Primary tabs
-
6.1 கைவினைக் கலைகள்
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக, மரபு வழி வந்து கலையம்சத்துடன் திகழ்பவை நாட்டுப்புறக் கைவினைக் கலைகள். கைவினை என்னும் பெயர்ச்சொல் கை + வினை என்னும் இரு சொற்களின் கூட்டிணைவாகும். இவ்விரு சொற்களையும் தனித்தனியே பொருள் கொள்வோம் என்றால் கை என்பது உடலின் உறுப்பையும், வினை என்பது செய்யும் தொழிலையும் குறிக்கும். இதன் வாயிலாகக் கைவினை என்பது கையால் செய்யப்படும் தொழிலைக் குறிப்பாக உணர்த்தி நிற்பதை அறியலாம். இவ்வாறு கைகளைக் கொண்டு அழகுணர்வோடு உருவாக்கப்படும் கைவினைப் பொருள்களே கைவினைக் கலைப் பொருட்களாக மாறுகின்றன; கலை வடிவம் பெறுகின்றன.
இயற்கைப் பொருட்களான மண்ணைக் கொண்டு உருவத்தையும், கல். மரத்தைக் கொண்டு சிற்பத்தையும், வண்ணத்தைக் கொண்டு ஓவியத்தையும் கலைத் தன்மையோடு மனிதன் உருவாக்கி வந்துள்ளான். இவையெல்லாம் மனிதனின் கைவினை நுட்பத்திற்கும் கலை உணர்விற்குமான சான்றுகளாகும்.
6.1.1 விளக்கங்கள்‘இயற்கையாகக் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு கைத்திறனால் புழங்கு பொருட்களை அழகியல் தன்மையோடு உருவாக்கும் கலையே கைவினைக் கலை’ என்றும், ‘மரபு வழிப்பட்ட தொழில்களில் கலையம்சத்துடன் விளங்குபவையே நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்’ என்றும், 'அன்றாட நடைமுறைப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிப்பதாக இருந்தால் அது கைவினைப் பொருள்; அதுவே கலைத் தன்மையோடு விளங்கினால் கைவினைக் கலை’ என்றும், ‘கலை நுட்பத்தோடு செய்யப்படும் கைவினைத் தொழில் கைவினைக் கலையாக மாறுகிறது’ என்றும் கைவினைக் கலைகள் குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப் படுகின்றன. மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் ‘மரபு வழியாகக் கைத்திறனோடு உருவாக்கப்படும் பொருட்கலையே கைவினைக் கலை’ எனப் புரிந்து கொள்ளலாம்.