தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரசர்கள

  •  
    2.1 அரசர்கள்

    அரசர்கள் திருமாலின் அம்சமாகப் பிறந்தனர் என்பர். காமன் போல் அழகுடையவர் என்றும் கல்வெட்டுகள் கூறும். அவர்கள் பிறந்ததை, ‘திரு அவதாரம் செய்த’தாகக் கல்வெட்டுகள் குறிப்பிட்டன. தமிழக அரசர்கள் பலர் தம் தந்தை காலத்தில் இளவரசர்களாக நியமிக்கப் பெற்றிருந்தனர். பிள்ளையார் என்று கூறப்பட்ட அவர்கள் இளங்கோ அல்லது யுவராஜா என்றும் அழைக்கப்பட்டனர்.
     

    2.1.1 அரசர்கள் குலமும் சிறப்பும்

    சக்கரவர்த்தி, சகலலோகச் சக்கரவர்த்தி, திரிபுவனச் சக்கரவர்த்தி, மகாராசா, கோனேரின்மை கொண்டான் என்றும் அரசர்கள் அழைக்கப்பட்டனர். பல்லவ அரசர்கள் கோவிசைய என்ற அடைமொழியைப் பெயருக்கு முன்னர்ச் சேர்த்துக் கொண்டனர். வர்மன் என்ற பட்டத்தைப் பெயருக்குப் பின்னரும் சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு சேர்த்துக் கொண்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. விசய நகர மன்னர்கள் இராயர், மகாராயர் எனக் கூறப்பட்டனர். பெருமானடிகள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர்.
     

    • குலமும் சிறப்புப் பட்டமும்

    சோழ மன்னர்களுக்கு உரியது சூரிய குலம். பாண்டிய மன்னர்கள் தங்கள் குலம் சந்திர குலம் என்றனர். சேர மன்னர்கள் சந்திராதித்ய குலத்தவர் என்று குறிக்கப்பட்டனர். பல்லவர்கள் சிலர் தங்களைப் பாரத்வாஜகுலம் என்றும் கூறிக் கொண்டனர். அதியமான் மரபினர் அஞ்சி, எழினி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறி வைத்துக் கொண்டனர். சோழ அரசர்கள் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறிப் பெற்றனர். பாண்டிய அரசர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களையும், முற்காலச் சேரர்கள் வானவரம்பன், இமயவரம்பன் என்ற பட்டப் பெயர்களையும் மாறி மாறிப் புனைந்து கொண்டனர்.
     

    • மெய்க்கீர்த்திகள்

    பல அரசர்கள் தங்களின் முக்கிய வெற்றிச் சிறப்பைக் குறிக்கும் தொடர்களைத் தங்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்த்துக் கொண்டனர். அவை மெய்க்கீர்த்திகள் எனப்பட்டன. பொதுவாக அவை அரசனின் வெற்றிச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் கூறும். பாட்டியல் இலக்கண நூல்கள் மெய்க்கீர்த்திகட்கு இலக்கணம் கூறுகின்றன. ‘தஞ்சை கொண்ட பரகேசரி’, ‘தொண்டை நாடு பாவின ஆதித்தன்’, ‘ஈழமும் மதுரையும் கொண்ட பராந்தகன்’, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவன்’, ‘கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரன்’, ‘வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தன்’, ‘சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன்’ என்பன சில அரசர்களின் சிறப்பு அடைமொழிகளாக விளங்கின. இச்சுருக்கமான தொடர்களே பின்னர் மெய்க்கீர்த்திகளாக மாறிப் பெரும்பான்மையான கல்வெட்டுகளில் அவர்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்க்கப் பெற்றன. ஒவ்வொரு அரசருக்கும் தனியாகத் தொடங்கும் மெய்க்கீர்த்திகள் உண்டு. இராசராசன் மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். இராசேந்திரசோழன் மெய்க்கீர்த்தி ‘திருமன்னிவளர’ என்று தொடங்கும். ஒரே அரசருக்குப் பலவகைத் தொடக்கங்களைக் கொண்ட பல மெய்க்கீர்த்திகளும் உண்டு.

