Primary tabs
-
6.3 தஞ்சை வளர்க்கும் கலைகள்
சோழர்களின் கோயில் கலை, மராட்டியர்களின் ஓவியக் கலை, நாயக்கர்களின் கட்டடக் கலை ஆகியவை தஞ்சாவூரின் கலைப் பாரம்பரியத்திற்குச் சான்று பகர்பவையாகும். இதனை நீங்களும் அறிவீர்கள். இதன் தொடர்ச்சியாகவே இன்றும் இசை, நாட்டியம், நாடகம், கைவினைக் கலைகள் போன்றவை இங்குச் செழித்து வளர்ந்து வருகின்றன.
தமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு. தஞ்சைப் பகுதியில் செழித்துவரும் கலைகள் எண்ணிலடங்காது. இதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.
வீணை
தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாட்டரசன் கோட்டை. இவ்வூரில் வீணைகள் சிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத் தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன. இம்மரங்களே செதுக்கவும் இழைத்துத் தேவையான வடிவங்களை உருவாக்கவும் ஏற்றவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள் தச்சர்களால் செய்யப்படுகின்றன.
ஏகாந்த வீணை
ஒரே மரத்துண்டினால் வீணையின் பகுதிகளான குடம், தண்டியாளியின் தலை ஆகிய பாகங்கள் செய்யப்படுவது ஏகாந்த வீணை எனப்படும்.
ஒட்டு வீணை
குடம், தண்டியாளியின் தலைப் பகுதி இவை தனித்தனியாகச் செய்யப்பட்டு, ஒன்றாகப் பொருத்தப்படும் வீணை ஒட்டு வீணை எனப்படும்.
சிறப்பு
தெய்வீகத் தொழிலாகக் கருதப்படும் வீணைத் தொழிலில் பொறுமையும் நிதானமும் தொழில் நுணுக்கமும் மிகவும் அவசியமாகும். மீன், மயில், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அரும்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள வீணைகளின் வாயிலாக அறியலாம். தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். மிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன.
பிற கலைகள்
தென்னாட்டின் நெற்களஞ்சியமான அந்தத் தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) போன்றவற்றின் அழகைக் கண்டு மேலை நாட்டினரே வியந்து போற்றுகின்றனர். மேலும் பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள் மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவையாகும்.