தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்புலங்கள்

  • 6.1 பின்புலங்கள்

    பத்தாம் நூற்றாண்டில் வெளிவந்த இலக்கியங்களுக்கு அக்காலக் கட்டத்திலுள்ள அரசியல், சமூக, சமய சூழல்களும் காரணங்களாக அமைந்திருந்தன.

    6.1.1 அரசியல் பின்புலம்

    பல்லவரும் பாண்டியரும் நலிவுற்றுச் சோழர் பொலிவு பெற்ற காலம் இது. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) பல்லவ மன்னன் அபராசிதவர்மனிடம் இருந்து தஞ்சையைப் பெற்றான். பல்லவனது இறப்புக்குப் பின் தொண்டை மண்டலமும் சோழனது ஆட்சியின் கீழ் வந்தது. கொங்கு நாட்டையும் இவன் வென்றான். இவனது மகன் முதலாம் பராந்தக சோழன் (907-955) மதுரையை வென்று, ‘மதுரை கொண்டான்' என்று பட்டம் பெற்றான். கி.பி.915இல் வெள்ளூரில் நடந்த போரில், பாண்டிய-சிங்களக் கூட்டுப் படையை வென்று, ‘மதுரையும் ஈழமும் கொண்டான்' எனப் பெயர் பெற்றான். இவனது ஆட்சி வடபெண்ணாறு முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது. அரக்கோணத்திற்கு ஆறுமைல் தென்கிழக்கில் உள்ள, தக்கோலம் என்ற இடத்தில் கி.பி.949இல் பராந்தக சோழனுக்கும், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் நடந்த போரில் சோழனது மகன் இராசாதித்த சோழன் இறந்து விடுகிறான். தொண்டை மண்டலத்தைச் சோழர் இழந்தனர். கச்சியும், தஞ்சையும் கொண்ட காவலன் என்று மூன்றாம் கிருஷ்ணன் பெயர் பெற்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மற்றும் ஆனைமங்கலச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. இது சோழருக்கு நேரிட்ட பின்னடைவு ஆகும்.

    பராந்தக சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்த சோழன் (953 - 957) சோழ மண்டலத்தில் மட்டுமே நிலைத்திருந்த அரசை ஆண்டான். இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன் (கி.பி.957-970) கி.பி.962இல் சேவூரில் பாண்டியரை வென்றான். ‘பரகேசரி' என்றும் ‘பாண்டியரைச் சுரம் இறக்கின பெருமாள்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளான். பரகேசரி உத்தம சோழன் (937-985) இறந்தபின் அரியணை ஏறிய முதலாம் இராசராசன் (கி.பி.985-1014) கி.பி988இல் திருவனந்தபுரத்தில் காந்தளூர்ச்சாலையில் சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனை வென்றமை, ‘காந்தளூர்ச் சாலை களம் அறுத்தருளி' என்று குறிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து இலங்கைமீது படையெடுத்து வென்றான். அரபிக்கடலில் உள்ள முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தைக் (மாலத்தீவுகள்) கைப்பற்றினான். கல்யாணிச் சாளுக்கியரை வென்றான். வேங்கிச் சாளுக்கியரை வென்று, நந்திவர்மனை அரியணையில் அமர்த்தி, அவரது இளவல் விக்கிரமாதித்தனுக்குத் தனது மகள் குந்தவையை மணமுடித்துத் தந்தான். வலிய தரைப்படை மற்றும் கடற்படையின் மூலம் இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவில் வலிமை மிக்க சோழப் பேரரசை அமைத்தான். இந்திய வரலாற்றில், ‘Rajaraja the great' என்று சிறப்பிக்கப்படும் சோழப் பேரரசர் இவரே ஆவார்.

    6.1.2 சமூகப் பின்புலம்

    முதலாம் பராந்தகன் (907-950) சிவாலயங்களை எழுப்பினான். பிராமணர்க்குத் தானங்கள் பல செய்து உள்ளான். வேளாண்மை விரிவடைய நீர்நிலைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினான். உள்ளாட்சி முறையையும் சீர்படுத்தினான் என்று உத்திரமேரூர்ச் சாசனம் கூறுகிறது. இரண்டாம் பராந்தகனின் (957-973) அறப்பணிகளையும் வேளாண்மை முன்னேற்றப் பணிகளையும் வரலாற்று அறிஞர்கள் பாராட்டுகின்றனர். உத்தம சோழன் காலத்தில் குவலாலயத்தைச் (கோலார்) சேர்ந்த அம்பலவன் பழுவூர்நக்கன் என்ற உயர் அதிகாரி திறமைக்காகப் பாராட்டப்பட்டுள்ளான். சோழர்கள் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தனர். அதிகாரம் அரசர் கையில் இருந்தது. மன்னரும் வேதியரும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர். தன்னாட்சி மிக்க கிராம நிர்வாகத்தைத் தோற்றுவித்து ஒரு புதுமையான ஆட்சிமுறையைப் பின்பற்றினர். மத்தியில் முழு அதிகாரத்தையும், ஊர்களில் மக்களாட்சிப் பண்புடைய கிராம சுய ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது ஒரு சிறந்த முறை ஆகும். சோழர்கள் காலத்தில் சிறந்த அதிகாரிகள் பட்டங்களும், நிலதானங்களும் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். எனினும் பல்லவர் காலத்தைப் போன்று சோழர் காலத்திலும் சாதாரண மக்கள் தாழ்வாகவே நடத்தப்பட்டனர்.

