தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-1:3-பாரதி - தமிழ் இனத்தைப் பற்றி

  • 1.3 பாரதி - தமிழ் இனத்தைப் பற்றி

    தமிழ் இனத்தைப் பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்,

     

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

    (தமிழன் பாட்டு : 1-2)

    எனவும்

    தமிழன் என்று ஓர் இனமுண்டு
    தனியே அவர்க்கு ஒரு குணமுண்டு

    (தமிழன் இதயம் :1-2)

    எனவும் பெருமையாகப் பாடினார்.

    தமிழன் தனித்தன்மை வாய்ந்தவன். அவனது தனித்தன்மையால் அவன் தலைநிமிர்ந்து இறுமாப்புடன் (பெருமையுடன்) நிற்பதற்குத் தகுதி உடையவன் என்கிறார் இராமலிங்கம் பிள்ளை. பாரதியாருக்கும் தமிழ் இனத்தைப பற்றி மிகுந்த பெருமை உண்டு. தாம் தமிழன் என்பதிலும் பெருமிதம் கொண்டவர் பாரதி. எனவே, தமிழ் இனத்தின் பெருமையைப் பல பாடல்களின் வழியாகப் புலப்படுத்துகின்றார்.

    1.3.1 தொன்மை

    உலகிலுள்ள தொன்மையான இனங்களுள் தமிழ் இனமும் ஒன்று.தமிழினத்தின் தொன்மைச் சிறப்பைப் போற்றும் பாரதியின் பாடல்கள் பல.சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாக இருப்பவன் சிவன். இறைவனாகிய சிவபெருமானால் உருவாக்கப்பட்டவளே தமிழ்த்தாய். அகத்திய முனிவரால் அமைக்கப்பட்டதே தமிழ்மொழி என்கிறார் பாரதியார்.

     

    ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
         ஆரிய மைந்தன் அகத்தியன் என்றுஓர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
         மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

    (தேசியப்பாடல்கள், தமிழ்த்தாய்: 1)

    (மைந்தன் = புதல்வன், வேதியன் = அறவோன், நிறைமேவும் = முழுமையாகப் பொருந்தும்)

    என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

    ஆதிசிவனுக்கும் அகத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? வழக்கில் இருக்கும் ஒரு கட்டுக் கதை இந்தத் தொடர்பை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இமயமலையில், சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தைப் பார்த்து மகிழ்வதற்காக உலகிலுள்ள முனிவர்களும், வானுலகத்திலுள்ள தேவர்களும் கூடினார்கள். அதனால், இமயமலையைச் சார்ந்த வடபுலம் தாழ்ந்தது. உடனே, சிவபெருமான் அகத்தியரை நோக்கித் தென்புலத்திற்குச் சென்று பொதியமலையில் அமரச் சொன்னார். அகத்தியரும் அவ்வாறே, தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள பொதியமலையில சென்று அமர்ந்தார். உடனே, ஒரு பக்கம் சாய்ந்த வடபுலம் தென்புலத்திற்கு நிகராக உயர்ந்து சமமானது. அந்த நிகழ்ச்சியிலிருந்து அகத்தியர் பொதிய மலையில் தங்கியதாகவும், தமிழ் இலக்கண நூல் எழுதியதாகவும் கதை வழங்கி வருகிறது. அகத்தியரின் மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர் என்றும் குறிப்பிடுவர்.

     

     

    எனவே, பாரதியார் தமிழ் இனத்தின் தொன்மையைக் குறிப்பிடுவதற்கு, அகத்தியர் இலக்கணம் எழுதியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

    மேலும் தமிழரின் தொன்மையைக் குறிப்பிடும்போது காலவரையறை சொல்ல முடியாத காலத்தில் வாழ்ந்தவர் தமிழர் என்பதனை,

     

    .... ...........................ஆயிரம்
    ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ?
    பவுத்தரே நாடெலாம் பல்கியகாலத்
    தவரோ? புராணமாக்கிய காலமோ?

    (தேசியப்பாடல்கள், தமிழச்சாதி : 97-100)

     

    (முன்னவரோ = முன்னால் தோன்றியவரோ, பவுத்தர் = புத்தமதப் போதகர்கள், பல்கிய = பெருகிய)

    என்று வினவுகிறார். வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மையான காலத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் என்பது பாரதியார் கருத்து.

