Primary tabs
-
6.1 மராட்டியர் ஆட்சியின் தோற்றம்
தஞ்சையை ஆட்சி புரிந்துவந்த விசயராகவ நாயக்கருக்கும் (கி.பி.1631-1675) மதுரையை ஆட்சி புரிந்துவந்த சொக்கநாத நாயக்கருக்கும் (கி.பி.1659-1682) பகைமை இருந்துவந்தது. ஒரு சமயம் சொக்கநாத நாயக்கர், விசயராகவ நாயக்கரின் மகளைத் தமக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்டார். ஆனால் விசயராகவ நாயக்கர் தம் மகளைத் தர மறுத்துவிட்டார். எனவே சொக்கநாத நாயக்கர் கி.பி.1673இல் தஞ்சையின் மீது போர் தொடுத்தார். விசயராகவ நாயக்கரால் மதுரைப் படையை வெல்லமுடியவில்லை. எனவே அந்தப்புரத்தை வெடிவைத்துத் தகர்க்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்து செய்தார். இறுதிவரை அவர் பணியவில்லை. தம் மகளுடன் உயிர் நீத்தார். எனினும் விசயராகவருடைய மாதேவியருள் ஒருவர் தன் மகன் செங்கமலதாசு என்னும் சிறுவனை ஒரு தாதியிடம் கொடுத்துத் தப்பி ஓடுமாறு செய்தார். செங்கமலதாசு நாகப்பட்டினத்தில் ஒரு வாணிகனிடத்தில் வளர்ந்து வரலானான்.
தஞ்சை நாயக்கர் இறந்ததும், மதுரைச் சொக்கநாத நாயக்கர் தனது சிற்றன்னை மகனும், தனது தம்பியுமாகிய அழகிரி நாயக்கர் என்பவரைத் தம்முடைய சார்பாகத் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்து வருமாறு அனுப்பினார். சில ஆண்டுகள் மதுரைக்கு அடங்கி ஆண்டுவந்த அழகிரி நாயக்கர், தாமே சுயேச்சையாகத் தஞ்சையை ஆளத் தொடங்கினார். விசயராகவ நாயக்கரிடம் பணிசெய்த வெங்கண்ணா என்பவர் அழகிரி நாயக்கருக்கும் இராயசமாய் (செயலாளராய்) இருந்து வந்தார். இவர் தஞ்சையைச் சுயேச்சையாக ஆளத் தொடங்கிய அழகிரி நாயக்கருக்கு ஆதரவாக இருந்தார். இதற்குக் கைம்மாறாக அழகிரி நாயக்கரின் புதிய ஆட்சியில் தமக்கு மேலான அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படிப்பட்ட பதவி கிடைக்கப் பெறவில்லை. எனவே வெங்கண்ணா வெறுப்படைந்து அழகிரி நாயக்கரை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.
விசயராகவ நாயக்கரின் மகன் செங்கமலதாசு நாகப்பட்டினத்தில் வளர்ந்து வருவதை வெங்கண்ணா அறிந்தார். அழகிரி நாயக்கரை நீக்கிவிட்டுச் செங்கமலதாசைத் தஞ்சை அரசனாக ஆக்க நினைத்தார். நாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து செங்கமலதாசை அழைத்துக் கொண்டு பீஜப்பூரை ஆண்டு வந்த சுல்தான் அடில்ஷா என்பவனிடம் சென்றார். (பீஜப்பூர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு வடமேற்கே 530கி.மீ தொலைவில் உள்ளது.) ‘செங்கமலதாசு முந்தைய தஞ்சை நாயக்கரின் மகனாவான்; இவனைத் தஞ்சை அரசனாக்க வேண்டும்’ என்று அவனிடம் வேண்டினார். பீஜப்பூர் சுல்தான் செங்கமலதாசை அரசனாக்க ஒப்புக் கொண்டான். அவன் தன்னுடைய படைத்தலைவர் ஏகோஜி என்பவரைப் படை ஒன்றுடன் அனுப்பி வைத்தான்.
பீஜப்பூர் சுல்தானின் பெரும்படைக்குத் தலைமை தாங்கிய ஏகோஜி தஞ்சை நோக்கி வந்தார். இதை அறிந்த அழகிரி நாயக்கர் சொக்கநாதரின் உதவியை நாடினார். அவரது முந்தைய துரோகச் செயல் காரணமாகச் சொக்கநாதர் அவருக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். தஞ்சைக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை என்னும் இடத்தில் நடந்தபோரில் அழகிரி நாயக்கரை ஏகோஜி தோற்கடித்தார். போரில் வெற்றி பெற்ற ஏகோஜி செங்கமலதாசைத் தஞ்சைக்கு அரசன் ஆக்கினார். பின்பு தனது படைகளின் செலவுக்காகப் பெருந்தொகை ஒன்றை அவனிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டு கும்பகோணத்தில் சென்று தங்கினார்.
செங்கமலதாசு தன்னை அரசனாக்கப் பாடுபட்ட வெங்கண்ணாவைப் புறக்கணித்து, நாகப்பட்டினத்தில் தனக்கு ஆதரவளித்த வணிகக் குடும்பத்தாரை அமைச்சராகவும் படைத்தலைவராகவும் ஆக்கினான். இதனால் ஏமாற்றம் அடைந்த வெங்கண்ணா செங்கமலதாசுக்குப் பாடம் கற்பிக்க நினைத்து, கும்பகோணத்தில் இருந்த ஏகோஜியிடம் சென்று தஞ்சையைக் கைப்பற்றி அதன் ஆட்சிப் பீடத்தில் ஏறுமாறு அவரை வேண்டினார். ஏகோஜி பீஜப்பூர் சுல்தானுக்கு அஞ்சி முதலில் மறுத்தார். பின்பு சில நாட்கள் கழித்து, பீஜப்பூர் சுல்தான் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அச்சம் தெளிந்தார். வெங்கண்ணாவின் ஒத்துழைப்போடு சென்று செங்கமலதாசை வென்று தஞ்சையைக் கைப்பற்றி அதன் அரியணையில் ஏறி அமர்ந்தார். இது கி.பி. 1676இல் நிகழ்ந்தது. இவ்வாறாகத் தஞ்சையில் மராட்டிய அரசினை ஏகோஜி தொடக்கி வைத்தார்.