனவாக உள்ளன.

    இவைகளைத் தவிர சோழர்கள் காலத்தில் இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளும் சிறப்புற்றிருந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 16:37:05(இந்திய நேரம்)