    நாடு அரசனுக்கு உரிமை உடையது. ‘பெருநிலச் செல்வியைத் தனக்கேயுரிமை பூண்டு’ இராசராசன் வாழ்ந்ததாக அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. ‘இருநில மடந்தையைத் தன்பெரும் தேவியாகக் கொண்டான்’ என்று இராசேந்திரன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. உடையார், தேவர், நாயனார், பெருமாள், ஐயன் என்ற அடைமொழிகள் அரசர்களின் பெயருக்கு முன்பும், பின்பும் சேர்த்துக் குறிப்பிடுவார்கள்.
     

    • அரசிருக்கையும் சின்னமும்

    அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரிந்த சிம்மாசனம் ஆகிய இருக்கைகளும் பெயர் சூட்டப் பெற்றிருந்தன. சிம்மாசனம் அரியணை எனப்பட்டது. பாண்டியராசன், மழவராயன், முனையதரையன், காலிங்கராயன் என அரியணைகள் தனிப் பெயரிட்டு அழைக்கப்பட்டன. அவை பள்ளிப்பீடம், பள்ளிக்கட்டில் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும். சோழர் புலிக்கொடியும், சேரர் வில்கொடியும், பல்லவர் நந்திக்கொடியும், விசயநகர மன்னர்கள் பன்றிக் கொடியும், வாணர்கள் கருடக் கொடியும் பெற்றிருந்தனர். பாண்டியர் கொடியில் இரட்டை மீன் இருக்கும். வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட என்பது கல்வெட்டுத் தொடர். இணைக்கயல்கள் என்றும் இதனைக் கூறுவர்.
     

    • உயர்வு நவிற்சி

    பிற்காலத்தில் சிறு நிலப்பகுதியை ஆட்சிபுரிந்த குறுநிலத் தலைவர்கள் பேரரசர்கட்கு ஒப்பாகத் தங்களைப் புகழ்ந்து கல்வெட்டுகளைப் பொறித்துக் கொண்டனர். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய எல்லாத் திசைகளிலும் ஆட்சி புரிந்தவராகப் ‘பூருவ தட்சிண பச்சிம உத்தராதிபதி’ என்று அவர்கள் தம்மைக் குறித்துக் கொண்டனர். எல்லா நாடுகளையும் வென்று கைப்பற்றியவர்கள் என்பது தோன்றுமாறு ‘எம்மண்டலமும் கொண்டான்’ என்றும், ‘கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்’ என்றும் தங்களைக் கூறிக் கொண்டனர். ஏழுகடலையும் அதிபதியாக உடையவர் என்ற பொருளில் சத்த சமுத்திராதிபதி எனக் கூறிக் கொண்டனர். ‘திக்கு அனைத்தும் சக்கரம் நடாத்தி’ அரசு புரிந்ததாகவும் கூறிக் கொண்டனர். இவை, உயர்வு மொழியாகப் படைத்துக் கூறப்பட்டவை ஆகும். மூன்று உலகிற்கு அரசர் என்ற பொருளில் திரிபுவனச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டனர். சம்புவராயர்கள் தம்மை, சகலலோகச் சக்கரவர்த்தி என அழைத்துக் கொண்டனர்.
     

    2.1.2 வாரிசுகள்

    பெரும்பாலும் அரசுரிமை மூத்த புதல்வருக்கே உரியதாக இருந்தது. இம்முறை மக்கள் தாயம் என்று அழைக்கப்பட்டது. மூத்த புதல்வன் மரணமடைந்தால் இளைய புதல்வன் அரசனானான். அரசனின் மகன் இளவயதினனாக இருந்தால், அரசனின் தம்பி பட்ட மேற்பதும் உண்டு. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின்னர் (1012 - 1044) அவன் மக்கள் மூவர் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர். அவர்கள் முதலாம் இராசாதிராசன் (1018 - 1054), இரண்டாம் இராசேந்திரன் (1051 - 1063), வீரராசேந்திரன் (1063 - 1070) ஆகியோர் ஆவர். சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்தகரிகாலன் இளவரசனாகப் பட்டமேற்றிருந்தபோது இறக்கவே, இளைய மகன் முதலாம் இராசராசன் பட்டம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இராசராசன் இளையவனாக இருக்கவே, அவனின் சிறிய தந்தை உத்தம சோழன் பட்டம் ஏற்றதாக அறிகின்றோம்.
     

