தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப் பிரிவுகள்

  • 2.4 நாட்டுப் பிரிவுகள்

    தமிழகம் பல மண்டலங்களாகவும், வளநாடுகளாகவும், நாடுகளாகவும், ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இன்றைய மாநிலங்கள் போல மண்டலங்களும், மாவட்டங்கள் போல வளநாடுகளும், வட்டங்கள் போல நாடுகளும் இருந்தன. நாடுகளுக்குச் சமமாகக் கூற்றங்கள் என்ற பகுதிகளும் விளங்கின. விசயநகர மன்னர் காலத்தில் ‘உசாவடி’ அல்லது ‘சாவடி’ என்ற பிரிவும் (பகுதியும்) இருந்தது.
     

    2.4.1 மண்டலங்கள்

    சோழப் பேரரசர் காலத்தில் தொண்டைநாடு, செயங்கொண்ட சோழ மண்டலம் என்றும், இலங்கை மும்முடிச் சோழமண்டலம் என்றும், கங்கபாடி முடிகொண்ட சோழமண்டலம் என்றும், சேரநாட்டுப் பகுதி மலைமண்டலம் என்றும், கொங்கு நாட்டுப் பகுதி அதிராசராச மண்டலம் என்றும், கீழைச் சாளுக்கிய நாடு ‘வேங்கி மண்டலம்’ என்றும் வழங்கப்பட்டன. மண்டலங்களும், அவற்றிற்குட்பட்ட வளநாடுகளும் அரசன் பெயராலும், பட்டப் பெயராலும் வழங்கப்பட்டன. நாடுகளும், கூற்றங்களும் தலைநகரான ஊர்ப் பெயரால் அமைந்தன.
     

    2.4.2 வளநாடுகள்

    சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள், இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு வந்தது. அவ் வளநாடுகள் ஒன்பதும், முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை இராசேந்திர சிங்க வளநாடு, பாண்டி குலாசனி வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசாசிரய வளநாடு, நித்தவினோத வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, சத்திரிய சிகாமணி வளநாடு, அருள்மொழிதேவ வளநாடு, இராசராச வளநாடு என்பனவாம். இவ் வளநாடுகள் பெரும்பாலும் இரண்டு ஆறுகட்கு இடைப்பட்ட பகுதிகளாக விளங்கின. இதை, ‘அரிசிலுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட உய்யக்கொண்டான் வளநாடு’ என்ற கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். குலோத்துங்க சோழன் காலத்தில், இராசேந்திர சிங்க வளநாடு உலகுய்யவந்த வளநாடு, விருதராச பயங்கர வளநாடு என இரண்டாகப் பிரிந்தது. சத்திரிய சிகாமணி வளநாடு, குலோத்துங்கசோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. விக்கிரம சோழன் காலத்தில் உலகுய்யவந்த வளநாடு, விக்கிரம சோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. இவ்வாறே வேறு சில நாடுகளும் பெயர் மாற்றம் பெற்றன.
     

    • நாடுகள்

    வளநாடுகட்கு உட்பட்டு, நாடுகளும் கூற்றங்களும் இருந்தன. இவைகள் தலைநகரங்களாக இருந்த பேரூர்களால் பெயர் பெற்றன. நல்லூர் நாடு, நறையூர்நாடு, இன்னம்பர்நாடு, திருவழுந்தூர்நாடு, திருஇந்தளூர்நாடு, நாங்கூர்நாடு, ஆக்கூர்நாடு, அம்பர்நாடு, மருகல்நாடு, திருக்கழுமலநாடு, திருவாலிநாடு, வெண்ணையூர்நாடு, குறுக்கைநாடு, நல்லாற்றூர்நாடு, மிழலைநாடு, உறையூர்க் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், ஆவூர்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், திருவாரூர்க் கூற்றம், பட்டினக் கூற்றம், வலிவலக் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம் என்பன சோழநாட்டு நாடு, கூற்றங்கட்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இவை ஏறக்குறைய 210 ஆகும்.
     

    • பாண்டிய நாட்டுப் பிரிவுகள்

    பாண்டிய நாட்டில் மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு போன்ற வளநாடுகள் இருந்தன. வளநாடுகட்கு உட்பட்டு இரணியமுட்டநாடு, களக்குடிநாடு, செவ்விருக்கைநாடு, பூங்குடிநாடு, கீரனூர்நாடு, களாந்திருக்கைநாடு, அளநாடு, துறையூர்நாடு, வெண்பைக்குடிநாடு, நேச்சுரநாடு, ஆசூர்நாடு, சூரன்குடிநாடு, முள்ளிநாடு முதலிய நாடுகளும், தும்பூர்க் கூற்றம், கீழ்க்களக் கூற்றம், மிழலைக் கூற்றம் முதலிய பல கூற்றங்களும் இருந்தன. ஒல்லையூர் நாடு என்று பழங்காலத்தில் வழங்கிய நாடு பிற்காலத்தில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப் பெற்றதெனக் கல்வெட்டுகளால் அறிகின்றோம்.

    பாண்டிய நாடு, ஏழு வளநாடுகளையும், ஐம்பத்திரண்டு நாடுகளையும் கொண்டிருந்தது.
     

    • கொங்குநாட்டுப் பிரிவுகள்

    கொங்குநாடு என்பது தொண்டைநாடு போலத் தனித்து இயங்கிய ஒரு நாடு. பூலாங்குறிச்சிக் கல்வெட்டில், கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாடு குறிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாடு 24 உள்நாடுகளை உடையது. அண்டநாடு, ஆறைநாடு, அரையநாடு, ஆனைமலைநாடு, இராசிபுரநாடு, தென்கரைநாடு, வடகரைநாடு, காங்கயநாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்காநாடு, கிழங்குநாடு, குறுப்புநாடு, தட்டயநாடு, தலைய நாடு, நல்லுருக்காநாடு, பூந்துறைநாடு, பூவாணியநாடு, பொங்கலூர் நாடு, மணநாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு, வையாபுரிநாடு என்பனவற்றைக் கல்வெட்டுகளில் காணுகிறோம். பிற்காலத்தில் மக்கள் குடியேற்றம் பெருக நாடுகளும் பெருகின. 24 உள்நாடுகளைக் கொண்ட கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இராசராசபுரம் சூழ்ந்த நாடு 24, டணாயக்கன் கோட்டை சூழ்நாடு 6, குன்றத்தூர் துர்க்கம் சூழ்ந்த நாடு 12 என 42  உள்நாடுகள் ஏற்பட்டன.
     

    • பல்லவர் நாட்டுப் பிரிவுகள்

    பல்லவர் ஆட்சிப் பகுதியின் வடபகுதியில் முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் ஆகியவை விளங்கின. அதன் உட்பகுதி விஷையம் எனப்பட்டது. தலைநகர் காஞ்சி சூழ்ந்த தொண்டைநாட்டில் பழைய 24 கோட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டனர். அவற்றுள் சில புழல்கோட்டம், ஈக்காட்டுக்கோட்டம், மணவிற்கோட்டம், செங்காட்டுக்கோட்டம், பையூர்க்கோட்டம், எயில்கோட்டம், தாமல்கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், களத்தூர்க்கோட்டம், செம்பூர்க்கோட்டம், ஆம்பூர்க்கோட்டம், வெண்குன்றக் கோட்டம் என்பனவாம்.
     

    பல்லவ நாட்டுப் பிரிவுகள்  இருபத்து நான்கு கோட்டங்களைச் சேர்ந்த 79 நாடுகள் ஆகும்.
     

    2.4.3 ஊர்கள்

    நாடு, கூற்றம், கோட்டங்கட்கு உட்பட்டு ஊர்கள் இருந்தன. பெரும்பாலும் வேளாளர்கள் வாழ்ந்த ஊர்கள் ஊர் என்றும், வணிகர்கள் வாழ்ந்த ஊர்கள் புரம் என்றும், அந்தணர்கள் வாழ்ந்த ஊர்கள் மங்கலம், பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் என்றும் வழங்கப்பட்டன. சிதம்பரம் போன்ற பெரிய ஊர்கள் தனியூர் என்றும் வழங்கப்பட்டன. படைவீரர்கள் தங்கிய பாதுகாப்பிற்குரிய ஊர்கள் சாவடி எனப்பட்டன. வழுதலம்பட்டுச்சாவடி, திருச்சிராப்பள்ளிச்சாவடி, இராசராசபுரச்சாவடி என்பன சில சாவடிகளாம். ஊர் ஆள்வோர் ஊரார் என்று கூறப்பட்டனர். சில ஊர்களுக்குத் தனி அலுவலர் இருந்தனர். ஊராள்கின்ற பல்லவன் பிரமதரையன் என்பது ஒரு கல்வெட்டுத் தொடர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-10-2017 18:54:28(இந்திய நேரம்)