Primary tabs
-
5.1 பண்பாட்டு வளர்ச்சியில் இடர்ப்பாடுகள்
மொழி சார்ந்த பண்பாடுகளை வளர்க்க உதவும் என்ற பெருநோக்கில்தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் பெற்றன. ஆனால் தமிழ்நாட்டில் மாறாகப் பண்பாட்டு வளர்ச்சியைத் தடுக்கும் இடர்ப்பாடுகள் தாம் இன்று மிகுந்துள்ளன. தமிழ் மொழி புழங்க வேண்டிய துறைதோறும் மாற்று மொழிகளின் ஆதிக்கம், தமிழ்ப் பயன்பாட்டில் வேற்றுமொழிச் சொல்லாட்சி, சாதிய அரசியல், கட்சிப் பூசல் என மொழியின் ஆக்கத்தையும் பண்பாட்டின் தரத்தையும் சிதைக்கும் பழக்கங்கள் தமிழ்நாட்டில் நிலை கொள்ளத் தொடங்கின.
5.1.1 தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்" என்று காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த நிலை மாறியது. வேங்கடம் ஆந்திர மாநிலத்திற்கு உரியதாயிற்று. மாலவன் குன்றம் (திருப்பதி) வடஎல்லை என்ற நிலை மாறி வேலவன் குன்றமாகிய திருத்தணி வடஎல்லையாயிற்று. தேவிகுளம் பீர்மேடு கேரள மாநிலத்திற்கு உரியவை ஆயின. எல்லைகள் குறுகுதல் பற்றிய கவலை தமிழர்க்கு இருந்தது. ஆனால் அதனைவிடப் பெரிய இடர்ப்பாடு தமிழர்க்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் ஆங்கிலம்; அலுவலகங்களில் ஆங்கிலம்; மத்திய அரசுத் துறைகளில் இந்தி; இசையில் தெலுங்கு; வழிபாட்டில், மணவினைகளில் இழவுச்சடங்குகளில் சமஸ்கிருதம் என்று அயல்மொழிகள் தமிழர் வாழ்வின் மூச்சுக்குழலை நெருக்கின.
(தணிப்பரிதாம் = தணிப்பு அரிதாம், தணிப்பது (நீக்குவது) அரிதானதாகும்.)
என்று பாரதிதாசன் கூறுமாறு ஆயிற்று.
நிலப்பரப்பில் தமிழ்நாடு சில பகுதிகளை இழந்தது. தமிழ் மொழி வழங்கும் இடங்களும் சுருங்கியமையால் பலவகையான நெருக்கடிகளுக்கு ஆளாகித் தமிழர் தம் அடையாளத்தை இழந்துகொண்டு இருக்கும் நிலை நிகழ்காலத்திற்குச் சொந்தமாயிற்று. பெரும்பான்மையான தமிழர்கள் நிலம், மொழி ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கவலைப்படவில்லை.
5.1.2 தமிங்கிலம்
எல்லை குறுகிய தமிழகத்தில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் பல திரிபுகளைப் பெற்றது. தூய தமிழ் என்பது மிக அரிதாக ஆயிற்று. ஆங்கிலம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அளவற்றதாகி விட்டது. பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசவும் எழுதவும் பெரும்பான்மையான தமிழர்கள் எந்தவிதமான மறுப்பும் காட்டவில்லை. தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு பேச்சு வழக்கு உருவாயிற்று. காசி ஆனந்தன் கூறுவது போலத் தமிங்கிலம் என்ற புதிய மொழியும் உருவாகிவிடும் சூழல் இன்றைய தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்தி எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி முனைப்பு, தமிழிசை மன்றப் பணிகள், தமிழ் மக்கள் இசைவிழா, தமிழ் வழிபாட்டியக்கப் போர், தமிழ் ஆட்சிமொழி அறிவிப்பு, தமிழ்த் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களும் குடும்ப நிகழ்வுகளும் எனப் பெருகிய முயற்சிகளெல்லாம் முழுதுமாகப் பயன் தந்தன எனக் கூற இயலவில்லை. தன் பண்பாட்டின் மீது நிகழ்ந்த படையெடுப்புகளைத் தமிழன் எதிர்ப்பேயின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டான்.
