Primary tabs
4.3 தொகுப்புரை
தமிழ்மொழியில் பல அறநூல்கள் தோன்றியுள்ளன. அவை மக்களை நல்ல வழியில் வாழச் செய்கின்றன. இந்த அறநூல் வரிசையில் தோன்றிய வெற்றிவேற்கையும் உலகநீதியும் பல அறங்களைத் தெரிவித்துள்ளன.
கல்வியின் சிறப்பை எல்லா அறநூல்களும் தெரிவித்துள்ளன. அதே கல்வியின் சிறப்பை வெற்றிவேற்கை மாறுபடுத்திக் கூறியுள்ளது. பிச்சை எடுக்கக்கூடாது என்றும் அறநூல்கள் கூறியுள்ளன. கல்வியின் சிறப்பை வலியுறுத்திக் கூற விரும்பிய வெற்றிவேற்கை, ‘பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தாலும் கற்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.
இதைப் போன்றே கல்வி கற்காதவரின் இழிவையும் வெற்றிவேற்கை கூறியுள்ளது. பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று கூறியதால் இரப்பவர்களுக்கு ஈவது, செல்வம் உடையவர்களின் கடமை என்று வெற்றிவேற்கை உணர்த்தியுள்ளது.
உலகநீதி என்னும் நூல் அறக்கருத்துகளைக் கூறியதுடன் முருகன், வள்ளி ஆகியோர் பெருமைகளையும் கூறியுள்ளது.