    வணிகர்களது குடியிருப்புகள், ‘நகரங்கள்' எனப்பட்டன. வேதியர்களுக்கு இறையிலியாக மன்னர்கள் வழங்கிய குடியிருப்புகள் ‘கிராமங்கள்' எனப்பட்டன. செழிப்பான ஆற்றுப்படுகைகளில் கிராமங்கள் இருந்தன. ஏனையோர் வாழ்ந்த குடியிருப்புகள் ‘ஊர்' எனப்பட்டன. ஊர்களிலும் நிர்வாகக் குழு இருந்தது. ஆனால் கிராமங்கள் பெற்ற சலுகைகளைச் சோழர் காலத்து ஊர்கள் பெறவில்லை. ‘ஊரை இசைந்து ஊரோம்', ‘சபையோமும் ஊரோமும் ஆக இருதிறத்தோம்' என்று கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சோழர் காலத்தில் தஞ்சை, காஞ்சி, மதுரை போன்ற மாநகரங்கள் இருந்தன. நால்வகைச் சாதி பாகுபாடு நடைமுறையில் இருந்தது.

    சமூக மாற்றம்

    சோழர் காலத்தில் இடைவிடாப் போர்களின் விளைவாகப் போர் அடிமைகள் குவிந்தனர். கி.பி.பத்தாம் நூற்றாண்டில் திருச்சி வயலூர் திருக்கற்றளிப் பரமேசுவரர் கோவிலுக்குப் பணிப்பெண்களை அடிமைகளாக அளித்த நிகழ்ச்சி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1000இல் மீவைப் பெண்கள் 12 பேர் தங்களைச் செங்கற்பட்டு மாவட்டம் திருப்படந்தை கோயிலுக்கு வறுமையின் காரணமாக அடிமைகளாக விற்றுக் கொண்டனர். கி.பி.10ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசு அதிகாரி ஒருவர் திருநெல்வேலி கருங்குளம் வராகதேவர் கோயிலுக்குப் பணியாட்களை அடிமைகளாகத் தானம் செய்துள்ளார். தேவர் அடியார்கள் நிலையான கோவில் அடிமைகளாக்கப்பட்டது சோழர் காலம் முதற்கொண்டே ஆகும். தனி நபர்களாகவும், குடும்பமாகவும், கூட்டமாகவும் விற்கப்படும் நிலை விரிவடைந்தது. குடும்பத்தினர் அடிமையாக்கப்படும்போது பிறக்கவிருக்கும் வாரிசுகள் தலைமுறை காலத்துக்கும் என அடிமைப்படும் நிலை நேரிட்டது.

    மனிதர்களுக்கு ஆட்படுவதைவிட இறைவனுக்கு அடிமைப்படுவது மேல் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக சைவ, வைணவ, சமண, பௌத்த சமயஞ் சார்ந்த நூல்கள் தோன்றின.

    6.1.3 சமயப் பின்புலம்

    சோழ அரசர்கள் சைவ சமயஞ் சார்ந்தவர்களாக இருந்தனர். முதலாம் ஆதித்த சோழன் சைவ சமயத்தொண்டு புரிந்தவன். திருப்புறம்பியத்தில் உள்ள ஆதித்தேச்சுரம் கோயிலும், திருவெறும்பூரில் உள்ள சிவாலயமும் இவனால் கட்டப்பட்டவை ஆகும்.

     இவனது மகன் முதலாம் பராந்தக சோழன் சிதம்பரத்தில் உள்ள நடராசர் ஆலயத்தின் மேற்கூரையைப் பொன்னால் வேயச் செய்தான். தில்லைப்பெருமானிடத்தில் அளவில்லாத ஈடுபாடு உடையவனாக இவனது மகன் கண்டராதித்த சோழன் திகழ்ந்தான். திருவிசைப்பா எனும் பதிகம் கண்டராதித்த சோழன் செய்தது. தமிழ்ப் புலமையும், சிவ பக்தியும் இழையோட யாக்கப்பெற்ற நூல் அதுவாகும். இவனது மறைவிற்குப் பின்னர் இவனது மனைவி செம்பியன் மாதேவி கோவில்களுக்கு அணிகலன்களை வழங்கினார். நிபந்தங்கள் வழங்கினார். பரகேசரி உத்தம சோழன் (973-985) திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபூரில் உள்ள சிவன் கோவிலுக்குப் பல நிபந்தங்களை வழங்கினார். (நிபந்தம்-நிவந்தம் = அறக்கட்டளை)