    • நேர் வாரிசு இல்லாதவரும் முடிசூடல்

    கி.பி. 1070ஆம் ஆண்டு, முதலாம் இராசேந்திரன் பேரனும், வீரராசேந்திரன் மகனுமான அதிராசேந்திரன் மரணமடையவே, முதலாம் இராசேந்திரன் மகள் அம்மங்கைதேவியின் மகன் (கீழைச்சாளுக்கிய இராசராச நரேந்திரன் மகன்) இராசேந்திரன் கீழைச்சாளுக்கிய மரபினனாக இருந்தும் சோழ அரசனாக குலோத்துங்கன் என்ற பெயரில் முடிசூட்டப் பெற்றான்.

    பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரவர்மன் (705-710) ஆட்சிக்குப் பின் அரசன் இல்லாதபோது பல்லவர் மரபில் வந்த இரணியவர்மன் மகன் பல்லவ மல்லனை (12 வயது உடையவன்) அரசனாகத் தேர்ந்தெடுத்து நந்திவர்மன் என்று பெயர் சூட்டினர்.

    சேரமான் பெருமாள் தனக்கு வாரிசு இல்லாமையால், பூந்துறை இளைஞர்கள் மானீச்சன், விக்கிரமன் ஆகியோரை அரசராக்கினார் என்று வரலாற்று ஆவணங்களும், இலக்கியங்களும் கூறுகின்றன.
     

    2.1.3 இளவரசர்கள்

    சோழர் மரபில் முதல் பராந்தகன், இராசாதித்தனுக்கு இளவரசாக முடிசூட்டினான். சுந்தர சோழன், ஆதித்த கரிகாலனை இளவரசனாக்கினான். முதலாம் இராசராசன், இராசேந்திரனை 1012ஆம் ஆண்டு இளவரசாக்கி முடிசூட்டினான். இளவரசர்களும் தம் பெயரில் கல்வெட்டுகள் பொறித்துக் கொண்டதை அறிகின்றோம். அரசராக முடிசூடும்போது சிலர் பிள்ளைப்பருவப் பெயரினை மாற்றிப் புதுப் பெயர் பெற்றனர். அருள்மொழித் தேவன் என்பது இராசராசனின் இளமைப்பெயர். இராசேந்திரன் இளமையில் மதுராந்தகன் என்ற பெயரினைப் பெற்றிருந்தான். அவர்கள் முடிசூடிய நாள் அபிஷேகம் பண்ணின முகூர்த்தம் என்று கூறப்படும். சேர மரபில் இளங்கடுங்கோ, இளங்கோ ஆனபோது முனிவர்களுக்குக் கொடுத்த கொடையைப் புகலூர் ஆறுநாட்டார் மலைக் கல்வெட்டுக் கூறுகிறது. “இளங்கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்” என்பது அதைக் குறிக்கும் கல்வெட்டுத் தொடராகும். இளவரசர்கள் சில தனிப்பகுதியில் ஆட்சி செய்து பயிற்சி பெற்றனர். தந்தைக்காகச் சில இளவரசர்கள் போரிலும் ஈடுபட்டனர். இராசேந்திரனின் மகன் இளவரசனாக, சோழபாண்டியன் என்ற பெயருடன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது.
     

    2.1.4 பெண் கொள்வதும் கொடுப்பதும்

    சோழ அரசர்கள், சேரர், பாண்டியர், கீழைச் சாளுக்கியர் குடும்பத்திலிருந்தும் மழவரையர், பழுவேட்டரையர், இருக்குவேளிர், விழுப்பரையர், முத்தரையர் போன்ற பல குறுநில மன்னர்கள் குடும்பத்திலிருந்தும் பெண் எடுத்தனர். அதேபோல் தம் பெண்களையும் மணமுடித்துக் கொடுத்தனர். வேளிர்களை, அரசர்களுக்கு மகட்கொடைக்கு உரிமையுடையவர் என அழைப்பர். இராசராசன் தேவியார் வானவன்மாதேவி சேர குலத்துப் பெண். இராசராசன் மகள் குந்தவை கீழைச் சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனை மணந்தாள். இராசேந்திரன் என்னும் இயற்பெயரையுடைய முதல் குலோத்துங்கன், கங்கை கொண்ட சோழனான முதலாம் இராசேந்திர சோழன் மகள் அம்மங்காதேவிக்கும் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:10:07(இந்திய நேரம்)