தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பெயரியல் மாற்றங்கள்

  • 2.2 பெயரியல் மாற்றங்கள்

    பல்லவர் காலத்தில் வழங்கப்பட்ட தமிழ்மொழியில் ஒலியியலிலும், எழுத்தியலிலும் மாற்றம் இருப்பது போன்று, பெயர்ச்சொற்கள் தொடர்பான இலக்கண அமைப்புகளிலும் வினையைச் சார்ந்த பல மொழி அமைப்புகளிலும் மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன.

    சங்கம் மருவிய காலத் தமிழிலிருந்து மொழி வளர்ச்சி அடைந்துள்ள விதத்தை இப்பல்லவர் கால இலக்கண அமைப்புகளிலிருந்து நம்மால் உணர முடியும்.

    2.2.1 பதிலிடு பெயர்கள் (Pronouns)

    மூவிடப் பெயர்களே பதிலிடு பெயர்கள் எனப்படுகின்றன. தன்மை, முன்னிலை, படர்க்கை என அமைந்துள்ள இப்பதிலிடு பெயர்களில் பல்லவர் காலத்தில் நிகழ்ந்த பல மாறுதல்களை நோக்குவோமா?

    • தன்மை வடிவம்

    சங்க இலக்கியத்தில் யான் என்பது தன்மை ஒருமையைக் குறித்தது. மிகப் பிற்பட்ட சங்க கால நூலான பரிபாடலில்தான் முதன்முதலாக நான் என்ற சொல் வருகிறது (பரி 6-97, 20-82). அப்பர் தேவாரத்தில் யான் என்ற சொல் இருபத்து ஒன்பது இடங்களிலும், நான் என்பது முந்நூற்று முப்பத்து ஒன்பது இடங்களிலும் வருகின்றது.

    சான்று:

    நான் ஏசற்றென்றும் (அப்பர் தேவாரம் - 4.62.2)

    • முன்னிலை வடிவம்

    சங்க இலக்கியங்களில் ‘நீயிர்’ என்ற முன்னிலை வடிவம் பலவிடங்களில் பயின்று வந்துள்ளது. பிற்பட்ட சங்க இலக்கியமான பரிபாடலில் நீர் (பரிபாடல், 8 : 7) என்ற சொல் வந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் நின், நும் போன்ற முன்னிலை வடிவங்கள் வந்துள்ளன. ஆனால், பல்லவர் காலத்தில் முன்னிலை வடிவமான உன் காணப்படுகிறது. அப்பர் தேவாரத்தில் இவ்வடிவம் பலவிடங்களில் பயின்று வந்துள்ளது. இலங்கைப் பேச்சுத் தமிழிலும் கரம் காணப்படுவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

    • படர்க்கை வடிவம்

    பல்லவர் காலத் தமிழில் படர்க்கைச் சொற்களில் உயர்திணைப் பன்மை விகுதிகள் கள் விகுதியும் பெறத் தொடங்கின.

    சான்று:

    இவர்
    >
    இவர்கள் (அப்பர் தேவாரம். 4.36.7)
    அவர்
    >
    அவர்கள்

    2.2.2 விகுதிகள்

    பெயர்ச்சொற்களில் விகுதிகளில் இடைக்காலத் தமிழில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.

    • உயர்திணையில் - கள் விகுதி

    பல்லவர் காலத் தமிழில் ‘கள்’ விகுதி பதிலிடு பெயர்களிலும் குறிப்பாக உயர்திணையில் பயின்று வரக் காணலாம்.

    சான்று:

    தன்மை
    -
    எங்கள் (அப்பர் தேவாரம், 4.14.7)
     
     
    நங்கள் (அப்பர் தேவாரம், 4.88.9)
    முன்னிலை
    -
    நீங்கள் (அப்பர் தேவாரம், 4.42.6) 4.58.9)
     
     
    உங்கள் (அப்பர் தேவாரம்,
    படர்க்கை
    -
    இவர்கள் (அப்பர் தேவாரம், 4.36.7)

    • இரட்டைப் பன்மை விகுதிகள்

    பெயர்ச் சொற்களில் இரட்டைப் பன்மைச் சொற்கள் இடைக்காலத் தமிழில் வருவது போன்று, இரட்டைப் பன்மை விகுதிகள் வினைச் சொற்களிலும் காணப்படுகின்றன.

