தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

1-.2-பாரதி - தமிழரைப் பற்றி

  • 1.2 பாரதி - தமிழரைப் பற்றி

    ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. மனிதன் பேசும் மொழி, அவன் அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, நம்பிக்கை உணர்வு ஆகியவை பண்பாட்டை வெளிப்படுத்தும் கூறுகளாகும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையைப் பாரதி புகழ்ந்துரைக்கிறார். முதலில் தமிழரின் நம்பிக்கையும் கடமை உணர்வும்
    வெளிப்படுத்தப்படுகின்றன.
     

    1.2.1 நம்பிக்கையும் கடமை உணர்வும்

    ஒருவனது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவன் பேசும் பேச்சிலும், அவன் செயல்களிலும் வெளிப்படும். அவை அவனது பண்பாட்டை வெளிப்படுத்தும்.
     

    • தமிழரின் மனவுறுதி

    தமிழர்கள் பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்கா, சாவா, சுமத்திரா, மலேயா, சிங்கப்பூர், பர்மா போன்ற பிற நாடுகளுக்குச் சென்றனர். அங்குப் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்தனர். இருப்பினும் பாரம்பரியமாகத் தங்கள் முன்னோர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளிலிருந்து கொஞ்சம் கூட நெகிழாமல் வாழ்ந்து வந்தனர். குறிப்பாகச் சமய நம்பிக்கையைப் பொறுத்த வரையில் அதைத் தங்கள் பண்பாட்டுக் கூறாகப் பாதுகாத்து வந்தனர். இதனை,
     

     

    ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
    தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
    பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள
    பற்பல தீவினும் பரவி இவ்எளிய
    தமிழச் சாதி, தடிஉதை யுண்டும்
    கால்உதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

    தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்
    எதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்

    (தேசியகீதங்கள், தமிழச்சாதி: 31-36, 43-45)


    (காப்பிரி நாடு = நாகரிகம் இல்லாத நாடு, பூமிப்பந்து = பந்துபோன்று உருண்டையான நில உலகம், தடி உதையுண்டும் = தடியால் உதைபட்டும், கால் உதையுண்டும் = காலால் உதைபட்டும், கயிற்றடியுண்டும் = கயிற்றால் அடிபட்டும், தெய்வம் மறவார = தாம் வணங்கும் தெய்வங்களை மறக்காதவர்கள், ஏதுதான் வருந்தினும் = எதை நினைத்து வருந்தினாலும்)

    என்று புலம் பெயர்ந்த தமிழர்களின் சமய நம்பிக்கையினையும், கடமை உணர்வினையும் புகழ்ந்து கூறுகிறார் பாரதியார்.

     

    • சமயப்பற்று

    தமிழர்கள் சென்று குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்கு அறிமுகம் இல்லாத பிற சமயங்கள் இருந்தன. சூழலுக்கு அடிமையாகியோ,எப்படியாவது வாழவேண்டும் என்பதற்காகவோ அவர்கள் தாம் சென்றடைந்த நாடுகளிலுள்ள சமயங்களைத் தழுவவில்லை. தங்களுக்கு ஈடுபாடு உடைய, முழுநம்பிக்கை உடைய, தங்கள் சமயத்தையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தங்களது அடையாளச் சின்னமாக, தங்கள் தனித் தன்மையைப் புலப்படுத்த, முருகன் கோயில்களை அமைத்தும், மாரியம்மன் கோயில்களை அமைத்தும், காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீ மிதித்தல் போன்ற சமயச் சடங்குகளைப் பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றனர். இவை அவர்கள் தமது பண்பாட்டை உறுதியாகப் பின்பற்றி வருவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.

     

    • கடமை உணர்வும் கடின உழைப்பும்

    உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் தமிழர்கள். எனவேதான் வணிகர்களாகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் தாம் குடிபெயர்ந்து சென்ற நாடுகளிலெல்லாம், தம் உழைப்பால் பிறரின் நன்மதிப்பைப் பெற்றதோடு, தாமும் தம் உழைப்பால் முன்னேறினர். கடமை உணர்வுடன் எப்பொழுதும் உழைக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஓர் இனத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் என்பர். கடல் கடந்து சென்றாலும் தம் கடமையிலிருந்து வழுவாதவர்கள் தமிழர்கள் என்று புகழ்கிறார். இந்தப் பண்பாட்டைத் தாம் சென்ற நாடுகளில் விடாமல் பாதுகாத்தவர்கள் தமிழர் என்பதால் பாரதியார் ‘செய்யுங்கடன் பிழையார்’ என்று சுட்டிக்காட்டிப் பாராட்டுகிறார்.

    தன் மதிப்பீடு: வினாக்கள் - I

    1.

    கல்வியை எந்த மொழியில் கொடுக்க வேண்டும் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார்?

    2.
    தமிழ் வளம் பெற என்ன செய்ய வேண்டும்?
    3.
    பாரதியார் மிகவும் விரும்பும் மூன்று தமிழ்ப்புலவர் யாவர்?
    4.

    புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் இன்னமும் எவற்றைத் தங்கள் அடையாளச் சின்னங்களாகக் கொண்டுள்ளனர்?

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 19:22:33(இந்திய நேரம்)