தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லாட்சி மாற்றங்கள்

  • 2.4 சொல்லாட்சி மாற்றங்கள்

    பல்லவர் காலப் பக்தி இலக்கியங்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்துள்ளதைக் காண முடிகிறது. பல்லவர் காலக் கல்வெட்டுகள் கிரந்தம், வடமொழி போன்றவற்றில் எழுதப்பட்டமை இங்குக் குறிப்பிடத்தக்கது. தேவாரம் போன்றவற்றில் வடமொழிச் சொற்கள் ஓரளவு தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

    hasta
    >
    attam
    கை
    hastin
    >
    atti
    யானை
    mukti
    >
    mutti
    முத்தி
    vrata
    >
    viratam
    விரதம்

    மேலும் சொற்பொருளில் மாற்றமும் புதிய சொல்லாட்சியும் ஏற்பட்டன.

    2.4.1 சொற்பொருள் மாற்றம்

    சமயத் தொடர்பான வடமொழிச் சொற்கள் இலக்கிய வழக்கில் நிறைய வந்துள்ளன. பாதம், ஈஸ்வரன், தீர்த்தம், உதரம், பூசை, நாதன், அச்சுதன், லோகம் போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் வழங்கத் தொடங்கி விட்டன.

    சங்க காலத்தில் சமயச் சார்பற்ற பொருளில் கையாளப்பட்ட சொற்களும் சமயப் பொருள் பெற்றுவிட்டன.

    சொல்
    சங்க காலப் பொருள்
    பல்லவர் காலப் பொருள்
    இறைவன்
    அரசன்
    கடவுள்
    கோயில்
    அரண்மனை
    கடவுள் உறைவிடம்
    பணிதல்
    பணிவாக இருத்தல்
    கடவுளை வணங்குதல்
    தாழ்தல்
    தாழ்வாக இருத்தல்
    கடவுளை வணங்குதல்

    2.4.2 புதிய சொல்லாட்சி

    பல்லவர் கால இலக்கியமான அப்பர் தேவாரத்தில்தான் முதன்முதலாகத் ‘தமிழன்’ என்ற சொல்லாட்சியைக் காண முடிகிறது. அதனை அடுத்துத்தான் இச்சொல்லாட்சியின் வழக்குப் பெருகி விட்டது. பண்டைக் காலத்தில் ‘தமிழ்’ என்ற சொல் நாடு, மக்கள், மொழி, பண்பாட்டைக் குறித்து நிற்கின்றது.

    இவ்வாறு பண்டைத் தமிழிலிருந்து பல்லவர் காலத் தமிழ் பல வகைகளில் வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. சங்கத் தமிழ், சங்கம் மருவிய காலத் தமிழ் ஆகியவற்றின் சில இலக்கணக் கூறுகள் தொடர்ந்தும், சில மறைந்தும், சில வேறு வடிவம் பெற்றும், சில புதிய கூறுகள் உருவாகியும், பல்லவர் காலத்தில் பெருகியும் தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வந்த வளர்ச்சி நிலையினை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 11:47:31(இந்திய நேரம்)