Primary tabs
-
இயற்கைப் பொருள்களையும், இயற்கையாக அமைந்துள்ள பொழுதுகளையும் பாடிய பாவேந்தர், பறவைகளைப் பற்றியும் சிறப்பாகப் பாடியுள்ளார்.
சமுதாயச் சிந்தனையாளராகிய பாரதிதாசன், இயற்கையிலுள்ள எந்தப் பொருளைப் பற்றிப் பாடினாலும் தன் மனத்தினுள் மறைந்து கிடக்கும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை மறைமுகமாக வெளியிடுவார்.
பறவை இனத்தில் கண்ணைக் கவரும் பச்சை வண்ணம் கொண்டது கிளி. இது, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பறந்து திரிந்து பழங்களைத் தின்னும் இயல்பு உடையது. இந்தக் கிளியைக் கூண்டுக்குள் அடைத்து விட்டால் இயற்கையான அதன் இறக்கைகளால் எந்தப் பயனும் கிடையாது. கூண்டினுள் அடைபட்ட கிளி தனது உணவுப் பொருட்களுக்கு மற்றவர்களைத் தான் நம்பியிருக்க வேண்டும். அதன் உணவாகிய பழங்களை வேண்டுமானால், மற்றவர்கள் கொண்டு வந்து தரலாம். அதன் இறக்கையின் பயனாகிய பறத்தலை யார் கொண்டு வந்து தருவார்?
இயற்கைப் பறவையாகிய கிளி பறந்து திரிவதில்தான் அதன் உண்மையான இன்பம் இருக்கிறது. அதைப் போல ஒரு நாட்டு மக்கள் தங்கள் அரசைத் தாங்களே நிர்ணயிப்பதில்தான் அவர்களின் மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியையும், விடுதலை உணர்வையும் நாம்தான் முயன்று பெறவேண்டும்.
இந்தக் கருத்தைப் பாரதிதாசன், இயற்கைப் பொருளான கிளியை நோக்கிப் பாடுவதுபோல் அமைத்துள்ளார்.
மேலும், கூட்டுக்குள் இருக்கும் கிளி, அக்கா அக்கா என்று அழைத்த உடனேயே, அது திறந்து விடப்படுமா? நிச்சயமாக இல்லை. அதைப்போல் தான், சுதந்திரம் என்பது கேட்ட உடனே கிடைக்கக் கூடிய ஒன்று அல்ல. கடைக்குச் சென்று, சுக்கு வேண்டும், மிளகு வேண்டும் என்று கேட்டு வாங்கக் கூடிய ஒன்றா சுதந்திரம்? என்று வினவுகிறார் பாரதிதாசன். பல போராட்டங்களுக்குப் பின், பல தியாகங்களுக்குப் பின் கிடைக்கக் கூடிய ஒன்று என்பதனை மறைமுகமாகச் சுட்டுகிறார். இயற்கைப் பொருளைப் பாடும்போதும் விடுதலை மனப்பான்மையை ஊட்டும் அளவிற்குச் சமுதாயச் சிந்தனை உடையவராய்க் காட்சி அளிக்கிறார்.
சாதாரண பாமரர் மத்தியிலே வழங்கப்படும் சொற்களைத் தன் கவிதையில் பயன்படுத்தும் ஆற்றல் பாரதிதாசனுக்குக் கைவந்தகலை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதைப்போல் தான், மிகச் சாதாரணமான சொற்களும் பாரதிதாசன் கையாளும் முறைமையால் ஆளுமை பெறுகின்றன.
மயிலின் அழகைப் பற்றிப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். மயிலின் சாயலையும், தோகையையும், நீண்ட கழுத்தினையும் பெண்களுக்கு உவமையாகப் பாடியுள்ளனர். ஆனால் பாரதிதாசன், மயிலின் அழகையும் அதன் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, ஓர் அழகான நடனக் காட்சியை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார்.
தென்றல் காற்றால் சிலிர்க்கின்ற மரங்கள் நிறைந்த சோலை. அங்கு மணம் பொருந்திய அழகிய மலர்கள் உள்ளன. மலரிலுள்ள தேனை உண்பதற்காக வரும் வண்டுகள் ரீங்காரப் பண்ணைப் பாடுகின்றன. கொஞ்சும் மொழியில் கிளி பேசிக் கொண்டிருக்கிறது. கருமை நிறம் பொருந்திய குயில் அமுதம் போன்ற இசை விருந்தை அளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அருமையான சூழலில், மயில் தன் அழகான தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து உள்ளம் மட்டுமல்ல, உடலும் பூரிப்பு அடைகிறது. இந்த அழகான காட்சியைக் கீழ்க்குறிப்பிடும் கவிதையில் வடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.
இனிமையான அழகிய இயற்கைச் சூழல் மிகுந்த ஓர் அரங்கத்தில் மயிலை ஆடவைத்தார். அதோடு அவர் மனம் நிறைவு பெறவில்லை. மேலும் அதன் இயற்கை அழகைப் புகழ்கிறார்.
மயிலின் தோகை, வரையப்படாத, வரையமுடியாத ஓவியம் என்கிறார். அந்தத் தோகையில் பல வண்ணங்களில் கண்போல் பொருந்திக் காட்சி அளிப்பவை, ஒளிபொருந்திய மாணிக்கக் களஞ்சியம் என்று புகழ்கிறார்.
உனதுதோகை புனையாச்சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம் !
(இயற்கை. மயில், வரிகள்: 8 - 9)
மயிலின் அழகில் வயப்பட்டு, தன்னை மறந்திருந்த பாரதிதாசனுக்குத் தன் நினைவு வருகிறது. மயிலை அருகில் அழைக்கின்றார். அருகில் வந்த மயிலிடம், ‘மயிலே! உனக்கு ஒரு செய்தி சொல்வேன். நீயும் பெண்களுக்கு நிகர் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கழுத்தும் உன் கழுத்தும் ஒன்றா? இல்லையே! பெண்கள் அடுத்த வீட்டு நிகழ்ச்சிகளை அறிவதற்கு மிகவும் ஆவலுடையவர்களாக இருப்பார்கள். அத்தகைய பெண்கள் அடுத்த வீட்டை எட்டிப் பார்க்காமல் இருப்பதற்கே இயற்கை அன்னை அவர்களுக்குக் குட்டைக் கழுத்தைக் கொடுத்துள்ளாள். உனக்கோ, இப்படிப்பட்ட குறையில்லாத காரணத்தால் நீண்ட கழுத்தை இயற்கை அன்னை வழங்கியுள்ளாள். இதைக் கேட்டால் பெண்கள் என்னிடம் சினம் கொள்வார்கள். எனவேதான் உன்னிடம் சொன்னேன். பெண்களின் இந்தச் சுருங்கிய உள்ளம் விரிவு அடையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?, இந்த ஆண்களின் கூட்டம்தான். இதை இந்த உலகம் உணர வேண்டும்’ என்று கூறுகிறார் கவிஞர்.
இயற்கையின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் பாரதிதாசன். இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்ற பொழுது தன்னை இழந்து பார்க்கும், நுகரும் பாரதிதாசனுக்குத் தன் நினைவு வந்ததும், சமுதாய உணர்வு மேலோங்கி நிற்கிறது. எனவே, மயிலின் அழகைப் பற்றிக் கூறியவர், திடீரென ஆண் ஆதிக்கச் சமுதாயக் கொடுமைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
இவ்வாறு, மயிலின் இயற்கை அழகினையும், அதன் இயல்பையும், சிறப்பாகப் பாடியுள்ளார் பாரதிதாசன்.