தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    புறம் என்ற சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி 1. வெளியிடம், 2. அன்னியம், 3. புறத்திணை, 4. புறநானூறு, 5. வீரம், 6. பக்கம், 7. முதுகு, 8. புறக்கொடை, 9. பின்புறம், 10. புறங்கூற்று, 11. அலர்மொழி, 12. பட்சபாதம், 13. இடம், 14. இறையிலி நிலம் (வரி விதிக்கப்படாதநிலம்) 15. ஏழாம் வேற்றுமை உருபுகளில் ஒன்று, 16. திசை, 17. காலம் என்ற பொருள்களைத் தந்துள்ளது. இவற்றுள் இங்கு வெளியிடம், புறத்திணை, புறநானூறு, வீரம் என்ற நான்கு பொருள்கள் கருதத்தக்கன.

    ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் காதல் வாழ்க்கை அகம் எனப்படும். இந்த அகவாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கியம் அகப்பொருள் இலக்கியம் என்றும், இந்த அக ஒழுக்கம் அகத்திணை என்றும் கூறப்பெறும். இந்த அகவாழ்க்கை அல்லாத வாழ்க்கை புறம் எனப்படும். புற வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கியம் புறப்பொருள் இலக்கியம் என்றும் இப்புற ஒழுக்கம் புறத்திணை என்றும் கூறப்பெறும். புறவாழ்க்கை நிகழ்ச்சிகள் பலரும் அறிய வெளியிடங்களில் நடப்பன. புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது.

    சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப்பெறும் பதினெட்டு நூல்களில் இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் 2361. இவற்றுள் அகப்பொருள் பற்றியன 1862; புறப்பொருள் பற்றியன 498.

    புறப்பொருள் நூல்களில் புறநானூற்றில் 398 பாடல்களும், பதிற்றுப்பத்தில் 80 பாடல்களும் கிடைக்கின்றன. புறப்பொருள் பற்றிய நூல்களில் அளவில் பெரியது புறநானூறு ஆகும். பரிபாடலில் 14 பாடல்களும், பத்துப்பாட்டில் 6 பாடல்களும் புறப்பொருள் பற்றியன. ஆகப் புறப்பொருள் பற்றிய பாடல்கள் 498 என அறியலாம்.

    புறநானூற்றில் உள்ள பாடல்கள் பல்வேறு சூழல்களில் பாடப்பெற்றவை. இந்நூலைக் குறித்துப் பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்,

    “இந்நூலில் உள்ள செய்யுட்களைப் பாடிய புலவர்கள் ஒரு நாட்டாரல்லர்; ஓர் ஊராரல்லர்; தமிழகம் முழுமையும் வாழ்ந்தவராவர். இவருள் சேரர், சோழர், பாண்டியர், குறுநில மன்னர், அந்தணர், வேளாளர், பலவகை வணிகர், வீரர், அரசமாதேவியர், மகளிர், பலவகைத் தொழிலாளர் எனப் பல வகைப்பட்டவர் இடம் பெற்றுள்ளனர்.

    சேர, சோழ, பாண்டிய நாடுகள், அவற்றின் தலைநகரங்கள், ஆறுகள், மலைகள், தமிழகத்தில் பேரரசர், சிற்றரசர் செய்த போர்கள், மன்னரது ஒழுக்கம், வீரர் செயல்கள், மறக்குடி மகளிர் செயல்கள், புலவர் அறிவுரைகள் எனப் பலதிறப்பட்ட செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    அக்கால மக்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள், பலவகை நகைகள், உடைகள், உலோகங்கள், உணவுகள், ஊர்திகள், கட்டில்கள், கொடிகள், பாத்திரங்கள், மாலைகள், வாத்தியங்கள் முதலியவற்றின் பெயர்களை இந்நூலிற் காணலாம். தெய்வங்களின் பெயர்கள், கோவில்களின் பெயர்கள், விலங்குகள் பறவைகள் மரங்கள் இவற்றின் பெயர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சங்க காலத் தமிழருடைய உழவு, கைத்தொழில், வாணிகம், பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் இந்நூல் கூறுகின்றது" (தமிழ் மொழி இலக்கிய வரலாறு, பக். 237 - 8) என்று கூறுகின்றார். இந்நூலின் 384 பாடல்களை நூற்று ஐம்பத்து ஏழு புலவர்கள் பாடியுள்ளனர்.

    பதினான்கு பாடல்களைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. பாடப் பெற்றோர் எண்ணிக்கை 178. கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார், கணியன் பூங்குன்றனார், கோவூர்கிழார், பொன்முடியார், ஒக்கூர் மாசாத்தியார் ஆகியோர் பாடிய புலவருள் சிலர். பாண்டியன் அறிவுடை நம்பி, பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், சேரன் கணைக்கால் இரும்பொறை ஆகிய வேந்தர்கள் பாடியுள்ள செய்யுட்களும் இந்நூலில் உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-10-2017 17:14:47(இந்திய நேரம்)