    சான்று:

    கழிக்கின்றீர்
    >
    கழிக்கின்றீர்கள்
    (அப்பர் தேவாரம், 4.41.9)
    கரப்பர்
    >
    கரப்பர்கள்
    (அப்பர் தேவாரம், 4.101.8)
    அறிந்தார்
    >
    அறிந்தார்கள்
    (அப்பர் தேவாரம், 5.80.3)
    உணர்ந்தோர்
    >
    உணர்ந்தோர்கள்
    (அப்பர் தேவாரம், 5.39.8)

    • முன்னிலை ஒருமை விகுதிகள்

    முன்னிலை ஒருமை காட்டும் ‘ஆய்’ விகுதி சங்கத் தமிழில் பெரும்பாலும் எதிர்மறையில் வருகிறது. சங்கம் மருவிய காலத் தமிழிலும் பிற்காலத்திலும் எதிர்மறையாகவும், உடன்பாடாகவும் வருகிறது.

    சான்று:

    சொன்னாய்
    (அப்பர் தேவாரம், 6.32.2)
    ஆரூராய்
    (அப்பர் தேவாரம், 6.41.8)

    • ஆண்பால் - பெண்பால் விகுதிகள்

    ஆண்பால் விகுதியான ஆன் சங்கத் தமிழில் எதிர்மறையில் வருகிறது. சங்கம் மருவிய காலத்திலும் அதைத் தொடர்ந்து பல்லவர் காலத்திலும் எதிர்மறையாகவும், உடன்பாடாகவும் வருகின்றது.

    சான்று:

    வைத்தான்
    (அப்பர் தேவாரம், 4.45.6)
    வல்லான்
    (அப்பர் தேவாரம், 4.4.7)

    ஆண்பால் விகுதி போன்றே ஆள் விகுதியும் எல்லா இடங்களிலும் பயின்று வருகின்றது.

    சான்று:

    அகன்றாள்
    (அப்பர் தேவாரம், 6.25.7)
    தலைப்பட்டாள்
    (அப்பர் தேவாரம், 6.25.7)

    • உயர்திணைப் பன்மை விகுதி

    உயர்திணைப் பன்மை காட்டும் விகுதி ஆர் சங்கத் தமிழில் எதிர்மறையில் வருகிறது. சங்கம் மருவிய காலத்திலும் அதனை அடுத்த பல்லவர் காலத்திலும் எல்லா இடங்களிலும் வந்துள்ளது.

    சான்று:

    பிறந்தார்
    (அப்பர் தேவாரம், 698 : 4)
    பணிவார்
    (அப்பர் தேவாரம், 1 : 4)
    நாடுவார்
    (அப்பர் தேவாரம், 1 : 2)

    • வழக்கு ஒழிந்த (மறைந்து போன) சில விகுதிகள்

    உயர்திணைப் பன்மை காட்டும் பகர விகுதி பல்லவர் காலத்தில் வழங்காமல் மறைந்து விட்டது.

    ஓன். ஓள் (வருவோன், சொல்வோள்; வில்லோன், வளையோள்) ஆகிய விகுதிகள் போன்றே ஓர் விகுதி சங்கத் தமிழில் வினைமுற்றாகவும் வினையாலணையும் பெயராகவும் வந்துள்ளது. பல்லவர் காலத் தமிழில் இது வினைமுற்றாக இடம் பெறவில்லை.

    2.2.3 வாய்பாட்டுப் பெயரெச்சங்கள்

    வினையெச்சங்களைப் போன்று பெயரெச்சங்களும் பல்லவர் காலத்தில் இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் பயின்று வருவதைச் சான்றுகள் மூலம் உணரலாம்.

