Primary tabs
பத்தாம் நூற்றாண்டில் சோழர் பேரரசு வளர்ந்து வருவதும், பிற அரசுகள் யாவும் அதற்கு அடிபணிந்து விட்டதுமான அரசியல் சூழல் இலக்கிய ஆக்கத்திற்கு உகந்ததாக அமைந்தது. காப்பியம், இலக்கிய, இலக்கண சமயஞ்சார்ந்த நூல்கள் எழத் தொடங்கின.
காப்பிய நூல்கள்
காப்பியத் துறையில் பத்தாம் நூற்றாண்டு மிகவும் சிறப்புடையது. அது வடமொழியில், ‘காவியம்' என்று அழைக்கப்படும். அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) எனும் உறுதிப்பொருள் நான்கையும் உணர்த்துவது பெருங்காப்பியம் ஆகும். மக்கள் மேல்நிலைக்கு வரத் தூண்டுகோலாக இருக்கும்படி தன்னிகரற்ற தலைவன் ஒருவனின் வரலாற்றை எல்லாக் கவிச்சுவையும் பொருந்துமாறு பாடுவது, பெருங்காப்பியம் என்று நாம் வரையறுக்கலாம். அவ்வகையில் சூளாமணி, நீலகேசி போன்ற நூல்கள் இக்காலத்தில் தோன்றின.
சூளாமணி விரிவான சமண சமயக் காப்பியம் ஆகும். பழங்காலத்து உரையாசிரியர் சீவகசிந்தாமணியிலும் சிறப்பாக இதை மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து இதன் சிறப்புப் புலனாகும். ஆனால் சிந்தாமணி அளவு இந்த நூலைத் தமிழர் விரும்பிப் படித்ததாகத் தெரியவில்லை. சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதிச் சிறப்பித்துள்ளது போல் சூளாமணிக்கு எழுதவில்லை. 1886இல் சி.வை.தாமோதரம் பிள்ளை சூளாமணியைப் பதிப்பித்தார். 1954வரை வேறு பதிப்புகளே வரவில்லை. ஆனால் உ.வே.சாமிநாத அய்யர் சீவகசிந்தாமணியைத் தொடர்ந்து பதிப்பித்துக் கொண்டே இருந்தார். மிகுதியாகப் பயிலப்படாததற்கு இவை காரணங்களாக இருக்கலாம்.
சூளாமணியை அச்சிட்ட தாமோதரம் பிள்ளை இது ஐஞ்சிறுகாப்பியங்களுள் இரண்டாவது என்று ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். சூளாமணியைச் சிறுகாப்பியம் என்பது பிழை. உண்மையில் இது சிந்தாமணி போல் பெருங்காப்பியமே என்பார் மு.அருணாச்சலம் பிள்ளை அவர்கள்.
சூளாமணி, பாயிரம், 12 சருக்கங்கள், 2131 விருத்தப்பாக்கள் கொண்டது. முதல் பாடல் அருகன் துதி ஆகும். இறுதிப்பாடல் ‘செஞ்சொல் புராணத்துறையில் வழி வந்தது இது' என்கிறது. இப்புராணம் சமண மகாபுராணம் போலும். இந்நூலுக்குப் பதிகம் இல்லை.
சூளாமணி என்ற பெயர் இந்த நூலில் நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளதால், அதுவே இந்நூலுக்குப் பெயராயிற்று என்பர். சமண சமயத்து 24 தீர்த்தங்கரர் சரித்திரத்தைக் கூறுவது வடமொழியில் உள்ள ‘மகாபுராணம்' என்ற நூல் ஆகும். சூளாமணி அதிலிருந்து எடுத்து விரித்த நூல் ஆகும். வடமொழி நூலான மகாபுராணம் சமணருக்குச் சூளாமணி. ஆதலால் அதன் ஒரு பகுதியைத் தமிழில் கூறும் இந்த நூலும் அப்பெயரால் அழைக்கப்பட்டது எனலாம். தோலாமொழித் தேவர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார். அவர் ‘சூளாமணி' என்ற பாண்டியன் காலத்தே வாழ்ந்தவர். நூல் அவனது பெயரால் வழங்கப்பட்டது என்றும் சிலர் கூறுகிறார்.
‘தோலாமொழி' என்றால் ‘பொய்யாத வாக்கு' என்று பொருள். தோலா நாவில் (308வது பாடல்) ‘ஆர்க்கும் தோலாதாய்' (பாடல் 1473) என்று இரண்டு இடங்களில் வருகிறது. எனவே அது இவரது சிறப்புப் பெயராக இருக்கலாம். ஸ்ரீவர்த்த தேவர் என்பது இயற்பெயர் என்பர். வடமொழியில் சிறந்த காப்பியமாகத் திகழ்ந்த, ‘சூடாமணி'யை ஸ்ரீவர்த்த தேவர் செய்தார் என்கிறது ஒரு பாடல். ஸ்ரீவர்த்த தேவர் என்ற பெயர் தமிழரால் ‘தோலாமொழித் தேவர்' என்று சிறப்பிக்கப்பட்டிருக்கலாம். சோழரது அவையில் நூலை அரங்கேற்றியதாகப் பாயிரம் சொல்கிறது. எனவே இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. சோழரது அடையாளப் பொருட்களை இவரது பாடல் விரித்துக் கூறுவதும் கருதத்தக்கது.
