தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வைணவ இலக்கியம்

  • 6.4 வைணவ இலக்கியம்

    பத்தாம் நூற்றாண்டில் எந்தத் தமிழ்நூலும் வைணவத்தில் தோன்றவில்லை. சோழ அரசர்கள் அனைவரும் சைவ சமயத்தினர் என்பது கருதத்தக்கது. சைவர்-வைணவர் போட்டிகள் நடந்தன. வீரராசேந்திரன் காலத்திலும், அதிராசேந்திரன் காலத்திலும் வைணவர் கலகம் நடந்துள்ளன. நாதமுனிகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்த த்தைத் தொகுத்தார். நாதமுனியின் சீடர் யமுனாச்சாரியார் விவாதங்களில் ஈடுபட்டு வென்று, ‘ஆளவந்தான்' என்று போற்றப்பட்டார்.

    6.4.1 தனியன்கள்

    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களைப் போற்றியும், ஆழ்வார்களைப் போற்றியும் சிலசில தனிப்பாடல்கள் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டன. இலக்கியங்களுக்கு இவ்வாறு அமையும் சிறப்புப் பாடல்களுக்குப் ‘பாயிரம்' என்று பெயர். அதுபோல் இத்தனிப் பாடல்களை வைணர் தனியன் என்பர். இங்ஙனம் இக்காலக்கட்டத்தில் சுமார் நாற்பதுபேர் தனியன்களைப் பாடியுள்ளனர். சிலர் நன்கு பெயர் தெரிந்தவர்கள். பலர் ஒரே ஒரு தனியன் செய்ததால்மட்டுமே அறியப் படுபவர்கள். அவ்வகையில் இந்த நூற்றாண்டில் வாழ்ந்து தனியன் பாடியவர்கள் பற்றிக் காணலாம்.

    உய்யக்கொண்டார் ‘தனியன்'

    உய்யக்கொண்டார் திருவெள்ளறையில் பிறந்தவர்; நாதமுனிகளின் சீடராக இருந்தவர். ஆண்டாள் பாடிய திருப்பாவைக்குரிய இரண்டு தனியன்களும் உய்யக்கொண்டார் செய்தவை என்பர்.

    எடுத்துக்காட்டாக,

    அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
    பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
    பாடிக் கொடுத்தான் நாற்பாமாலை பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

    மணக்கால் நம்பி தனியன்

    நம்பி மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர். உய்யக்கொண்டாரின் சீடர். அவரிடம் சகல சமய நூல்களையும் கற்றவர். குலசேகர ஆழ்வார் பாசுரங்களாகிய பெருமாள் திருமொழிக்கு இவர் தனியன் பாடினார்.

    பெருமாள் திருமொழிக்குரிய மற்றொரு தனியனை இயற்றியவர் இராமானுஜர் என்பது அறிஞர் பலரின் கருத்து.

    குருகை காவலப்பன் தனியன்

    இவர் நாதமுனிகளின் சீடர். பேயாழ்வாருடைய மூன்றாம் திருவந்தாதி க்கு உரிய தனியன் இவர் அருளியது என்பர்.

    சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
    காரார் கருமுகிலைக் காணப்புக்கு -ஓராத்
    திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் சூழலே
    உரைக்கண்டாய் நெஞ்சே யுகந்து.

    ஈசுவரமுனி தனியன்

    ஈசுவரமுனி நாதமுனிவரது புதல்வர் ; ஆளவந்தாருடைய
    தந்தை. இவர் நம்மாழ்வாரது திருவாய்மொழிக்குத் தனியன்
    அருளிச் செய்துள்ளார்.

    திருவழுதி நாடு என்றும் தென்குருகூர் என்றும்
    மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
    அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
    சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

    திருக்கண்ணமங்கையாண்டான் ‘தனியன்'

    நாதமுனியின் சீடர்களில் ஒருவர். ஆண்டாள் அருளிய
    நாச்சியார் திருமொழி க்கான தனியன் இவர் செய்தது.

    அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
    மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
    ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
    வேயர் பயந்த விளக்கு.

    வங்கிபுரத்து ஆய்ச்சி தனியன்

    மணக்கால் நம்பியின் சீடர்களில் ஒருவர். கலிப்பாட்டாக ஒரு நீண்டபாடல் செய்துள்ளார். அதில் ஆழ்வார்களைக் குறிப்பிட்டு, திருமாலின் தலங்கள் நூற்றெட்டினையும் குறிப்பிடுகிறார். இந்நூலின் இறுதிப்பாடல் நூலாசிரியர் வங்கிபுரத்தாய்ச்சி என்று பெயரைக் குறிப்பிடுகிறது.

    நாதமுனிகள் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரமபதம் அடைந்தார். இங்குக் குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    காந்தளூர்ச்சாலை களம் அறுத்தருளி, பாண்டியரைச் சுரம் இறக்கின பெருமாள் ஆகிய சொற்றொடர்கள் புலப்படுத்தும் தரவுகள் எவை?

    2.

    ‘தனியன்', ‘பள்ளிச் சந்தம்', ‘மெய்க்கீர்த்தி' என்றால் என்ன?

    3.

    நக்கீர தேவ நாயனார் பாடிய நூல்களின் பெயர்களைத் தருக.

    4.

    விநாயகக் கடவுளைப் போற்றி எழுந்த முதல் தமிழ்நூல் எது? அதைப் பாடியவர் யார்?

    5.

    பட்டினத்தடிகள் பாடிய நூல்கள் எவை?

    6.

    திருவிசைப்பா பாடியோரது பெயர்களை எழுதுக.

    7.

    தனியன் என்றால் என்ன? இக்காலத்து எழுதப்பட்ட தனியன்கள் மூன்றினைக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 10:33:25(இந்திய நேரம்)