Primary tabs
கி.பி.700 முதல் 800 வரை தஞ்சையை முத்தரையர்கள் ஆண்டனர். இந்நூற்றாண்டில் சிறப்புடன் திகழ்ந்த முத்தரைய மன்னன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன். அவன் புலவர் பலரை ஆதரித்தான். அவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன் (2) ஆசாரியர் அநிருத்தர் (3) கோட்டாற்று இளம்பெருமானார் (4) குவாவங் காஞ்சன் ஆகியோர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளன. அவற்றிலிருந்து இம்மன்னன் அழுந்தியூர், மணலூர், கொடும்பாளூர், காரை, கண்ணனூர், அண்ணல் வாயில் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்று தெரிகிறது.
இந்நால்வரும் இந்நூற்றாண்டினர். என்றாலும் இவர்கள் என்னென்ன நூல்களைப் பாடினர் என்பது தெரியவில்லை. வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் இரு வடிவங்களில் பாக்கள் இவர்களால் ஆக்கப்பட்டு, கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் அகவல் பா பெரிதும் கையாளப்பட்டது. கலிப்பா ஓரளவு பயன்படுத்தப்பட்டது. வெண்பா அருகியே வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப் புலவர் தமிழகத்தில் குடிபுகுந்து வடமொழியில் எழுதினர். வடமொழியின் செய்யுள் இலக்கண அமைதிகள் தமிழில் கலந்ததன் விளைவாக, ‘விருத்தம்' முதலிய வடிவங்கள் தோன்றின. வடமொழியும் தமிழும் கலந்த ‘மணிப்பிரவாளம்' எனும் கலப்புநடை உருவானது. சொற்களுக்கான பொருளை அறிந்து கொள்ளுவதற்கான நிகண்டு முதலிய கருவி நூல்கள் தோன்றின.
பாண்டிய அரசன் நெடுமாறனைப் புகழ்ந்து எழுதப்பட்ட நூல். 200 பாடல்களைக் கொண்டது. இப்பாடல்கள் இலக்கண நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டவை. நூலாசிரியர் யார் என்பது தெரியவில்லை. பல செய்யுள்களைத் தொடர்பு உடையனவாகக் கோத்தல் கோவை எனப்படும். காதலர் இருவரது காதல் உணர்வுகளையும், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகும் நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறு போல் படிப்படியாக ஒரே வகையான செய்யுள்களால் பாடுவது கோவை நூலின் அமைப்பு முறையாகும். நானூறு காதல் துறைகள் பற்றி நானூறு செய்யுட்களால் பாடப்படும். காதலர்கள் கற்பனைக் காதலர்களே. காதலர்கள் சந்தித்த இடம், பழகிய சோலை ஆகியவை பற்றிச் சொல்லும் போதும், உவமைகளைக் கூறும்போதும் ஓர் அரசனையோ, வள்ளலையோ,தெய்வத்தையோ புகழ்ந்து பாடுவது உண்டு. பாண்டிக் கோவையில், ‘பாண்டியன் நெடுமாறனின் வீரம், கொடை, போர்க்கள வெற்றிகள் முதலியவை புகழப்பட்டுள்ளன. இந்நூலைப் பின்பற்றிப் பிற்காலத்தில் கோவை நூல்கள் பல எழுந்தன.
இறையனார் என்னும் புலவர் செய்த நூல். அகவல் யாப்பில் அறுபது பாடல்களைக் கொண்டது. அகப்பொருளின் இலக்கணம் கூறுவது. களவு, கற்பு எனும் இருபொருள் பற்றி அமைந்துள்ளது. சிறப்பு பற்றி, இறையனார் களவியல் என்றே அழைக்கப்படுகிறது. உரைநூலில் இந்தப் பெயரே இடம் பெற்றுள்ளது. பிற்காலத்தில் வந்தவர்கள், இறையனார் என்னும் பெயர் காரணமாக இது 'சிவபெருமான் செய்த இலக்கணநூல்' என்று சொல்லத் தொடங்கினர் எனலாம்.
தமிழில் தோன்றிய உரைநூல்களில் இறையனார் களவியல் உரையே முதலாவதாகக் கருதப்படுகிறது. உரை காப்பிய இன்பம் தருவது. அக்காலத் தமிழை நினைத்து ஆசிரியர்கள் இந்த உரையை நன்கு படித்துத் தேர்ச்சி பெற்ற பின்னரே பிறநூல்களுக்கு உரை எழுதத் தொடங்கினர். அவ்வகையில் இவ்வுரை நூலின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது.