தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.1-பாரதிதாசன் கண்ட பெண்

  • 3.1 பாரதிதாசன் கண்ட பெண்
     

    E

    இதோ நாக்கைத் துருத்திக் கொண்டு கண்களை உருட்டி விழித்தபடிச் செக்கச் செவேர் என்று கையில் போர்க்கருவி ஏந்தி நிற்கும் காளிதேவியைப் பாருங்கள்! பக்தர்கள் இவருக்குப் படையலிடும் சிறப்பும், பூக்குழி என்று கூறி நெருப்புக் கட்டிகளில் பாதம் பதிய நடக்கும் பணிவும் பாருங்கள்! ஆம்!

    இவளுக்குச் சக்தி என்று பெயர். கடவுள்களில் பெண் கடவுளுக்குச் சக்தி இருந்தது. ஆனால் மனிதப் படைப்பில் பெண்ணுக்குச் சக்தி இல்லாமல் போய் விட்டது. எனினும் அவ்வப்போது மாதர் திலகங்கள் நாடாண்டனர்;
     

    வாளேந்திப் போர் செய்தனர்; விண்ணேறிப் பறந்தனர்; கோள்களைத் தொட்டனர். என்றாலும் இவற்றையெல்லாம் விதிவிலக்கு என்று கருதிற்று உலகம். பாரதியார் ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களை உரிமை மிக்கவர்களாகப் படைத்தார். பாரதிதாசன் பெண்களைப் புரட்சி செய்யத் தூண்டினார்.
     

    பெண் ஆண் என்ற     
    இரண்டு உருளையில் நடக்கும் இன்ப வாழ்க்
    கை

    (29. பெண்களைப் பற்றி பெர்னாட்ஷா தொ.1)
     

    என்று கூறி ஆண், பெண் சமம் என்றார். பெண் விடுதலை பெறாத வரையில் நாடு விடுதலை பெற முடியாது என்று கவிஞர் கருதினார். நாட்டின் மக்கள் தொகையில் பாதியாய் உள்ள பெண்கள் சேர்ந்து முயலாமல் நாட்டு விடுதலையை எப்படி ஈட்ட முடியும்?
     

    பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு     
    மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே

    (சஞ்.ப.சா. தொ.1)

    என்றார். முயலுக்குக் கொம்பு உண்டா? அதுபோலத்தான் நாட்டு விடுதலையும் இல்லை என்று ஆகிவிடும் எனக் கருதுகிறார். பெண்கள் சிரித்தால் போயிற்று எல்லாம் என்று பழமொழி கண்டதல்லவா நம் உலகம். அவள் சிரிக்கக்கூடாது அதிகபட்சம் புன்னகைக்கலாம்; அதுவும் மிக நெருங்கிய உறவினர்களிடம். அவள் குனிந்த தலைநிமிராமல் இருந்தால் சிறப்பு. இதோ பாரதிதாசன் இரண்டு வகைப் பெண்களைப் படைக்கின்றார் பாருங்கள். அதோ! ஒரு பெரிய மலையைக் காணுங்கள்! அதுதான் சஞ்சீவி பர்வதம். அங்கே குப்பன் என்பவன் வந்து நிற்கிறான். குப்பனுடைய காதலி குப்பனிடம் கூறுகிறாள். “மலையின் உச்சியில் உள்ள மூலிகை வேண்டும். போய்ப் பறித்து வாருங்கள்” என்கிறாள். குப்பன் மலைக்கிறான். இவ்வளவு பெரிய மலையின் உச்சியை எப்படி அடைவது என்று எண்ணுகிறான். அவன் மலைப்பதைக் கண்டு அவள் சிரித்துவிட்டாள். அவ்வளவுதான். குப்பன் காதலியையும் தூக்கிக் கொண்டு மலையின் மீது தாவினான்; பறந்தான். எப்படி முடிந்தது அவனால்?
     

    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்

    (சஞ்.ப.சா. தொ.1)
     

    என்கிறார். பெண், மற்றவர்களை இயக்கும் சக்தியாகத் திகழ்வதை இங்கு நாம் கண்டோம். இதோ இன்னொரு வகைப் பெண்ணைப் பாருங்கள்! சுப்பம்மா தமிழச்சி; தேசிங்கு மன்னனின் படை அதிகாரியான சுதரிசன் என்பவன் தீய நோக்கோடு சுப்பம்மாவை அணுகுகின்றான். அப்போது அவள்,
     

    கத்தியை நீட்டினாள்; தீ என்னை வாட்டினும்     
    கையைத் தொடாதேயடா - இந்த     
    முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி     
    மூச்சுப் பெரிதில்லை காண்

    (தமிழச்சியின் கத்தி - 20)
     

    என்று வீர மற உணர்வோடு கூறுகின்றாள். தேவைப்பட்டால் தானே இயங்கவும் செய்வாள் என்பதற்குக் கவிஞர் படைத்துக் காட்டும் எடுத்துக்காட்டு இது.
     

    3.1.1 பகுத்தறிவுப் பெண்
     

    புரட்சிக் கவிஞரின் பெண் மூடப்பழக்கங்களை ஏற்காதவள்.  பெண்ணுரிமையை மற்றவர்கள் தரும் வகையில் அவள் காத்திருப்பதில்லை. இதோ ஒரு காட்சி காணுங்கள்!