    முதலாம் இராசராசன் (கி.பி.985-1014) சோழர் குலப் பேரொளியாகத் திகழ்ந்தவர். தஞ்சாவூரில் அவர் இராசராசேசுவரர் ஆலயம் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் (பெருவுடையார் கோயில்) எனும் கோயிலைக் கட்டினார். மிகச் சிறப்பு மிக்க சிவாலயம் அது. எல்லாச் சமயங்களிடமும் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகத் திகழ்ந்தவர். வைணவ சமய வளர்ச்சிக்கு மானியங்கள் அளித்தார். சிங்களத்துச் சைலேந்திர மன்னர் நாகப்பட்டினத்தில் புத்தமடம் கட்ட அனுமதி தந்தார். நம்பியாண்டார் நம்பி என்பவரது உதவியுடன், சைவத் திருமுறைகளைத் தொகுக்கச் செய்தவர் இவரே. கோயில்களில் அவை ஓதப்படுவதற்கு மானியங்கள் நல்கினார். சோழப் பேரரசைத் தென்னிந்தியா முழுவதும் விரிவுபடுத்தி இலங்கையையும் அணைத்துக் கொண்ட பெருமை இவரைச் சாரும்.

    6.1.4 இலக்கியப் பாடுபொருள்

    விசயாலயன் வழிவந்த சோழர்கள் ஆழ்ந்த சிவபக்தர்களாக இருந்தனர். தேவாரத் திருவாசகப் பாடல்களை ஆலயங்களில் ஒலிக்கச் செய்தனர். சைவ சமயஞ்சார்ந்த நூல்கள் எழுந்தன. கோவில்களை எழுப்பிய மன்னர்கள் மடங்களையும் எழுப்பினர். திருவாவடுதுறை மடத்தில் பிராமணர்களுக்கும், தவசிகளுக்கும் உணவு அளித்து, இலக்கணமும், மருத்துவமும் கற்பித்ததாகக் கல்வெட்டுக் குறிப்பு கூறுகிறது. மடங்களுக்கும் கிராமங்கள் தானங்களாகத் தரப்பட்டன. திருமால் அடியவர்கள் வைணவத்தை வளர்த்தனர். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' எனும் பெயரில் தொகுத்தளித்தார். அவற்றுக்குப் பாயிரம் போல் ‘தனியன்கள்' தோன்றின. ஆழ்வார்களின் பெருமைகளையும், பாசுரச் சிறப்புகளையும் போற்றும் வகையில், பின்வந்தவர்கள் பாடிவைத்த தனிச்செய்யுட்கள், ‘தனியன்கள்' என்று அழைக்கப்பட்டன. நாகப்பட்டினம் பௌத்தர்களது இருக்கையாக நீடித்தது. சமணப் பள்ளிகள் பள்ளிச் சந்தங்களால் பொருளாதாரப் பாதுகாவல் பெற்றிருந்தன. அவ்வகையில் சமண, பௌத்த நூல்கள் தோன்றின. அரசனது புகழ் பாடும் ‘மெய்க்கீர்த்தி' எனும் கவிதைகள் தோன்றின.

    பாடுபொருள் மாற்றம்

    கோவில்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய பக்திப் பாடல்கள் மூலம் தலங்கள் தோறும் இலக்கிய, இலக்கண நூல்கள் பெயர்ந்து பரவின. புதிதாக நூலைப் படித்தவர்கள் தாமே முழுமையும் உணர வாய்ப்பில்லையே என வருந்தினர். ‘பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்படவில்லையே' என்று பாண்டியன் வருந்தியதும் (இறையனார் களவியல் உரை), இசை உணர்ந்தாரைக் காணவில்லையே என்று நம்பியாண்டார் நம்பியும், சோழ மன்னனும் வருந்தியதுமான செய்திகள் இலக்கிய இலக்கண விளக்கம் குறைவான ஒரு பொதுநிலையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். தேவாரப் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும்போது, அப்பாடல்களின் பண்களைத் தெரிந்து வகைப்படுத்திக் கொடுப்பவர் யாரும் இல்லை என்று நம்பியாண்டார் நம்பியும், அரசனும் வருந்தினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழியில் வந்த ஒரு பெண் இருப்பதாகவும் அவளைக் கொண்டு இசைவடிவம் காணலாம் என்றும் அசரீரி கேட்டது. அதன்படி தேவாரப் பாடல்கள் தொகுக்கப்பட்டன. இந்நிலையை மாற்ற உரைகள் தோன்றின. சோழப் போரரசர்களின் புகழ் பேசும் தமிழ்நடை சிறந்த கல்வெட்டுக்கள், சாசனக் கவிதைகள், மெய்க்கீர்த்திகள் உருவாக்கப்பட்டன. தலைவனது வரலாற்றைக் கூறும் காப்பியங்கள் இயற்றப்பட்டன. விருத்தப்பா பயிலத் தொடங்கியது இக்காலத்தில்தான். சைவ, வைணவ, சமண, பௌத்தச் சமயத்தினர் செய்த இலக்கியங்கள் அணி செய்கின்றன.

    மொத்தத்தில், ‘தமிழ்நாட்டின் பொற்காலம்' என்று அறிஞர்கள் போற்றும் 12ஆம் நூற்றாண்டின் இலக்கியச் சிறப்புகளுக்கு நுழைவாயிலாகப் பத்தாம் நூற்றாண்டு அமைந்தது எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 10:15:55(இந்திய நேரம்)