தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசைக் கருவிகளும் உடை ஒப்பனைகளும்

  • 4.5 இசைக் கருவிகளும் உடை ஒப்பனைகளும்

    நாட்டுப்புற நி்கழ்த்து கலைகள் விழிகளுக்கும் செவிகளுக்கும் ஒருசேர இன்பம் ஊட்டுபவையாகும். இத்தகைய இன்பத்தை ஊட்டுபவை கலைகளில் பயன்படுத்தப் படும் இசைக் கருவிகளும் உடை ஒப்பனைகளுமே ஆகும். நிகழ்த்து கலைகளில் இசையும் ஒப்பனையும் இருகண்களாக விளங்குகின்றன. கரகாட்டத்தை இசையின்றி இரசிக்க இயலாது; அதேபோல் தெருக்கூத்தை ஒப்பனையின்றிப் பார்க்க இயலாது.

    4.5.1 இசைக் கருவிகள்

    இசையும் இசைக் கருவிகளும் நிகழ்த்து கலைகளின் ஆதார சுருதியாக விளங்குகின்றன. இசையால் வசமாகாத இதயமேது! நாட்டுப்புற இசைக் கருவிகள் கேட்போரையும் ஆடத் தூண்டும் துள்ளல் இசையைக் கொண்டவை. பல்வேறு நிகழ்த்து கலைகளின் கதைகள், இசைக் கருவிகளின் துணையுடனேயே பாடலாகவும் ஆடலாகவும் உரையாடலாகவும் எடுத்துரைக்கப் படுகின்றன. பெரும்பாலான நிகழ்த்து கலைகள் வில்லுப் பாட்டு, மகுடாட்டம், உடுக்கைப் பாட்டு, தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கையாட்டம் என்றவாறு இசைக் கருவிகளின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளன. இது இசைக் கருவிகளின் சிறப்பை உணர்த்தும்.

    இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டே ஆடுதலும், பாடுதலும் (தப்பாட்டம், சேவையாட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கையாட்டம், வில்லுப் பாட்டு, உடுக்கைப் பாட்டு, இலாவணி முதலியன). இசைக் கருவிகளின் இசைப்பு முறைக்கேற்ப ஆடுதலும், பாடுதலும் (கரகாட்டம், காவடியாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை, கணியான் கூத்து, ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், இராஜாராணி ஆட்டம் முதலியன) என்றவாறு நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் இசைக் கருவிகளின் பயன்பாடு அமைகிறது.

    நிகழ்த்து கலைகளும் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளும்

    கலைகள்
    இசைக் கருவிகள்
    தாளக் கருவிகள்
    பிற கருவிகள்
    கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, குறவன் குறத்தியாட்டம்
    நாகசுரம்
    பறை, தப்பு
    சலங்கை
    வில்லுப் பாட்டு
    குடம், உடுக்கை
    ஆர்மோனியம், வில்,ஜால்ரா.
    கணியான் கூத்து
    மகுடன்
    சலங்கை
    பம்பை
    கைச்சிலம்பு
    சக்கையாட்டம்
    சக்கைக் குச்சி
    சேவையாட்டம்
    சேவைத்தப்பு
    சேமக் கலம்
    தெருக்கூத்து
    டோலக்
    ஆர்மோனியம், சத்தக் குழல், ஜால்ரா
    ஒயிலாட்டம்
    பானைத் தாளம், டோலக்
    ஜால்ரா, சலங்கை
    இலாவணி
    டேப்
    உடுக்கைப் பாட்டு
    உடுக்கு (உடுக்கை)
    தோற்பாவைக் கூத்து
    டோலக்
    ஆர்மோனியம், ஜால்ரா

    நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வெற்றியில் இசைக் கருவிகளின் பங்கு குறிப்பிடத் தக்கது என்பதை இதன் வழி உணரலாம்.

    தமிழகத்தில் இதுபோன்று மரபு வழிப்பட்ட இசைக் கருவிகள் ஏராளமாகப் புழக்கத்தில் உள்ளன. இவை சடங்கு, வழிபாட்டுச் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தோலிசைக் கருவிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

    4.5.2 உடை ஒப்பனைகள்

    ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழி நாட்டுப்புற நிகழ்த்து கலைகளுக்கே பொருத்தமானதாகும். கலைஞர்களின் உடையலங்காரமும் முகப் பூச்சுமே பார்வையாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிகமான முகப் பூச்சு, பளபளப்பான ஜிகினா உடை, கதாநாயகர்கள் போன்ற தோற்றம் ஆகியவை நாட்டுப்புற நிகழ்த்து கலைஞர்களுக்கான பொது உடை ஒப்பனை முறையாகக் காணப்படுகிறது.