    • செய்யாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம்

    இடைக்காலத் தமிழில் செய்யாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எதிர்மறை உருபாகிய குறைந்து வர ஆத பெருகி வருவது தெரிகிறது.

    சான்று:

    அணியாத (அப்பர் தேவாரம், 3018 : 1)

    • பெயரெச்சம்

    குறுந்தொகையில் பெயரெச்சத்தில் நூற்றிரண்டு இடங்களில் ‘இ’கரம் வர, ஒரே ஓர் இடத்தில் மட்டும் இன் வருகிறது. (நீடின - குறுந்.309 : 3)

    அப்பர் தேவாரத்திலோ நானூற்று முப்பத்தாறு இடங்களில் ‘இ’கரம் வர, இருபத்து நான்கு இடங்களில் இய வருகிறது. இக்காலத் தமிழில் -ன- முழு ஆட்சி பெற்றதைக் காண முடிகிறது.

    சான்று:

    பொருத்திய குரம்பை
    (அப்பர் தேவாரம், 4.31.3)

    2.2.4 இடைச் சொற்கள்

    பெயர்ச்சொற்களில் மட்டும் அன்றி இடைச் சொற்களிலும் பல்லவர் காலத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன எனக் கூறலாம்.

    • ஆமல் > ஆமே

    வாராமல், போகாமல் என்பவற்றிலுள்ள ஆமல் > ஆமே எனத் திருவாசகத்தில் வழங்குகிறது.

    சான்று:

    பிறவாமல் > பிறவாமே (திருவாசகம், 8 : 12)

    • ஆக >

    ‘ஆக’ என்னும் வினையடை உருபு ‘ஆ’ என மாறுவதைத் திருவாசகத்தில் காணலாம்.

    சான்று:

    கோவணமாக > கோவணமா (திருவாசகம், 12 : 2)

    • ஆறு > ஆ

    ஆறு என்ற உருபு என மாறுவதையும் திருவாசகத்தில் காணலாம்.

    சான்று:

    வியப்புறுமாறு
    >
    வியப்புறுமா
    (திருவாசகம், 12 : 2)
    கொண்டவாறு
    >
    கொண்டவா
    (திருவாசகம், 11 : 10)
    நஞ்சுண்டவாறு
    >
    நஞ்சுண்டவா
    (திருவாசகம், 31 : 20)

    • நிபந்தனை எச்ச உருபுகள் ஆல், இல், ஏல்

    இவ்வுருபுகள் பல்லவர் காலத் தமிழில் மிகுதியாக வருகின்றன.

    சான்று:

    உருகுவித்தால்
    (அப்பர் தேவாரம், 6.95.3)
    விடில்
    (அப்பர் தேவாரம், 72 : 3)
    எண்ணுதியேல்
    (அப்பர் தேவாரம், 6.31.3)

    • சாரியைகள்

    தொல்காப்பியர் காலத்தில் இன் சாரியையை விட அன் என்பது பெருவழக்கு உடையதாக விளங்கியது. பிற்காலத்தில் அன் வரும் இடங்களில் இன் வருகிறது.

    சான்று:

    மேல்+அன்+அ = மேலன > மேல்+இன்+அ = மேலின

     
    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     
    1.
    சங்க காலத்தின் ‘யான்’ என்ற தன்மை ஒருமை வடிவம் பல்லவர் காலத்தில் எவ்வாறு மாறியது?
    2.
    இரட்டைப் பன்மை விகுதிகளுக்கு இரு சான்றுகள் தருக.
    3.
    செப்பேடு, சாசனம் - இரண்டிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
    4.
    எந்தப் பெயரெச்ச வாய்பாடு எந்த வடிவில் மாறியது? சான்று தருக.
    5.
    பல்லவர் காலத்தில் தோன்றிய இரு இலக்கண நூல்கள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 13:48:37(இந்திய நேரம்)