Primary tabs
-
பாரதிதாசன், இயற்கையைப் பற்றிய தம் பாடல்களில், இயற்கையிலே அமைந்திருக்கும் காட்சிகள் பலவற்றை இடம்பெறச் செய்துள்ளார். அவற்றில், குறிப்பாக மலையைப் பற்றிய காட்சி, மழைதரும் காட்சி, இடை அறாது ஓடிக் கொண்டிருக்கும் ஆறு வழங்கும் காட்சி, சோலையின் வனப்பு ஆகியவற்றை மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார்.
இயற்கை வழங்கும் அழகுக் காட்சிகளில் மலையும் ஒன்று. மலையையும் மலைசார்ந்த இடத்தையும் பண்டைத் தமிழர் ‘குறிஞ்சி’ என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்தின் கடவுளாக முருகனைப் படைத்தனர். தமிழில் முருகு என்றால் அழகு என்று பொருள். அழகையே, இயற்கை அழகையே இறைவனாக வழிபாடு செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பண்பாடாக வளர்ந்து இருந்தது. மலைப்பகுதியின் அழகு காரணமாக, அதன் தெய்வமாக முருகன் அல்லது ‘அழகனை’த் தமிழர் வழிபட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே ! இயற்கை அழகின் தளமாக அமைந்திருக்கும் மலையைப் பற்றியும் மலைதரும் அழகுக் காட்சியைப் பற்றியும் பல புலவர்கள் பாடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாறுபட்ட நிலையில், பாரதிதாசன் மலை தரும் வனப்பைப் பற்றிப் பாடியுள்ளார்.
மாணவர்களே ! எப்பொழுதாவது மலைப்பகுதிக்குச் சென்றுள்ளீர்களா? சுற்றுலாப் பயணமாகக்கூடச் சென்றிருப்பீர்கள் இல்லையா? எவ்வளவு அழகான மரங்கள் ! செடி கொடிகள் ! மரங்களில் காய்களும் கனிகளும் ! செடிகொடிகளில் பல வண்ண வண்ணப் பூக்கள்! பார்க்கப்பார்க்க நம்மைப் பரவசம் ஊட்டும். ஆனந்தக்களிப்பில் நம்மை அப்படியே மெய்மறக்கச் செய்யும். உண்மைதானே? ஒரு பக்கம் குயில் கூவிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் அழகான மயில் தோகையை விரித்து ஆடிக் கொண்டிருக்கும். குளிர்ந்த காற்று உடலுக்குக் குளிர்ச்சி ஊட்டி இன்பம் தரும். பூக்களின் நறுமணம் நம்மை ஈர்க்கும். பூக்கள்தோறும் சென்று, தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் இன்னிசை பாடிக்கொண்டிருக்கும். இயற்கையின் இந்த அழகுக் காட்சியைப் பாவேந்தர் பாரதிதாசன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அந்த அழகுக்காட்சியைக் கவிதையாக வடித்துக் கொடுக்கிறார்.
குயில்கூவிக் கொண்டிருக்கும் ; கோலம் மிகுந்த
மயில்ஆடிக் கொண்டிருக்கும் ; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும் ; கண்ணாடி போன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு ; கனிமரங்கள் மிக்க உண்டு ;
தேனீக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக் களிக்கும்.
(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரிகள்: 1 - 6)
(கோலம் = அழகு)மலையின் அழகை வார்த்தைகளில் வடித்த பாரதிதாசன், பாயும் அருவியின் அழகினையும் எடுத்துரைக்கிறார. இயற்கையைப் பற்றிப் பாடிய பல புலவர்களும் அருவியின் அழகை விளக்கிப் பாடியுள்ளனர். ஆனால் பாரதிதாசன், பாயும் அருவிக்குப் புதியதொரு விளக்கம் கொடுக்கிறார்.
மலையிலிருந்து பாயும் அருவியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த கவிஞர், பக்கத்தில் பறந்து கொண்டிருக்கும் குருவிகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். மலர்ந்திருந்த மலர்களையும் கண்டுகளித்திருக்கிறார். அதை அப்படியே கவிதையாக்கித் தந்துள்ளார்.
அருவிகள், வயிரத் தொங்கல்
அடர்கொடி, பச்சைப்பட்டே !
குருவிகள், தங்கக் கட்டி !
குளிர்மலர், மணியின் குப்பை !