5.1.3 சாதிய உணர்வு
தமிழரிடையே சாதியம் அழுத்தமாக வேரூன்றிக் குருதியின் பண்பென நிலைபெற்றுவிட்டது. சாதிச் சங்கங்கள் அரசியலிலும் சமூக வாழ்விலும் பெரும்பங்கு பெற்றுவிட்டன. மெல்ல மெல்ல அரசியல் சக்கரத்தின் அச்சாணியே சாதிதான் என்று கூறும் நிலை உருவாகியிருக்கிறது. சாதியைக் கண்டறிந்து கொள்வதில் தமிழன் அதிக நாட்டமுடையவனாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்த இருபதாம் நூற்றாண்டில் சாதிக் கலவரங்கள் ஆங்காங்குத் தோன்றி விடுகின்றன. அரசு சாதிய உணர்வை அழிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றது. கலப்பு மணங்கள், சமபந்தி விருந்துகள், சமத்துவபுரங்கள், பொதுச் சுடுகாடுகள் எனப் பல திட்டங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. எனினும் இவற்றை மீறிச் சாதி உணர்ச்சி பெருகி உள்ளது. படிக்காதவர்களைவிடப் படித்தவர்களிடையே சாதி உணர்ச்சி வலிமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சாதியம் என்ற இந்தப் பண்பாட்டுக் குறையைக் களைந்து கொள்ளத் தமிழர்களால் முடியும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என வாழ்ந்தவர்கள் அவர்கள். 'கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்' எனக் கேட்டவர்கள் அவர்கள். 'சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என அறிவுறுத்தியவர்கள் அவர்கள். 'சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே' என வருந்தியவர்கள் அவர்கள். இன்று சாதிக் கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சாதி பார்க்காமல் ஏனைத் தகுதிகளைப் பார்த்து மணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை மிகுதியாயுள்ளது. பெரியாரின் நீண்ட காலப் பேருழைப்பின் பயன் இது எனக் கூறவேண்டும்.
5.1.4 கட்சிப் பூசல்கள்
ஒரு காலத்தில் தமிழன் மதத்தால் வேறுபட்டுப் பகையும் வெறுப்பும் தம்முள் வளர்த்து மடிந்தான் எனில், இன்று அரசியல் கட்சி பேதங்களால்தான் சமுதாய வீதியில் குருதியாற்றை உருவாக்கி யிருக்கிறான். கட்சிப் போர்களால் சமூக ஒழுக்கமும், தமிழர் பண்பாடும் சிதைந்திருக்கின்றன. பொதுத் தொண்டு என்ற நிலையிலிருந்து அரசியல் நீண்ட தொலைவு விலகிவிட்டது. பதவிக்காக எதையும் இழக்கவும், எதையும் செய்யவும் துணிந்த சமூகநிலை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருப்பது போலவே தமிழகத்திலும் இருக்கிறது. அரசியல் காரணமாகப் படுகொலைகள் நிகழ்கின்றன. 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்ய முடியும்’ என்ற நிலை மாறிவிட்டது. தேர்தல்களில் பணம், சாதி, வன்முறை ஆகியவற்றின் செல்வாக்கு தவிர்க்க இயலாமல் மிகுந்து கொண்டிருக்கின்றது. அரசியலில் அவ்வப்போது தவறு செய்பவர்களைக் குறித்து ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் வழக்கம் நாடெங்கும் இப்போது உள்ளது அல்லவா? இதனால் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளை யெல்லாம் மீண்டும் பணிக்குக் கொண்டு வந்திருக்கின்றன. கலவரத்தை ஏற்றுக்கொள்ளாத உள்ளங்கள் தேர்தல் வாக்குச் சாவடிகளைப் புறக்கணித்த நிலையில் பெட்டியில் விழும் வாக்குச் சீட்டுகளின் விழுக்காடு கணிசமாகக் குறைந்துள்ளது. அடிக்கடித் தேர்தல் என்பதை மக்கள் ஏற்காத நிலை உருவாகியிருக்கிறது.