சூளாமணியின் கதை தமிழில் அதிகம் பிரபலம் அடையவில்லை. போதனமா நகரத்தின் அரசன் பயாபதி. அவனுக்கு விசயன், திவிட்டன் என்று இரண்டு மகன்கள். வித்தியாதர அரசன் மகள் சுயம்பிரபை. திவிட்டன் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொல்கிறான். இது கண்டு மகிழ்ந்த வித்தியாதரன் தனது மகள் சுயம்பிரபையைத் திவிட்டனுக்கு மணமுடித்துத் தருகிறான். பொறாமை கொண்ட பகைவேந்தன் அச்சுவகண்டன் படையெடுத்து வரத் திவிட்டன் அவனை அழிக்கிறான். மக்கள் திவிட்டனை வாசுதேவன் என்றும் விசயனைப் பலராமன் என்றும் போற்றி முடிசூட்டினர். உரிய காலத்தில் சுயம்பிரபைக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். அவர்கள் வளர்ந்தபின் சுயம்வரம் நடத்தி முறையாக மணம் செய்விக்கப்பட்டனர். பயாபதி மன்னன் தன் தேவியரோடு துறவு பூண, விசய திவிட்டர் நாட்டை நன்முறையில் ஆட்சி செய்வதாகக் கதை முடிகிறது. ‘அருங்கலம்' என்ற சொல் நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வடசொற்கள் சிறப்பாகத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகேசியின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. ஒரு கற்பனை உலகில் தன் கதாநாயகியை நிறுத்திக் கதையை நடத்திக் கொண்டு போகிறாரே தவிர, தம்மைப் பற்றியோ, தம் இடத்தைப் பற்றியோ, காலத்தைப் பற்றியோ எந்தக் குறிப்பையும் தரவில்லை. காப்பியத் தன்மை சிறிதுமே பொருந்தாத நீலகேசியைச் சிறுகாப்பியம் என்பதுதான் நியாயம் என்பார் மு.அருணாச்சலம். கேசி என்றால் அழகிய கேசத்தை உடையவள் என்று பொருள். நீலகேசி என்பது பெண்பாற் பெயர். ‘நீலகேசித் திரட்டு' என்றும், ‘நீலகேசித் தெருட்டு' என்றும் வழங்குவது உண்டு. நீலகேசி பாயிரமும், பத்துச் சருக்கங்களும், 894 பாடல்களும் உடையது. உரைகாரர் ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும், நீலகேசித் திரட்டு என்றே கூறுகிறார்.
நீலகேசித் திரட்டு - நீலகேசி செய்த வாதங்களின் திரட்டு
நீலகேசித் தெருட்டு - நீலகேசி வாதம் செய்து அறிவைத் தெருட்டியது
என்று பொருள்படும். யாப்பருங்கல விருத்தி 2 இடங்களில், ‘நீலகேசி' என்றே குறிப்பிட்டுள்ளபடியால் ‘நீலகேசி' என்றே கொள்வதற்கு உரியது.
‘நல்லார் வணங்கப்படுவான்' என்ற அருகன் பாடல் முதல் துதி. பாஞ்சால தேசத்தைச் சமுத்திரராசன் ஆள்கிறான். அந்நகரில் பலாலையம் என்ற சுடுகாட்டில் காளி கோவில் இருந்தது. அதில் முனிச்சந்திரன் எனும் சமணமுனிவர் தவம் செய்து வந்தார்.அரசிக்கு ஆண்மகவு பிறந்தது. மக்கள் நன்றி செலுத்தக் காளிக்குஆடுகளைப் பலியிட வருகின்றனர். முனிவர் அகிம்சையைப் போதித்துப் பலியை நிறுத்துகிறார். சினமுற்ற காளி நீலியிடம் முறையிடுகிறது. பழையனூர் நீலி முனிவனை அஞ்சுவிக்க முடியாமல் அழகிய பெண் வடிவில் வந்து மயக்க முயன்று தோற்கிறாள். முனிவனிடம் அகிம்சை உபதேசம் பெற்று, அதைப் பரப்பும் பணி மேற்கொள்ளலானாள். காம்பிலி நகரில், வாதிட்டு அறைகூவி குண்டலகேசி புத்த சமயத்தை நிலைநாட்டி இருந்தாள். நீலகேசி அங்கே சென்று அரசன் முன்னிலையில் குண்டலகேசியின் கூற்றுக்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்று, அவளது ஆசிரியனான அருக்க சந்திரனை உச்சயினியில் வென்று சமணன் ஆக்குகிறாள். பதுமபுரம் சென்று மொக்கலன் எனும் புத்த சமயத்தவனை வென்று சமணன் ஆக்குகிறாள். புத்தனையே வெல்ல எண்ணி, கபிலபுரம் செல்கிறாள். ஆன்மா ஒன்று உண்டு என்பதை நிலைநாட்டி புத்தரை வெற்றி கொள்கிறாள். அகிம்சைக்கு உடன்பட்டாலும் பௌத்தர்கள் புலால் உண்பதைக் கடிகிறாள். பின்னர் நீலகேசி ஆகாய மார்க்கமாகச் சென்று ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதவாதம், பூதவாதம் ஆகிய ஐந்து சமய வேதங்களை வென்று, அரசனாலும் மக்களாலும் நன்கு மதிக்கப்பட்டு சமண சமயத்தை வளர்த்து வந்தாள் என்று நூல் முடிகிறது.
மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு சில நூற்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.
அமிர்தபதி
யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் இதன் பெயரைக் குறிப்பிட்டு, முதல் வரியையும் குறிப்பிட்டுள்ளார். ‘குற்றங்கள் மூன்றும் இலனாய்க் குணங்கட்கு இடனாய்' என்ற வரி அருகனது துதி என்பதால், அமிர்தபதி சமணநூல் எனலாம். “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்றிவற்றின் முதல் பாட்டு வண்ணத்தான் வருவன” என்று எழுதுகிறார் உரைகாரர். இக்காப்பியம் செய்தவர் யார்? இக்காப்பியத்தின் கதை யாது? வரலாறு என்ன என்று எதையும் அறிந்து கொள்ள இயலவில்லை.
நாரத சரிதை
புறத்திரட்டில் இந்த நூல் சொல்லப்பட்டுள்ளது. பெயர் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஸ்ரீபுராணத்தில் நாரதன், பர்வதன் என்ற இருவரது வரலாறு சொல்லப்பட்டுள்ளது. அவ்விருவருள் நாரதன் என்பவன் சரிதத்தை இந்நூல் புனைந்து புராணமாகக் கூறுவது ஆகலாம் என்பது அறிஞர் கருத்து. பெண்ணைப் பழிக்கும் ஒரு பாடல், துறவைப் போற்றும் இரு பாடல்கள், பொதுமகளிர் பற்றி ஒரு பாடல், அரசனது சிறப்பு, அவனது நகரம் பற்றி ஒவ்வொரு பாடல், பிற பாடல்கள் 2 என்று மொத்தம் 8 பாடல்கள் புறத்திரட்டில் இடம்பெற்றுள்ளன. அதை ‘நாரத சரிதை' என்பர்.
மங்கல சரிதை, வாமன சரிதை
‘செய்வித்தானால் பெயர் பெற்றவை பிங்கல சரிதை, வாமன சரிதை' என்று நவநீதப் பாட்டியல் 66ஆம் கலித்துறை உரையில் உரைகாரர் எழுதுகிறார். ஆனால் இந்த நூல்கள் இன்று இல்லை. நூற்பொருள் என்னவென்றும் தெரியாது.
சினேந்திரமாலை எனும் சோதிட நூல்
உபேந்திராச்சாரியார் எனும் சமண மாமுனிவர் செய்தது. சினேந்திர மாலை ஆகும். சிலப்பதிகார அரும்பத உரையில் மேற்கோள் ஆக ஒரு பாடல் தரப்பட்டுள்ளது. “கேவல்ய ஞானம், சினேந்திர மாலை” ஆகிய சொற்கள் உள்ளதால் ஆசிரியர் சமணர் என உணரலாம். ஆனால் சமயக் கலப்பற்றே நூல் செய்யப்பட்டுள்ளது. 464 வெண்பாக்கள் உள்ளன. 23 காண்டங்களாக நூல் அமைந்துள்ளது.
சினேந்திரன் - அருகன், இந்நூலுக்குப் பழைய உரை உண்டு. மரக்கல வரவு பற்றிச் சொல்வதால், சோழமன்னர் கடற்படை வைத்துச் சிறப்புடன் ஆண்ட காலத்தில் வாழ்ந்த புலவர் செய்த நூல் இது எனக் கொள்ளலாம். ‘உபேந்திராச்சாரியார் என்னும் சமண மாமுனிவர் செய்தருளிய சினேந்திரமாலை மூலமும் உரையும் தஞ்சை தி.சாமிநாத சோதிடர் பார்வை' என்ற குறிப்புடன் இந்நூல் பதிக்கப்பட்டுள்ளது.
திரையக் காணம்
யாப்பருங்கல விருத்தி உரையில் இந்த நூல் சொல்லப்பட்டுள்ளது. ‘திரையக் காணம்' என்பதன் திருத்தமான வடிவம் திரேக்காணம் என்பது. இது, ஒரு இராசியில் மூன்றில் ஒரு பாகம் என்று சோதிட நூல்கள் கூறும். முதல் இரண்டு பாடல்கள், பின் இரண்டு பாடல்களில் வெண்பா ஒன்று, சந்த விருத்தம் ஒன்று என்று 4 பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடல்கள் தரும் பொருளில் இருந்து இது சோதிடநூல் என்று மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.