    சோலையிலே நிற்கின்றாள் அந்த அழகுமயில்; செல்வப்பிள்ளை ஒருவன் அவளைக்கண்டு விழிகளில் அள்ளினான். அருகில் வந்தான். தன் கன்னத்தில் முத்தமொன்று கேட்டான். ‘படித்திருக்கின்றீரா’? என்று அவள் கேட்டாள். பலநூல் படித்த பண்டிதன் நான் என்றான் அவன். ‘அப்படியானால் பெண்ணுக்கு உரிமையுண்டா? சொல்க’ என்று கேட்டாள். ‘கொடுத்தால் பெற்றுக் கொள்வதுதான் அறம்’ என்றான் அவன். ‘நானே எடுத்துக் கொண்டால் என்ன’ என்று கேட்டு அவனை மடக்கினாள். அதனோடு விட்டாளா அவள்? இல்லை இல்லை. அவன் அவளை நெருங்க முற்பட்டபோது வாளை உருவினாள்; ஓடிப்போ என்று விரலால் குறிப்புக் காட்டினாள். ஓடினான் ஓடினான்; வாழ்க்கையின் ஓரத்திற்கே அவன் ஓடினான்.
     

    செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள்
    சிறுநிலையில் இருக்க வில்லை! விழித்துக் கொண்டார்!

    (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
     

    என்று கூறிக் கவிஞர் மதிக்கிறார். இப்படிப்பட்ட பெண் பிறந்தபோது அவளைத் தாலாட்டும் கவிஞர் மொழி கேளுங்கள்!
     

    மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற     
    காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

    (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
     

    கற்பூரம் வைத்திருந்த பெட்டியைத் திறந்தவுடன் காடு முழுதும் மணப்பதுபோல் இந்தச் சமுதாயம் முழுதும் அவள் புகழ் பரப்பப் பிறந்திருக்கிறாள். இப்படிப்பட்ட பகுத்தறிவுச் சுடராகப் பாரதிதாசனின் பெண் திகழ்கின்றாள்.
     

    3.1.2 செயல்திறன் வாய்ந்த பெண்
     

    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் கவிஞர். அந்தப் பல்கலைக்கழகத்தின் மைய அச்சுப் பெண்தான். பழைய நூல்கள் பெண் என்பவள், தாதியாக, தாயாக, அமைச்சராக, மனைவியாக வெவ்வேறு பொறுப்புகளில் கணவனுக்குப் பணிசெய்வதாகக் கண்டன. ஆனால் புரட்சிக் கவிஞன் படைத்த பெண், தன் வீடு, தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று பாராமல் நாடு, மொழி ஆகியவற்றுக்கும் தொண்டு செய்யும் தகைமை வாய்ந்தவளாகத் திகழ்கிறாள்!
     

    விழுந்த தமிழ்நாடு தலைகாக்க என்றன்     
    உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்

    (குடும்பவிளக்கு - 1)
     

    என்று கூறுகின்றாள். இதோ குடும்ப விளக்கான மனைவி கணவனைப் பார்த்து அடுக்கடுக்காய் கேட்பதைப் பாருங்கள்!
     

    அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்     
    அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்     
    இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?     
    என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.

    இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது?     
    ஏகாலி வந்தானா? வேலைக் காரி     
    சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?     
    செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை     
    ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள்?    
    உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு     
    குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா?     
    கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம்.

    (குடும்பவிளக்கு - 1)

    (ஏகாலி = சலவைத் தொழிலாளி)
     

    வாழ்க்கையில் உயர் குறிக்கோள்கள் வேண்டும் என்பதை இந்தப் பகுதி எடுத்துரைக்கின்றது அல்லவா? குடும்பவிளக்கில் வரும் தங்கம் அறிவு நிறைந்த பெண்ணாக மட்டுமன்றிச் செயல்திறன் வாய்ந்தவளாகவும் அமைகிறாள். வானூர்தியைப் பெண் செலுத்த வேண்டும்; மாக்கடலிடையே கலம் (கப்பல்)  ஓட்ட வேண்டும்; ஒருகையால் தனக்கென்று அமைந்த பணி இயற்றும்போதே மறுகையில் பெண் உலகு விடுதலை எய்துதற்குரியன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் கவிஞரின் தலைவி.
     

    3.1.3 மொழிப்பற்றுள்ள பெண்
     

    பால் கணக்கு, தயிர்க்கணக்கு வைத்துக் கொள்ளும் அளவு கணக்கறிவு, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த அளவு படிப்பு ஆகியவை பெண்ணுக்குப் போதும் என்று கருதியிருந்தது பழைய உலகம். கல்வி இல்லா நிலம் களர் நிலம்; அங்குப் புல் விளையலாம்; நல்ல புதல்வர் விளைய மாட்டார் என்றார் பாரதிதாசன். கல்வி வல்லாராய்ப் பெண்கள் திகழ வேண்டும்; தாய் மொழிக் கல்வியைப் பெண்கள் பெறுதல் வேண்டும் என்று நினைத்தார் கவிஞர்.
     


     

    இந்தப் பழம்புகழ் மீள வேண்டும் நாட்டில்     
    எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்     
    வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்     
    மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்

    (குடும்பவிளக்கு : முதல் தொகுதி)
     

    (மாற்றலர்கள= பகைவர்கள்)

    என்று வீட்டுத் தலைவி பேசுகிறாள். வீட்டுப் பிள்ளைகள் புறநானூறும் திருக்குறளும் படிக்கின்றனர். பிள்ளைகள் முன்னேறத் தமிழ்க்கல்வி இன்றியமையாதது என்கிறாள் குடும்பத்தலைவி.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:49:13(இந்திய நேரம்)