(அழகின் சிரிப்பு : குன்றம், ‘ஒளியும் குன்றும்’ வரிகள் : 1-5)மாணவர்களே ! புரிகின்றதா பாரதிதாசன் என்ன சொல்கிறார் என்று? மலையின் உச்சியிலிருந்து அருவிகள் கீழ்நோக்கிப் பாய்கின்றன. அவை, பாரதிதாசன் பார்வையில், ஒளிவீசும் வயிரத்தை (Diamond) கட்டித் தொங்கவிட்டது போல் காட்சி அளிக்கின்றன. அருவியின் பக்கத்து மரங்களில் படர்ந்திருக்கும் நெருக்கமாக இருக்கும் கொடிகள், பச்சைநிறத்தில் அமைந்த பட்டைப்போல் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் குருவிகள் தங்கத்தால் ஆகிய கட்டிகள் போலுள்ளன. மலர்கள் எல்லாம் மணியின் கூட்டம் போன்று அமைந்துள்ளன. கவிஞர் கூறும் ஒவ்வோர் உவமையும் அவரது புதிய நோக்கையே சுட்டுகிறது. அருவியைப் பலரும் பலவிதமாகப் பாடியுள்ளனர். ஆனால், மாறுபட்ட நிலையில் பாரதிதாசன் பாடிய தன்மை புதுமையானது.
உலகிலுள்ள விலை உயர்ந்த பொருள்களாகிய வைரம், தங்கம், மாணிக்கம் போன்ற பொருள்களோடு, அருவியின் காட்சியை ஒப்பிட்டுக் கூறுகிறார். அதன் காரணம் என்ன? தான் பார்த்த அருவியின் காட்சி, விலை மதிக்கமுடியாத உயர்ந்த தன்மை உடையது என்பதைப் புலப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார். இப்பாடலில், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தரத்தையும் வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார் பாரதிதாசன்.
• இயற்கைப் பாடலிலும் சமுதாய உணர்வுபாரதிதாசன் ஒரு சமுதாயச் சிந்தனையாளர். சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். எனவே வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் அதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மலையின் அழகைப் பற்றிப் பாடும் பொழுதும், தம் வாழ்க்கையில் விடிவே இல்லாமல் வருந்தும் அடிமையின் உள்ளக் குமுறல் தான் அவர் நினைவுக்கு வருகிறது:
. . . . அடிமை நெஞ்சம்
புகைதல் போல் தோன்றும் குன்றம் !
(அழகின்சிரிப்பு குன்றம், முகில்மொய்த்த குன்றம்,
வரிகள்: 7 - 8)
கவிஞரின் அடிமனத்தில் சமுதாயச் சிந்தனை எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியுள்ளது, பாருங்கள்!மழையில் - மழைபெய்வதில் என்ன அழகு என்று கேட்கலாம்? நீங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது மழை பெய்வதை வியந்து பார்த்து இரசித்திருப்பீர்கள் ! இல்லையா? மழை பெய்வதற்கு முன்னர், இருண்ட மேகம் சூழும். இடி மின்னல் வரும். கருமேகங்களுக்கு இடையே மின்னல் மின்னுவதும் ஓர் அழகு. இடிமுழங்குவது மழை வருவதை அறிவிக்கும் முரசுபோல் முழங்கும். பிறகு மழை பெய்யும். இவை அனைத்தும் சங்கிலித்தொடர் போல் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளைப் பின்புலமாக வைத்துப் பாரதிதாசன் பாடுகின்றார்.
கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும்
வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து
வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர்,
மழைக் கண்ணீர் உகுத்தது வான் !
(பாண்டியன் பரிசு. இயல் 53. வரிகள்: 2 - 5)பிறர் சொல்வதைக் கேட்டுப் பயன்பெறாதவர்களின் இருள்சூழ்ந்த நெஞ்சத்தைப் போல் மேகம் இருண்டு காணப்படுகிறது என்கிறார். நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் வழக்கு நடத்திக் கொண்டிருப்பவனது செல்வம், திடீரென விரைவிலே அழிவது போல, மின்னல் மின்னி மறைந்துவிடுகிறதாம். தன்னிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், முழுமையாக இழந்து, ஓ ! என்று அலறி அழுது கண்ணீர் விடுபவனைப் போல் இடிமுழங்கி, மேகம் மழையாகிய கண்ணீரைப் பொழிகிறது என்று மிக அருமையாக விளக்குகிறார் பாரதிதாசன்.
மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்துகளில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? ஒரு சமுதாயக் காட்சியையே உங்கள் முன்கொண்டு வந்து பாரதிதாசன் நிறுத்துகிறார். இல்லையா?
கேள்வி அறிவில்லாதவன் உள்ளம் இருள் சூழ்ந்தது; நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடத்திக் கொண்டிருப்போர் செல்வம் அழியும்; கையில் இருக்கும் செல்வங்களையெல்லாம் இழப்பவன் மனத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் துன்பத்தைத் தன் கண்ணீரால் வெளிப்படுத்துவான் என்பவையெல்லாம் இவற்றின் மூலம் புலப்படவில்லையா?
இவ்வாறு இயற்கைக் காட்சிகளின் வாயிலாகத் தம் கருத்துகளைப் பாரதிதாசன் வெளிப்படுத்துகின்றார்.