Primary tabs
-
5.6 கிராமங்கள்: தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களன்கள்
வாசலில் கோலமிடுதல், கோலத்தின் நடுவே பரங்கிப்பூவை வைத்தல், திண்ணையையும் தெருவையும் சாணமிட்டு மெழுகுதல், தரையோடு போடப்பட்ட அடுப்பு, பெரும்பாலும் மண்பாண்டங்கள், புளியிட்டுத் துலக்கிய பித்தளைக் குடம் தவலைகள், சுரைக்கொடி படர்ந்த கூரைவீடுகளுக்கு இடையே ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள், மாலையில் திண்ணை மாடத்தில் விளக்கேற்றுதல், பெண்கள் தலையைப் பின்னலிட்டுப் பூச்சூடிக் கொள்ளுதல், மகளிர் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளிலும் ஆடவர் புதன் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு ஆடல், மகளிர் காது மூக்குக் குத்திக் கொள்ளுதல், உடம்பிற்குச் சீயக்காய், ஆவாரந்தூள், செம்பருத்தி இலை ஆகியவற்றைத் தேய்த்து நீராடல், மணமான மகளிர் காலில் மெட்டி அணிதல், கழுத்தில் தாலிக்கயிறு, காலில் கொலுசு, கையில் வளையல் அணிதல், மாமன், மாமன் மகன், அத்தை மகன் என உறவுமுறையில் திருமணம் செய்தல், திருமணத்திற்குமுன் பரிசம் போடுதல், திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளுதல், தாலி கட்டுதல், மெட்டியிடுதல், அம்மி மிதித்தல், நலுங்கு வைத்தல் ஆகிய சடங்குகள் நடைபெறும். இவையெல்லாம் இன்றைக்கும் மிக உள்ளொடுங்கிய சிறிய கிராமங்களில் தவறாது காணப்படும் பண்பாட்டுக் களங்களாகும்.
5.6.1 கிராமியப் பழக்கங்கள்
கிராமத்திற்கென்று அமைந்த சில பழக்கங்கள் இவைதாம் தமிழர் பண்பாடு என்று நமக்குக் காட்டுகின்றன. இங்கே திருமணத்தின்போது கூறைப்புடைவை சட்டை அணிந்து பெண் நெற்றியில் திலகம் தீட்டிக் கொள்வாள். ஆடவன் எட்டு முழத்தில் கரையிட்ட வேட்டியும் சட்டையும் அணிவான். திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் பணத்தை அன்பளிப்பாக வழங்குவர். அதை மொய் எழுதுதல் என்பர். திருமண விருந்தில் பெரும்பாலும் சைவ உணவே இடம்பெறும். சில இடங்களில் இறைச்சி உணவும் உண்டு. இசுலாமியர் திருமணத்தின் போது இறைச்சி கலந்த சோற்று விருந்து படைப்பர். பின்னால் மகப்பேறு தாய்வீட்டில் ஊர் மருத்துவச்சி துணையோடு நிகழும். குழந்தைக்கு அரைஞாண் பூட்டும் வழக்கம் உண்டு. பூப்பெய்துதல் சடங்கு, வளைகாப்புச் சடங்கு, தாலி பெருக்கிக் கட்டும் சடங்கு ஆகியன இன்றும் மாற்றமின்றி நடைபெறுகின்றன.
(அரைஞாண் பூட்டுதல் என்பது பச்சிளம் குழந்தைக்குத் தெய்வப் பாதுகாப்பு கருதித் தெய்வத்தின் படைக்கலன்களைப் பொன்னால் உருவாக்கிக் கயிற்றில் கோர்த்து அணிவித்தல் ஆகும்.
பூப்பெய்துதல் ஆவது பெண் பருவம் அடைகின்ற நிகழ்ச்சியைக் கொண்டாடும் சடங்கு ஆகும்.
வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணுக்குத் தெய்வம் பாதுகாப்புத் தர வேண்டி, தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, வளையல் இடுவதாகும்.
தாலி பெருக்கிக் கட்டுதல் ஆவது புது மணப்பெண் ஆடி மாதத்தில் தாலியைப் புது மஞ்சள் கயிற்றில் சேர்த்துக் கட்டிக் கொள்வதாகும்.)
மகளிர் எட்டுமுழம், பதினாறுமுழம் கொண்ட நூற்சேலைகளை உடுத்துவர்; சிறப்பு நாட்களில் பட்டுச்சேலை உடுத்துவர். திருமணம் போன்ற நாட்களிலும், சிறப்பு விருந்துகளிலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளுதலும் உண்டு.
இதுபோலப் பல பழக்கங்கள் கிராமத்திலிருந்து இன்றும் விடைபெறவே இல்லை.
5.6.2 கிராமியச் சடங்குகள்
வழிவழியாகக் கிராமத்தில் வரும் சடங்குகள் பலப்பல இருக்கின்றன. பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான சடங்குகளில் கடைப்பிடிக்கப்பெறும் சில பழக்கங்களுக்குக் காரண காரியம் இன்று அறியப்படவில்லை.
கணவன் இறந்தபின் கிராமங்களில் மகளிர் பூச்சூட்டுதலோ பொட்டிட்டுக் கொள்வதோ இல்லை. பிணத்தைப் பெரும்பான்மை எரித்தலும், சிறுபான்மை புதைத்தலும் மேற்கொள்ளப்படும். இறந்த மறுநாள் பால் தெளிப்பு, பதினாறாம் நாள் காடாற்று கருமாதி ஆகியன நிகழும். பிணத்திற்கு மூத்த மகனே தீயிடுவான். நீர்க்குடம் உடைத்தல், எலும்புகளை ஆற்றில் கரைத்தல் ஆகியன குறிக்கத்தக்க இறப்புச் சடங்குகளாகும். இறந்தவரின் நினைவு நாளைப் போற்றுதல், அவர்களுக்குப் படையலிடுதல் ஆகியன இன்றும் வழக்கிலிருக்கும் சடங்குகளாகும்.