    தெருக்கூத்து, கரகாட்டம், கணியான் கூத்து, குறவன் குறத்தி ஆட்டம், சேவையாட்டம், காளியாட்டம், பகல் வேடம் போன்ற நிகழ்த்து கலைகளின் உடை ஒப்பனை முறைகள் ஏனைய கலைகளிலிருந்து மாறுபட்டதாகவும் கூடுதல் தன்மை உடையவையாகவும் அமைந்துள்ளன. எடுத்துக் காட்டிற்காகத் தெருக்கூத்து உடை ஒப்பனை முறையை இங்கு விளக்கமாகக் காண்போம்.

    தெருக்கூத்து

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

    தெருக்கூத்து உடை ஒப்பனை

    அரங்கக் கலைக் கூறுகளைக் கொண்டது தெருக்கூத்து. ஏதேனுமொரு கதையை அடிப்படையாகக் கொண்டு கதை மாந்தர்களுக்கு ஏற்ப வேடம் புனைந்து ஆடியும், பாடியும், உரையாடியும், கதையை நிகழ்த்திக் காட்டும் நாடகப் போக்கைக் கொண்டது தெருக்கூத்து.

    கோடைக் காலத்தில் நிகழுத் திரௌபதை வழிபாட்டில் பத்து நாட்கள் மகாபாரதக் கதை கூத்தாக நிகழ்த்தப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படும் கதைக்கேற்பவும் கதை மாந்தர்களின் பண்பிற்கேற்பவும் உடை ஒப்பனைகள் மாறுபடுகின்றன. தெருக்கூத்தில் முக ஒப்பனையே தொடக்கமாக அமைகின்றது. முத்து வெள்ளை, செந்தூரம், கண் மை, வண்ணச் சாந்து போன்ற பொருட்கள் முக ஒப்பனைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக ஒப்பனை முடிந்த பின் கல்யாண முருங்கை என்னும் கனமற்ற மரத்தால் செய்து அலங்கரிக்கப்பட்ட புஜக்கட்டை, கிரீடம் ஆகியவை முக்கியக் கதை மாந்தர்களுக்குப் பொருத்தப் படுகின்றன. ஒப்பனையில் மரக்கட்டைகள் பயன்படுத்துவதால் இக்கலையைக் கட்டைக் கூத்து என்றும் கூறுவதுண்டு. மேலும் உலோகத்தாலான நெற்றிப் பட்டம், பெரிய மீசை, காதுக் கட்டை, மார்புப் பதக்கம், அங்க வஸ்திரம், கழுத்திலும் மார்பிலும் வாகு வளையம் ஆகியவை அணியப் படுகின்றன. பின்னர் வைக்கோல் மற்றும் துணிகளால் செய்யப்பட்ட குடை போன்ற பாவாடை இடுப்பில் கட்டப்பட்டு, கால் சட்டையும், காலில் சலங்கைகளும் அணியப்படுகின்றன. பெண் கதை மாந்தர்களுக்கு எளிமையான உடை ஒப்பனை முறையே மேற்கொள்ளப் படுகிறது.

    தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் உடை ஒப்பனைகள் சாதாரண மனிதர்களைக் காவிய நாயகர்களாகவும் தெய்வங்களாகவும் மாற்றும் தன்மை உடையவையாக உள்ளன. தெய்வ வேடம் புனைவோரை மக்கள் வணங்கும் போக்கும் காணப்படுகிறது.

    பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம், காளியாட்டம் போன்ற நிகழ்த்து கலைகளில் குதிரைக் கூடு, மயில் கூடு, காளைக் கூடு, காளியின் முகமூடி (Mask), கூடுதலான கைகள் இவைகளைக் கலைஞர்கள் மாட்டிக் கொண்டு ஆடும் முறை காணப்படுகிறது. நிகழ்த்து கலைகளில் நகைச்சுவையூட்டும் கோமாளி, பபூன், கோணங்கி, கட்டியக்காரன், தொப்பைக் கூத்தாடி ஆகியோரின் உடை ஒப்பனைகள் பார்த்த மாத்திரத்திலேயே நகைச்சுவையை வரவழைப்பதாக உள்ளன.

    ஒப்பனை

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2019 10:28:12(இந்திய நேரம்)