தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-இடைக்காலத்தில் பல்லவர் காலம்

  • 2.1 இடைக்காலத்தில் பல்லவர் காலம்

    சங்க காலத்தையும் நீதி நூல் காலத்தையும் அடுத்து, பக்தி இலக்கியக் காலத்தைத் தெளிவாக உணரலாம். கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சைவ சமயப் பெரியவர்களான நாயன்மார்களும், வைணச் சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றி, பக்திப் பாடல்கள் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள். நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்த, சைன சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப் பாடல்கள் பயன்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியையே போற்றி, அதற்கு இசைவான ஆடல் பாடல் முதலான கலைகளைப் பாராட்டினார்கள். பல வகைக் கலைகளையும் வளர்க்கும் இடமாகக் கோயில்கள் ஓங்குவதற்கு அவர்களுடைய பக்தி இயக்கம் துணை செய்தது. மக்களிடையே அவர்களின் இயக்கம் பரவுவதற்கு இசையோடு அமைந்த தமிழ்ப் பாடல்கள் உதவி புரிந்தன.

    2.1.1 பல்லவர் காலத் தமிழ்மொழி

    இடைக்காலத் தமிழில் முதல் காலப் பகுதியாக விளங்குவது பல்லவர் காலம். அக்காலத் தமிழ் மொழியை அறிவதற்கு இலக்கியங்கள், இலக்கணம், கல்வெட்டுகள், செப்பேடுகள், சாசனங்கள் முதலியன மிகவும் துணை புரிகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றிய காலமும் இதுவேயாகும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

    • சைவ - வைணவ இலக்கியங்கள்

    அ) சைவ நூல்கள்

    தெய்வத் தமிழ் என வழங்கிய பக்தி இலக்கியத்தை வளர்த்த பல்லவர்கள் கி.பி. ஆறு முதல் கி.பி. ஒன்பது வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் தமிழுக்குப் பல சிறப்புகள் வந்து சேரக் காரணமாயிருந்தனர். இவர்கள் காலத்தில்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தி இலக்கியங்களைப் பாடிப் பரப்பினர்.

    ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், பிற நாயன்மார்களும் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. தமிழ்நாட்டின் பல சிவன் கோயில்கள் இவர்களின் பாடல் பெற்ற இடங்களாக உள்ளன. மறைந்த பாடல்கள் போக, இப்போது உள்ள இவர்தம் பாடல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஏழாயிரம் இருக்கும். அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் பாடல்கள் ஆயிரம் ஆகும். இந்த மூன்று நாயன்மார்களின் பாடல்கள் எண்ணாயிரமும் தேவாரம் என்ற பெயரால் சிறந்த பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. எட்டாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய பக்திப் பாடல்கள் திருவாசகம் எனப்படும். திருக்கோவையாரும் இவர் தம் நூலேயாகும். இவையிரண்டுமாக 1050 பாடல்கள் தமிழ்மொழிக்குக் கிடைத்த களஞ்சியம் எனலாம்.

    இவை தவிர, பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்ட தனியடியார்கள் பலர் பாடிய பாடல்களும், பக்தி இலக்கியக் காலத்தில் சைவத்தை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்மொழி வளரவும் பெருந்துணை புரிந்தன எனலாம்.

    ஆ) வைணவ நூல்கள்

    ஆழ்வார்கள் பன்னிருவர் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூல் தொகுதியைப் பல்லவர் காலத் தமிழ்மொழியை அறிய உதவும் மற்றோர் ஆதாரமாகக் கொள்ள முடியும். எளிய தமிழ் உருவாக இந்நூல்கள் காரணமாக அமைந்தன என்றும் கூறலாம்.

    சங்கம் மருவிய காலத்தை அடுத்த இருண்ட காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது. களப்பிரர் ஆட்சி அகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோல் ஓச்சிய போது, சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.

    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய பன்னிருவர் இயற்றிய இலக்கியங்களும் தமிழ் மொழியின் வளர்ச்சியை நன்கு உணர்ந்து கொள்ளும் சான்றுகளாக விளங்குகின்றன.

    பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட அவிநயம், யாப்பருங்கல விருத்தி ஆகிய இலக்கண நூல்களும் இலக்கண அமைப்பினை அறிந்து கொள்ளச் சிறப்பாக உதவுகின்றன.

    • பிற சான்றுகள்

    பல்லவர் காலத் தமிழ்மொழியை ஆராயக் கல்வெட்டுகளே நமக்குக் கிட்டியுள்ள மூலாதாரங்களாகும். பல்லவர் காலத்தில் தோன்றிய கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. ஆதிபல்லவ சாசனங்களில் பிராமியும் தமிழும் தழுவித் தோன்றிய கிரந்த எழுத்துகளும் உள்ளன. இக்கல்வெட்டுகள் எல்லாம் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பேச்சு மொழியின் சாயலையும் நன்கு உணர்த்துவனவாக உள்ளன.

    இலக்கிய மொழிக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் மொழிக்கும் இடையே பல வேற்றுமைகள் உண்டு. இலக்கிய மொழியில் ஏறாத பல பேச்சு வழக்குகள் கல்வெட்டு மொழியில் ஏறியிருக்கக் காணலாம். எனவே இவற்றை ஆராய்ந்தால் அவ்வக் கால மக்கள்தம் பேச்சு மொழியினை நன்கு அறிய முடியும்.

    கல்வெட்டுகள் தவிரப் பாகூர்ச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேள்விக்குடிச் சாசனம் போன்ற பல செப்பேடுகளும், சாசனங்கள், ஆவணங்கள் ஆகியனவும் பல்லவர் காலத் தமிழ் மொழியின் அமைப்பை விளக்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 18:44:16(இந்திய நேரம்)