Primary tabs
பல்லவர்கள் பௌத்தர்களுக்கு நிலக்கொடை தந்ததாக ஒரு குறிப்புக் கூடக் காணப்படவில்லை. சமணர் செல்வாக்கு பல்லவர் ஆட்சியில் நலிவுற்றதே அல்லாமல் அடியோடு அகற்றப்படவில்லை. சைவக் குடும்பத்தில் பிறந்து நாவுக்கரசர் சமண அறநூற்களைக் கற்று, சமணர்களது தலைவராக முடிந்தது. தருமசேனர் என்ற பெயரில் பாதிரிப்புலியூர் சமணப் பள்ளியை இருக்கையாக்கிக் கொண்டு சமணச் சமயப்பணி செய்ய முடிந்தது. தமக்கை திலகவதியாரால் சமணத்தை விடுத்து மீண்டும் சைவர் ஆனார். பல்லவப் பெருவேந்தன் மகேந்திரவர்ம பல்லவனைச் சமணத்திலிருந்து சைவன் ஆக்கினார். சமணர்களின் இருக்கையாகிய பழையாறையில் பூசையற்றிருந்த சிவதளியைக் கண்டு மனம் தாளமாட்டாத வேதனையுடன் அப்பர் உண்ணா நோன்பிருந்து மீட்டார். சம்பந்தர் வாதில் சமணரைத் தோற்கடித்தார். சமய வாதத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்பர். இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரை சமண சமயஞ் சார்ந்ததாக ஒரு புராணமும் வடமொழி மூலத்தைத் தழுவிய ஒரு காப்பியமும் மட்டுமே தமிழில் காணப்படுகின்றன.
கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை ஆகும். இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் பிருகத் கதை. அந்த நூல் தமிழில் பெருங்கதை யாக உருவாயிற்று. கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.
தீவினையாகும் கருமம் தீர்ந்த உயிர் மேலே செல்லும்
(பெருங்கதை, உஞ்சைக் காண்டம் : 40: 186)
அல்லூண் நீத்தல்
(பெருங்கதை, வத்தவ காண்டம் : 4 : 159)
என்பன சமண சமயக் கருத்துகளாம். பெருங்கதை உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்ற ஐந்து பகுதிகளைக் கொண்டது. அகவல் யாப்பில் உள்ளது. இது தொடர்நிலைச் செய்யுள் ஆகும்.
குருகுலத்தவனும், கௌசாம்பி நகரத்து அரசனுமாகிய சதானிகனின் மகன் உதயணன். உதயணனின் நண்பன் யூகி ஆவான். உதயணன் வாசவதத்தை, பதுமாவதி, மானனீகை ஆகிய பெண்களை மணந்து இறுதியில் துறவு பூணுவதாகக் கதை முடிகிறது.
தெய்வம் பேணல், ஊழ்வினையின் வன்மை, கல்வியின் பெருமை, நட்பின் திறம், காலம் இடம் ஆகியவை அறிந்து செயல்படுதல், பெண் கல்விச் சிறப்பு, செய்நன்றி அறிதல், ஆசிரியர் மாணவரது இலக்கணங்கள், மந்திரிகளின் இயல்பு, துறந்தோர் பெருமை முதலிய பல குறிப்புகள் இந்நூலில் உள்ளன. பெருங்கதைப் பாடல்கள் நயமிகுந்தவை. இந்நூலின் கதை திருமங்கை ஆழ்வாராலும், சீத்தலைச் சாத்தனாராலும் எடுத்தாளப்பட்டு உள்ளது. சிலப்பதிகார உரைப் பாயிரத்துள் அடியார்க்கு நல்லார் இதனைக் குறிப்பிடுவார். இந்நூல் பகுதிகள் பல எடுத்தாளப்பட்டிருத்தலால் இந்நூல் அதிக வரவேற்புப் பெற்றிருந்தமையை உணரலாம்.
கங்க மன்னர்கள் சமணத்தை ஆதரித்தவர்கள். துர்விநீதன் எனும் கங்க மன்னன் கி.பி.550 முதல் 600 வரை ஆண்டான். அவன் ‘பிருகத் கதை' யை வடமொழியில் மொழிபெயர்த்தான் என்பர். கொங்குவேளிர் எழுதிய, ‘பெருங்கதை' துர்விநீதனின் மொழி பெயர்ப்பைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருக்கலாம் என்பர் ஈ.எஸ்.வரதராச அய்யர்.
சமணர் செய்த புராணங்களில் ஒன்று மேருமந்தர புராணம் என்பது. புராணம் என்றால் பழமை என்பது பொருள். மேரு, மந்தரன் எனும் இருவரது வரலாற்றை கூறும் நூல் மேருமந்தர புராணம் ஆகும். இதன் ஆசிரியர் வாமன முனிவர். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொருவரும் தத்தம் வினைப்பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பதை நல்ல தமிழில் இந்நூல் அறிவுறுத்தக் காணலாம்.