தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அலுவலர்கள்

  • 2.3 அலுவலர்கள்

    தமிழகத்தில் அரசர்களது ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் பொதுநலமும் அனுபவமும் மிக்க அலுவலர்கள் பலர் பல்வேறு துறைகளில் பொறுப்புடன் பணியாற்றி நல்லாட்சி புரிந்தனர். பொதுவாக அவர்கள் பெருந்தரம், சிறுதரம் அல்லது பெருந்தனம், சிறுதனம் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் அரச குடும்பத்தாராகவும் இருந்தனர். இராசேந்திரன் சோழன் காலத்தில் பாண்டிய நாட்டை நிர்வகிக்க, அவன் மகனே ‘சோழபாண்டியன்’ என்னும் பெயரில் ஆட்சி புரிய மதுரைக்கு அனுப்பப்பட்டான். முன்பு இராசமகேந்திரன் என்னும் இளவரசன் தொண்டை நாட்டுப் பகுதியை நிர்வகித்து வந்தான். மதுராந்தகன் என்பான் ‘சோழ கங்கன்’ என்று பெயர் பெற்றுச் சேலம் மாவட்டப் பகுதியில் அதிகாரத்தில் இருந்துள்ளான். கண்டராதித்தன் மகன் ஒருவன் மதுராந்தகன் கண்டராதித்தன் என்று பெயர் பெற்றவன் சோழ நாட்டுக் கோயில்களின் தணிக்கை உயர் அலுவலனாகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றி வந்தான். சிலப்பதிகார காலத்தில் மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தவுடன் கொற்கையில் இருந்த இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அரசுப் பொறுப்பேற்றான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
     

    2.3.1 உயர் அலுவலர்

    உத்தரமந்திரி, ஆளும் கணத்தார், உடன் கட்டத்து அதிகாரிகள், உள்படு கருமத் தலைவர், திருமந்திர ஓலைநாயகன் போன்றோர் உயர் அலுவலர்களாகத் திகழ்ந்துள்ளனர். சேனாபதிகள் பலர் படையின் உயர் தலைவர்களாக இருந்துள்ளனர். வரிக்கூறு செய்வார் பல்வேறு வகையான வரிகளை நிர்ணயம் செய்தனர். நாடு கூறு செய்வார், நாடுகளையும், ஊர்களையும் அளந்து எல்லைகள் நிர்ணயம் செய்து, வரிக்கடமைகளை நிர்ணயம் செய்து, வசூல் செய்ய உதவியாக இருந்தனர். மண்டல முதலிகள், நாடுகண்காணி செய்வார் முதலியோர் மண்டலம், வளநாடு, நாடுகளின் பொறுப்பாளராக இருந்தனர்.
     

    2.3.2 அரசு அலுவலர்

    புரவுவரித் திணைக்களம் என்பது இன்றைய ‘ரெவின்யூ போர்டு’ போலப் பணியாற்றியது. அதன் உறுப்பினர்கள் புரவுவரித் திணைக்களத்தார் எனப்பட்டனர். அதன் தலைவர் புரவுவரித்திணைக்கள நாயகம் என்று கூறப்பட்டார். கண்காணி என்பது மேற்பார்வையாளர் பெயர். வரிப் பொத்தகம், கணக்கு, வரியிலிடு, முகவெட்டி, கீழ்முகவெட்டி, பட்டோலை, கீழ்க்கணக்கு, கரணம் போன்ற பல அலுவலர்கள் பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. ‘ஸ்ரீகார்யம் செய்வார்’ ஆலயங்களிலும், சமயம் தொடர்பான காரியங்களிலும் ஈடுபட்டனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஸ்ரீகார்யம் செய்பவராக இராசராசன் காலத்தில் நியமிக்கப்பட்டவர் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன் ஆன தென்னவன் மூவேந்த வேளான் என்பவன். விசய நகர மன்னர்கள் காலத்திற்குப்பின் மகாமண்டலேசுவரன், பிரதானி, தளபதி, காரியத்துக்குக் கர்த்தர் போன்ற உயர் அலுவலர்களும், கந்தாசாரம், அட்டவணை, சேனாபாகம், சேர்வைகாரர் போன்ற கீழ்நிலை அலுவலர்களும் இருந்தனர். பத்திரங்கள் பதிவு செய்யுமிடம் ஆவணக் களரி எனப்பட்டது. நாடாழ்வான், ஊராழ்வான் என்ற அலுவலர்களும் இருந்துள்ளனர்.
     

    2.3.3 அலுவலர் பெயர்கள்

    சேனாபதி குரவன் உலகளந்தான் ஆன இராசராச மாராயன், ஈராயிரவன் பல்லவரையன் ஆயின மும்முடி சோழபோசன், பாளுர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன், கிருஷ்ணன் ராமன் ஆன மும்முடி சோழ பிரமராயன், சேனாபதி அரையன் கடக்கங்கொண்ட சோழன், இராசராச அணிமுரி நாடாழ்வான் போன்றவர்கள் சோழர்கால உயர் அலுவலர்கள் ஆவர். வேளாளர்கள் மூவேந்தவேளான் என்றும், அந்தணர்கள் பிரமராயன் என்றும் பட்டம் பெற்றிருந்தனர். காலிங்கராயன், கச்சிராயர், மழவராயர், பல்லவராயர் என்பன போன்ற பட்டப் பெயர்களும் அரசு அலுவலர்கட்கு அளிக்கப்பட்டன.

    1)
    முதல் இராசராசன் இளவரசு என யாருக்கு முடி சூட்டினான்?
    2)
    பாண்டிய மன்னர்கள் தங்கள் குலம் என்ன என்று அழைத்துக் கொண்டனர்?
    3)
    அரசர் வீற்றிருந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
    4)
    மூத்த புதல்வருக்கு அரசுரிமை வழங்கியது எவ்வாறு அழைக்கப்பட்டது?.
    5)
    அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-10-2017 18:52:04(இந்திய நேரம்)