தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-5.2 தமிழர் பண்பாட்டில் நலிவு சேர்த்தவை

  • 5.2 தமிழர் பண்பாட்டில் நலிவு சேர்த்தவை

    Audio Button

    தமிழர் பண்பாட்டில் மிகப்பெரிய அளவில் நலிவுகளை உண்டாக்கியவை திரைப்படங்கள், அரசியல் கட்சிகள், வன்முறைக் கருத்தில் நம்பிக்கை கொண்ட கூட்டங்கள், மது அருந்துவதைத் தவிர்க்க முடியாத பழக்கமாகப் பழகிவிட்ட சமூகம் ஆகியன தமிழர்கள் சமூகத்திற்கு இன்று மிகப்பெரும் நலிவு சேர்த்து வருகின்றன. பொருள் தேடுதலில் பல குறுக்கு வழிகளை இன்றைய சமூகம் நாடியிருக்கிறது. குற்றம் செய்வதில் ஓர் உறுத்தலை இன்றைய மனச்சாட்சி இழந்திருக்கிறது. தன் நெஞ்சு தன்னைச் சுடும் என்பது எல்லோருக்கும் அமைந்த பொது இலக்கணமாக இல்லை. பொது நிலையில் தனி மனித ஒழுக்கம் பெரிதும் இறங்கிய நிலை எய்தியிருக்கிறது.

    5.2.1 திரைப்படம்

    மிகப்பெரிய அறிவியல் சாதனங்களாகப் பயன்படக்கூடும் எனக் கருதப்பெற்ற திரைப்படம், தொலைக்காட்சி ஆகியன இன்று தமிழனுக்கு பொழுதுபோக்குக் கருவிகளாகி அவனுடைய உண்ணும் நேரம் உறங்கும் நேரத்தையும் பறித்துக் கொண்டுவிட்டன. திரைப்படமே தமிழனின் பண்பாட்டு முதுகெலும்பாகிவிட்டது. திரைப்படத்தில் வருவன எல்லாம் உண்மையாக நிகழக்கூடுமென அப்பாவிப் பாமரத் தமிழன் நம்புகிறான். திரைப்பட நடிகர்களைத் தமிழன் வழிபாடு செய்கிறான். திரைப்பட நடிகைகளின் அழகை ஆராதிக்கிறான்; நடிகைக்குக் கோயிலே கட்டியவன் தமிழன் என்ற 'பெருமை'யை அறுவடை செய்திருக்கிறான். தொலைக்காட்சியை ஓர் அறிவூட்டும் கருவியாக மாற்றிக் கொள்ளத் தமிழன் எண்ணவில்லை.

    5.2.2 வன்முறைப் பண்பு

    தமிழனிடத்தில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு வன்முறைப் பண்பில் நம்பிக்கை வளர்ந்துள்ளது. மறியல்கள், வேலை நிறுத்தங்கள், பணி செய்வாரைச் செய்யவிடாது தடுக்கும் செயல்கள், கதவடைப்புகள், வழக்குகள் எனப் பிணக்கு மனப்பாங்கு பெருகியுள்ளது. உலக முழுவதும் இவை இருந்தாலும், வழிவழியாக அறநெறிவழி ஒழுகும் மனச்சான்றுடைய தமிழினமும் காலவயப்படவேண்டுமா என்பதே நம்முன் தோன்றும் வினா. புரட்சி என்பது மனமாற்றத்தால் விளைவது; குறிப்பிட்ட மாற்றத்தைச் சமூகத்தில் உண்டாக்க முனைவது. ஆழ்ந்த சிந்தனை உடையவர்களே சமூகத்தின் நன்மை கருதிப் புரட்சிகளைக் கொண்டுவரமுடியும். உடல் வலிமையாலும், கலவரம் செய்யும் நோக்கத்தாலும் நன்மைகளை அடைந்துவிடக் கருதுபவர்கள் புரட்சியாளராக ஆக மாட்டார்கள். இவர்கள் செய்வது கலகம் ஆகும். இத்தகைய கலக மனப்பாங்கு தமிழகத்தில் பல இடங்களில் உருவாகியிருக்கிறது. இதன் விளைவாகத் துப்பாக்கிச் சூடுகள், நீதி விசாரணைகள், உயிரிழப்புகள் போன்றவை நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. உடல் வலிமை மிக்க சிலருக்குச் சான்றோர்களின் கூட்டம் அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போகும் நிலை உருவாகியிருக்கிறது.

    5.2.3 மது, போதை, பாலுணர்ச்சி

    இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த இயலாது போனது போலவே தமிழகத்திலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இயலவில்லை. சமயங்கள், அறநிறுவனங்களெல்லாம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து, இளங்கோவும் சாத்தனாரும் எண்ணியது போல இன்று எண்ணவில்லை. விதை நெல்லாகவும் நாற்றாகவும் அமையும் இளைஞர் கூட்டம் போதை மருந்துக்கு இரையாகி வருகிறது. பாலுணர்ச்சிக் குற்றங்கள் எண்ணிக்கையில் கூடி வருகின்றன. இவையெல்லாம் தமிழர் பண்பாட்டில் இன்று படிந்துள்ள கறைகள்; குறைகள். இவற்றைக் கழுவித் துடைக்கவும் நீக்கவும் தமிழர்களால் முடியும். தமிழகம் சிற்சில போது தவிர ஏனைய காலங்களில் எல்லாம் அமைதிப் பூங்காவாகவே இருந்திருக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:06:27(இந்திய நேரம்)