தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பொருளாதார நிலை

 • 6.3 பொருளாதார நிலை

  நாட்டு வளத்திற்குப் பொருளாதாரம் இன்றியமையாததாகிறது. பொருளாதாரத்தில் சோழப் பேரரசு நன்கு திளைத்து இருந்தது. ஏனெனில் அப்பேரரசில் வேளாண்மை மேலோங்கி இருந்தது.

  6.3.1 வேளாண்மை

  சோழ நாட்டைக் காவிரி ஆறு வளப்படுத்தியது. நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தையே சார்ந்திருந்தது. வேளாண்மையைப் பெருக்குவதற்காகக் குளங்களும், கால்வாய்களும் வெட்டப்பட்டன. வீரநாராயணம் ஏரி, சுந்தரசோழப் பேரேரி, சோழ கங்கம் ஏரி, செம்பியன் மாதேவி ஏரி முதலியன சோழ மன்னர்களால் வெட்டப்பட்டவை ஆகும். மேலும் காடுகள் திருத்தப்பட்டு அவை விளைச்சல் நிலமாக்கப்பட்டன.

  6.3.2 அயல்நாட்டுத் தொடர்பு

  சோழர் காலத்துத் தமிழகம் சீனா, அரேபியா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தது. சோழ வேந்தர்கள் சீனாவிற்குத் தூதுவர்களை அனுப்பினர். குறிப்பாக முதலாம் இராசராசன் (கி.பி. 1015), முதலாம் இராசேந்திரன் (கி.பி.1033), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1077) ஆகியோர் சீனாவிற்குத் தூதுவர்களை அனுப்பி வைத்தனர். சீனாவிலிருந்தும் தமிழகத்திற்குத் தூதுவர்கள் வந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் வாணிபம் பெருகியது. அரசியல் வாணிபத் தொடர்புகளால் தமிழ்ப் பண்பாடு சீனாவில் பரவியது. சீனாவில் இந்துக் கோயில்கள் எழுப்பப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. அரேபியர்களிடமிருந்து தமிழர் குதிரைகளை வாங்கினர். கம்போடிய நாட்டு வேந்தன் சூரியவர்மன் (கி.பி. 1002-50) சோழருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டான். தமிழ்ப் பண்பாடு சோழர் காலத்தில் பர்மோசா, கடாரம், சயாம், இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியது.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  சோழப் பேரரசின் துணைத் தலைநகரங்கள் மூன்றினைக் கூறுக.
  2.
  அரசனின் வாய்மொழி ஆணைக்கு என்ன பெயர்?
  3.
  முதலாம் இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
  4.
  உத்திரமேரூர் எத்தனை குடும்புகளைக் கொண்டிருந்தது?
  5.
  உத்திரமேரூர் ஊர்ச்சபைக்கு உறுப்பினர்கள் எம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
  6.
  காணிக்கடன் என்பது என்ன?
  7.
  நிலவரி அல்லாத பிறவரிகள் எவ்வாறு கூறப்பட்டன?
  8.
  தசபந்தம் -இது எதற்கான வரி?
  9.
  படைகள் தங்கியிருந்த தண்டுகளுக்கு வழங்கிய பெயர் யாது?
  10.
  முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின்போது வலங்கை-இடங்கைப் பிரிவினரிடையே கலகம் நடைபெற்ற ஊர் எது?.
புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 16:44:06(இந்திய நேரம்)