தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.6-தொகுப்புரை

  • 3.6 தொகுப்புரை  
     

    ஆண், பெண் என்ற பாகுபாடு இயற்கையில் அமைந்தது; இருவேறு பாலினம் ஒன்றுவதில்தான் உலக இயக்கம் இருக்கிறது. ஆண் பெண் இருவரும் குடும்பக் கடமைகளையும் சமுதாயக் கடமைகளையும் ஆற்ற வேண்டியவர்கள். இயற்கை வகுத்த பால் வேறுபாடு தவிர இருவரிடையே வேறு வேற்றுமைகள் தோன்றியிருக்கத் தேவையில்லை. ஆனால் மிகப் பழங்காலத்திலிருந்து பல சமூக அமைப்புகளிலும் ஆண் ஆதிக்கம் மிக்கவனாகவும், பெண் அவனுக்கு அடங்கி வாழ்பவளாகவும் இருக்கும் நிலை உள்ளது. பெண்பிறப்பு மதிப்புக் குறைந்ததாகக் கருதப்படும் நிலை, திருமணத்திற்கு முன்னும் பின்னும் அளவற்ற கட்டுப்பாடுகளுக்குள் வாழவேண்டிய சூழல், தனித்து இயங்க முடியாத வாழ்க்கைப் போக்கு ஆகியவற்றால் பெண்களின் வாழ்வியல் நலிந்தது. அவ்வப்போது சீர்திருத்தவாதிகள் தோன்றிப் பெண்ணுலகு உரிமை பெறக் குரல் கொடுத்தனர். தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர் பாரதிதாசன் பெண்களின் விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டார். தம் படைப்புகள் அனைத்திலும் புரட்சி உள்ளமும் செயல்திறனும் கொண்ட பெண்களைப் படைத்தார். ‘இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்கின்றீரா? அப்படியானால் முதலில் பெண்ணுக்கு விடுதலை கொடுங்கள்’ என்று பேசினார்.


    பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
    மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே

    (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)


    என்று பேசிய முதல்கவிஞர் அவரே, பெண்கள் உற்ற கைம்மைப் பழியைத் துடைக்க அவர் போரிட்டார்; பெண்கள் மீது திணிக்கப்பட்ட பொருந்தா மணத்தை அவர் கண்டித்தார்; பெண்கள் உரிமையுடன் காதல் மணம் கொள்வதை அவர் வரவேற்றார்; பெண்கள் மறுமணம் கொள்வதை அவர் வற்புறுத்தினார். எங்கெங்குப் பெண்களின் விடுதலை இயக்கமும் உரிமைப்போரும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அவர் பாடல்களே முழங்கும்; அவருடைய பாத்திரப் படைப்புகளே பேசும்.


    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? -எமக்கு
    இன்பம் சேர்க்க மாட்டாயா?


    தன் மதிப்பீடு: வினாக்கள் - II

    1. பாண்டியன் பரிசு நூலில் கதைத் தலைவியன் பெயர் யாது?
    1. அமிழ்து தன் தம்பியை நோக்கி யாது கூறினாள்?
    1. தலைவன் எண்ணெய் தேய்க்க வேலைக்காரியை அனுப்புக என்றபோது தலைவி என்ன செய்தாள்?
    1. வஞ்சி குப்பனை எதற்குச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கூப்பிட்டதாகக் கூறுகின்றாள்?
    1. மதுரையை யார் எரித்ததாகப் புரட்சிக் கவிஞர் கூறுகின்றார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:49:29(இந்திய நேரம்)