தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- அயலவர் குறிப்பு

  • 1.6 அயலவர் குறிப்பு

    மார்க்கோ போலோ மற்றும் வாசாப் போன்றோர் பாண்டிய நாட்டினைப் பற்றி விரிவாகத் தங்களது குறிப்பில் எடுத்துக் கூறியுள்ளனர்.

    1.6.1 மார்க்கோ போலோ

    வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ என்பவன் முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டுக்கு வந்து சுற்றுப்பயணம் செய்து, தன் நூலில் அந்நாட்டைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்துள்ளான். பாண்டிய நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன் சொண்டர் பாண்டிடாவர் (சுந்தரபாண்டி தேவர்) என்பவன் முடிசூடிய மன்னன் என்றும், பாண்டி நாட்டில் மிகப்பெரிய வனப்பு மிக்க முத்துகள் கிடைத்தன என்றும், தாமிரவருணியின் கூடல் முகத்தில் இருக்கும் காயல்பட்டினம் மிகப்பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன், அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பல பண்டங்களையும் ஏற்றிக் கொண்டு வந்த மரக்கலங்கள் அனைத்தும் காயலுக்கு வந்துதான் போகின்றன என்றும், காயல்பட்டினத்தில் வாணிபம் செழித்தோங்கி நடைபெற்று வந்தது என்றும், பாண்டிய மன்னனிடம் அளவு கடந்த பொன்னும் மணியும் குவிந்து கிடந்தன என்றும், அவன் அயல்நாட்டு வாணிகரிடம் மிகுதியும் கண்ணோட்டம் உடையவன் என்றும் மார்க்கோ போலோ கூறுகின்றார். மேலும், பாண்டிய மன்னனுக்கு ஐந்நூறு மனைவியர் இருந்தனர் என்றும், குடிமக்கள் மேலாடை இன்றியே உலவி வந்தனர் என்றும், உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கும் காணப்பட்டது என்றும், சகுனங்களிலும் சோதிடத்திலும் மக்களுக்கு நம்பிக்கை இருந்துவந்தது என்றும், கோயில்களில் தேவரடியார்கள் தொண்டு புரிந்துவந்தனர் என்றும் அவர் கூறுகின்றார்.

    1.6.2 வாசாப்

    வாசாப் என்பார் பாரசீக நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆவார். இவரும் முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சியின்போது பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தவர் ஆவார். இவர் தரும் செய்திகள் மிகவும் சிறப்பானவை. அவர் கூறுவதாவது: “மலைகள் போன்ற மிகப் பெருங்கப்பல்கள் கடல் மேல் காற்றெனும் சிறகுகளை விரித்து, பாண்டி நாட்டுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இவை சீனம், கான்டன், இந்து, சிந்து ஆகிய இடங்களிலிருந்து அரிய பண்டங்களை ஏற்றிக்கொண்டு வந்து குவிக்கின்றன; பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள், துருக்கி, ஈராக், குராசான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள், பாண்டி நாட்டினின்றும் பெற்றவையாம். காலேஸ் தேவருடைய (மாறவர்மன் குலசேகரபாண்டியன்) ஆட்சியும், நாட்டு வளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சிக் காலத்தில் அந்நிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலன். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடி பொன் சேர்ப்புக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி முத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்குக் குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்குச் சொற்கள் இல”.

    பாண்டிய மன்னன் ஒருவனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர் என்றும், சுங்க அமைச்சர் பொறுப்பு அப்துல் ரஹிமான் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் முஸ்லீம் வரலாறுகள் கூறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:35:15(இந்திய நேரம்)