தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-4.2 நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்

  • 4.2 நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் 

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நிகழ்த்திக் காட்டும் (நடத்திக் காட்டப்படும்) வகையில் அமைந்தவை. அவை ஆடலாகவோ, பாடலாகவோ, ஆடலும் பாடலும் இணைந்ததாகவோ, ஆடல் பாடல் உரையாடலுடன் கூடியதாகவோ நிகழ்த்திக் காட்டப்படும். இதில் ஒரு கலைஞரோ பல கலைஞர்களோ பங்கு பெற்று, ஒரு சம்பவத்தையோ, கதையையோ, கருத்தையோ ஆடல் பாடல் வழி, பார்வையாளர் முன் நிகழ்த்திக் காட்டுவர்.

    4.2.1 பொதுக் கூறுகள்

    நாட்டுப் புறங்களில் நிகழ்த்திக் காட்டப்படும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை ஆட்டங்கள் பலவாகவும் ஆடப்படும் சூழல் களம் வேறு வேறாகவும் இருந்தாலும் கூட அவற்றுள் சில பொதுக் கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டால் மட்டுமே கலைகளையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

    ஆடுகளம்

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை நிகழ்த்துவதற்கென்று குறிப்பிட்ட இடமோ, களமோ, அரங்கமோ கிடையாது. எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (கோயில், ஊர்மந்தை, தெருக்கள்) நிகழ்த்திக் கொள்ளும் சுதந்திரப் போக்கைக் கொண்டவையாகும். சிறுதெய்வ வழிபாடுகளின் போது எங்கெல்லாம் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கலைஞர்களும் சென்று ஆடுவார்கள். தெய்வங்களை அலங்கரித்து ஊர்வலம் வரும்போது, அதன் முன்னால் கலைஞர்கள் ஆடிச் செல்வதை நீங்களும் பார்த்திருக்கலாம். நாட்டுப்புற நிகழ்த்து கலைகளுக்கான ஆடுகளம் விரிந்த பரப்பைக் கொண்டது என்பதை இதன்வழி அறியலாம்.

    வட்டாரத் தன்மை

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் பெரும்பாலானவை வட்டாரத் தன்மை கொண்டவையாகும். வட்டாரத் தன்மை என்றால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அந்தக் கலைகளைப் பார்க்க முடியும். ஒரு கலை தமிழகம் முழுவதும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றது என்றோ, நிகழ்த்தப்படுகிறது என்றோ கூறிவிட முடியாது. குறிப்பிட்ட கலைகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழக்கில் இருக்கும். குறிப்பாகத் தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலையைத் தமிழகத்தின் வட பகுதிகளில் மட்டுமே காணமுடியும். அதேபோல வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, கழியலாட்டம் போன்ற கலைகளைத் தமிழகத்தின் தென் பகுதிகளில் மட்டுமே காணமுடியும். வட்டாரத் தன்மையுடைய இக்கலைகள் அந்தந்தப் பகுதி மக்களால் நிகழ்த்தப் பட்டும், செல்வாக்குப் பெற்றும் விளங்கும்.

    நிகழ்த்தப்படும் முறை

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் கைகள், கால்கள், இடுப்பு போன்ற உடல் உறுப்புகளின் இயக்கங்களே மிகுதியாகக் காணப்படும். முக பாவங்களையோ, அபிநயங்களையோ காண இயலாது. இக்கலைகள் வட்ட வடிவ முறையிலோ நேர்கோட்டு முறையிலோ நிகழ்த்திக் காட்டப்படும். இதில் வட்ட வடிவ முறையே தொன்மையானதும் தொடக்கக் கால ஆட்ட முறையுமாகும். இம்முறையே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் மிகுதியாகக் காணப்படும். பார்வையாளர்களும் வட்டமாக நின்றோ அமர்ந்தோ கலைகளைக் கண்டு மகிழ்வர்.

    பெயர் பெறும் முறை

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், கலைகளில் பயன்படுத்தப் பெறும் கருவிகள், கலைகளில் ஈடுபடும் இனத்தார், கலை நிகழ்த்தப் பெறும் இடம் என்ற அடிப்படையில் பெயர் பெறுகின்றன. குறிப்பாகக் கலைகளில் பயன்படுத்தப் பெறும் கருவிகளின் அடிப்படையிலேயே (கரகாட்டம், காவடியாட்டம், வில்லுப் பாட்டு, தப்பாட்டம், பாவைக் கூத்து) மிகுதியும் பெயர் பெறுகின்றன.

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் திட்டவட்டமான இலக்கண வரையறைகள் கிடையாது. எளிய பயிற்சிகளால் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியவை; நெகிழ்ச்சித் தன்மை உடையவை. இக்கூறுகளே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களே ! நீங்களும் ஆடத் தயாரா?

    4.2.2 வகைப்பாடு

    தொடக்கக் கால மனிதன் தான் கண்டவற்றைப் போலச்செய்தலாய் நிகழ்த்திக் காட்டி அதனை முறைப்படுத்திக் கலைவடிவம் ஆக்கினான். அக்கலைகளில் ஆடலும் பாடலும் சிறப்பிடம் பெற்றன. பின்னாளில் கதைக் கூறுகள் சேர்க்கப்பட்டு உரையாடல் இடம் பெற்றது. இந்நிலையில் கலைகளின் தன்மைக்கேற்ப, அவை பெயர் சூட்டப்பட்டு, நிலைத்த கலை வடிவங்களாய் உலா வந்தன. ஒவ்வொரு நிகழ்த்து கலையும் தனக்குள் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டமைந்தது. இந்நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் அமைப்பு முறையை விளங்கிக் கொள்ளும் வண்ணம், கலைகளின் தன்மை அடிப்படையில், வகைப்பாடு எடுத்துரைக்கப் படுகிறது.

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்

    * தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல் வேடம், இலாவணி, உடுக்கைப் பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து, வில்லுப் பாட்டு.

    கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கையாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம்.

    வில்லுப் பாட்டு, உடுக்கைப் பாட்டு, இலாவணி

    ஒயிலாட்டம், சேவையாட்டம்.

    தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், இராஜாராணி ஆட்டம்.

    கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம்.

    கோலாட்டம், சக்கையாட்டம், கைச்சிலம்பாட்டம், கழியல் ஆட்டம்.

    குறவன் குறத்தி ஆட்டம்.

    (இவற்றைப் பற்றிய விளக்கங்களையும் படங்களையும் இப்பாடத்தின் இறுதியில் காணலாம்.)

    மேற்கூறிய வகைப்பாடுகள் தவிர, நிகழ்த்துவோர், நிகழ்த்து சூழல், நிகழ்த்து கலைக் கருவிகள் போன்ற அடிப்படையிலும் வகைப்படுத்திக் காணலாம். நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்தக் கலைகளுக்கேயான ஓர் ஈர்ப்பு விசை உண்டு. அது பாடலாகவோ இசையாகவோ ஆட்ட முறைகளாகவோ இருக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:43:08(இந்திய நேரம்)