    1.3.2 வீரம்

    தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அகம், புறம் என்று பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தார்களோ, அவற்றிற்கு ஏற்ப இலக்கியம் படைத்த பெருமைக்கும் உரியவர்கள் என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

    • புறம்

    புறம் என்றால் குடும்ப - அதாவது இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான, போர், கொடை போன்ற நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டது. இதை அ டிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் புற இலக்கியங்கள் என்று வழங்கப்பட்டன. புற இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தது புறநானூறு. இதில் பண்டைய தமிழ் மன்னர்களின் வீரமும் படைவீரர்களின் வீரமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. புறநானூறு கூறும் வீரப்பரம்பரையில் வந்த தமிழர்களைப் பற்றிப் பாரதியார் பெருமையாகப் பாடியுள்ளார்.

     

    • கடல் கடந்த போர்

    தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்ததுபோல், கடல்கடந்து சென்று போரும் நிகழ்த்தி உள்ளனர். இலங்கை, சாவகம், கடாரம் போன்ற தீவுகளைக் கடல் கடந்து வென்றுள்ளனர். சோழ அரசர்களுள் சிறப்பு உடையவனாகிய முதலாம் இராசராசசோழன், கடாரம் வரை சென்று அதை வென்ற காரணத்தினாலேயே ‘கடாரம் கொண்டான்’ என அழைக்கப்பட்டான்.

    அதைப்போல, இலங்கைமீது படையெடுத்துச் சென்று, சோழ அரசன் இராசராசன் வெற்றி பெற்றுள்ளான். இராசராசேசுவரம் என்ற இடத்தில் கோயில் ஒன்றும் கட்டினான். அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, தன் ஆட்சியையும் பரப்பினான்.

    இத்தகைய, வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு, பாரதியார்,

     

    சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
    தீவு பலவினும் சென்று ஏறி - அங்குத்
    தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு

    (தேசியப்பாடல்கள், தமிழ்நாடு : 8)

    (ஆதிய = முதலிய, நின்று = நிலைநிறுத்தி, சால்புற = பெருமை விளங்க,)

    என்று தமிழர் வீர வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

    மேலும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த உச்சியைஉடைய இமயமலையைக் கூடத் தமது வீரத்தினால் அழிக்கக் கூடியவர்கள் தமிழர்கள் என்கிறார் பாரதியார். இதனை,

     

    விண்ணை இடிக்கும் தலைஇமயம் - எனும்
         வெற்பை அடிக்கும் திறனுடையார்

    (தேசிய கீதங்கள், தமிழ்நாடு : 9)

    (விண= வானம்,  இடிக்கும= தொடும், தல = உச்சி, வெற்பு = மலை,  அடிக்கும் = அழிக்கும்)

    இவ்வாறு தமிழர்களின் வீரமரபைப் போற்றிப் பாடிய பாரதியின் பாடல்கள்பல.

    1.3.3 காதல்

    பண்டைய தமிழர் அக வாழ்க்கைக்குச் சிறப்பிடம் கொடுத்திருந்தனர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் காதல் இலக்கியத்தைப் பற்றியே அமைந்துள்ளன. பாரதியாரும், தமிழர்களின் அக இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்டு தம் பாடல்களை அமைத்துள்ளார்.

    தாம் எழுதிய குயில்பாட்டில், காதலின் பெருமையைப் பாரதியார் குறிப்பிடுகிறார். இறைவன் உலகத்தைப் படைத்தார். ஆனால் இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்குக் காதல்தான் காரணம் என்கிறார் பாரதியார். காதல் இல்லாவிட்டால் இந்த உயிரினமே அழிந்துவிடும் என்கிறார்.

     

    காதல் காதல் காதல்
    காதல் போயின் காதல் போயின்!
    சாதல் சாதல் சாதல்

    (குயில்பாட்டு : குயிலின் பாட்டு)

    (சாதல = இறத்தல்)

    காதல் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல், உயிர் இனங்கள் அனைத்திடமும் இருக்கின்ற ஒன்று.அதுதான், உயிர் இனங்களிடையே ஓர் உறவை - ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. எனவே, உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமான காதல் இல்லாவிட்டால் உலகம் இயங்காது அழிந்துவிடும் என்கிறார் பாரதியார்.

    இவ்வாறு தமிழர்கள் தம் அகவாழ்வில் சிறப்பிடம் கொடுத்திருந்த காதலின் பெருமையினைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 10:23:09(இந்திய நேரம்)