Primary tabs
1.4 அறப்பணிகள்
பிற்காலப் பாண்டியர்கள் இறைநலமும், மக்கள் நலமும் வேண்டித் தங்கள் ஆட்சியின்போது பல்வேறு அறப்பணிகள் செய்துள்ளனர்.
முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் பல சிற்றூர்களை இணைத்து, அதற்குச் சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு ஆயிரத்து முப்பது அந்தணர்களுக்குப் பிரமதேயமாகவும், திருப்புவனத்துக் கோயிலுக்குத் தேவதானமாகவும் வழங்கினான். கோயில்களில் நாள் வழிபாடு நடத்த மானியங்கள் வழங்கினான். இப்பாண்டியன் துணைவியார் தரணி முழுதுடையாள் என்பவள் அழகர் மலையின் உச்சியில் மலர்ச்சோலை ஒன்றை அமைத்துப் பராமரித்தாள். இவனது உடன் பிறந்தவனான சேர இளங்கோவும் பாண்டிய நாட்டுக் கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். மற்றொரு உடன்பிறந்தவன் சேத்தூரில் (இராமநாதபுரம் மாவட்டம்) விஷ்ணுவுக்குக் கோயில் ஒன்றை எழுப்பினான்.
குலசேகரபாண்டியன் மக்கள் நலம் பேணும் திட்டங்களில் அக்கறை கொண்டவன். இவன் நீர்நிலைகளைப் பெருக்கியதுடன் வேளாண்மையையும் விரிவுபடுத்தினான். இவன் வெட்டிய குளம் ஒன்றுக்குத் தனது பெயரையிட்டான். வைகையாற்றினின்று கால்வாய் ஒன்றை வெட்டிப் பல ஊர்களுக்குப் பாசனவசதி அளித்தான்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இவன் மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் (மீனாட்சியம்மன் கோயில்) உள்ள ஒன்பது நிலைக் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினான். மேலும் மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயிலையும் கட்டினான். திருவானைக் கோயில் ஜம்புகேசுவரர் ஆலயத்தின் ஏழடுக்குத் திருக்கோபுரத்தைக் கட்டும் பணியை இவன் தொடங்கி வைத்தான்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எங்கும் வெற்றி கொண்டான். இப்புகழ் பெற்ற சுந்தரபாண்டியன் அறப்பணிகள் செய்வதிலும் நிகரற்று விளங்கினான். சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோயில்களுக்கு அறக்கொடைகள் வழங்கினான். தில்லைத் திருக்கோயிலைப் பொன்னால் வேய்ந்தான். சிதம்பரத்து விஷ்ணு கோயிலுக்கும் சிவன் கோயிலுக்கும் காணிக்கைகள் வழங்கினான். சிதம்பரம் ஆலயத்திலுள்ள சுந்தரபாண்டியன் கோபுரத்தை இவன் கட்டினான்.
திருவரங்கம் கோயிலையும் பொன் வேய்ந்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெருமையுற்றான். அந்த ஆலயத்திற்குப் பொன்னும், பொருளும் நிவந்தங்களும் அளித்துப் புகழ் பெற்றான்.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஆலயத்திலும் திருப்பணிகள் செய்தான். திருப்பதி மலை உச்சியில் அமைந்திருக்கும் வெங்கடேசுவரர் ஆலயத்தில் பொற்கலசம் ஒன்று நிறுவினான். மதுரையம்பதி அழகர் கோயில் விஷ்ணு ஆலயத்தில் மண்டபம் ஒன்றைக் கட்டினான். திருவானைக்கா கோயிலில் திருவிழாக்கள் நடத்த நிவந்தம் அளித்தான். திருவைகுண்டத்து விஷ்ணு கோயிலில் உள்ள சுந்தரபாண்டிய கோபுரம் இவன் கட்டியதாகக் கருதப்படுகின்றது.