தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-1.2

  • 1.2 இரண்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும்

    புறநானூற்றின் இரண்டாம் பாட்டு மண்திணிந்த நிலனும் எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகராயர். இப்பாட்டு சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை நோக்கிப் பாடப் பெற்றது.

    ஒன்பதாம் பாட்டு ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் நெட்டிமையார். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியது இப்பாட்டு.

    இனி இப்பாடல்களின் உள்ளடக்கம், உருவம், கருத்துணர்த்தும் உத்திகளைக் காணலாம்.

    1.2.1 பெருஞ்சோற்று நிலை (இரண்டாம் பாட்டு)

    போரிடும் காலத்து வேந்தர்கள் தத்தம் படைவீரர்களுக்குச் சோறளித்து உண்ணுக என்று விருந்தோம்புவது வழக்கம். இச்சோறு பெருஞ்சோறு எனப்படும். உதியஞ்சேரலாதன் பாரதப் போரில் ஈடுபட்ட படை வீரர்களுக்குச் சோறளித்தமை பற்றி இப்பாட்டுக் கூறும். இக்குறிப்பைக் கொண்டு உதியஞ்சேரன் பாரதப் போர்க் காலத்தவன் எனச் சிலர் கருதுவர். இப்பெருஞ்சோறு அளித்த செயல் சேர அரசனின் முன்னோன் செயல் என்றும், அச்செயல் இவன் மீது ஏற்றிக் கூறப்பட்டது என்றும் சிலர் கருதுவர்.

    பாட்டும் கருத்தும்

    இப்பாட்டு இருபத்து நான்கு அடிகளையுடையது. இப்பாட்டு முழுமையும் பயில விரும்புவோர் இணைய நூலகத்தை இயக்கிக் கண்டு பயிலலாம்.

    மண் செறிந்த நிலம், நிலத்திற்கு மேல் ஓங்கிய வானம், வான்வெளியைத் தடவி வரும் காற்று, அக்காற்றால் இயக்கப்படும் தீ, அத்தீயோடு மாறுபட்ட நீர் ஆகியன ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் குணங்களைப் போலப் பகைவரது பிழையைப் பொறுத்தல், பகைவரை அழிக்கச் சிந்திக்கும் ஆழ்ந்த சிந்தனையின் அகலம், மனவலி, பிறரைத் தண்டிக்கும் ஆற்றல், பிறர்க்கு அருள் செய்தல் ஆகிய குணங்களைக் கொண்ட சேரலாதனே !

    உன்னுடைய கிழக்குக் கடலில் தோன்றிய ஞாயிறு மாலையில் வெண்மையான அலைகளைக் கொண்ட உன் மேற்குக் கடலில் குளிக்கும். இவ்விடைப்பட்ட நிலத்தே புதிய வருவாய் நீங்காத ஊர்களை உடைய நாட்டிற்கு வேந்தனே! வானவரம்பன் எனப் பெற்றவனே! பெரியோனே !

    அசையும் பிடரிமயிர் பொருந்திய குதிரையைக் கொண்ட பாண்டவர் ஐவரோடு சினம் கொண்டு, நிலத்தின் உரிமையைத் தம்மிடத்தே கொண்ட பொன்னாலாகிய தும்பைப் பூச்சூடிய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும், போரிட்டுப் போர்க்களத்தில் வீழும் வரையில் பெருஞ்சோறாகிய மிக்க உணவை நீ இருபடைக்கும் அளவில்லாது கொடுத்தாய் !

    பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேத நெறி மாறுபட்டாலும், வேறுபாடில்லாத சிந்தனைத் திறமை மிக்க அலுவலர்களுடனே நீங்காமல் நீ நெடுங்காலம் நிலை பெறுவாயாக! பாறைகள் அடுக்கிய மலையிடத்தே பெரிய கண்ணைக் கொண்ட மான் பிணைகள் தம் குட்டிகளுடன், அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயின் ஒளியில் தூங்கும் பொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதியமலையும் போல நீ அசையாமல் நிலைபெறுவாயாக! இது பாட்டின் கருத்துரையாகும்.

    இப்பாட்டின் மனனப் பகுதியாகக் கொள்ள வேண்டிய அடிகள் வருமாறு:

    அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ
    நிலம்தலைக் கொண்ட பொலம்பூம் தும்பை
    ஈரைம் பதின்மரும் பொருது களத்துஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

    வான வரம்பனின் ஆற்றலும் புலவர் அறிவுரையும்

    வான வரம்பன் என்பது சேரர் குடியினர்க்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப்பாட்டில் சேரனது பேராற்றல் சொல்லப்படுகின்றது. நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் என்பன ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் இயக்கத்திலும் இருப்பிலுமே உலகம் உள்ளது. இப்பூதங்களின் ஆற்றலும் பண்புகளும் சேரனிடம் உள்ளன.

    பிறரின் பிழை பொறுக்கும் பண்பில் அவன் நிலம், பிறரை அழிக்க நினைக்கும் கருத்தின் அகலத்தில் அவன் வானம், மனவலிமையில் அவன் காற்று, அழிக்கும் செயலில் அவன் தீ, வழிபட்டால் அருள் செய்வதில் அவன் நீர்.

    இத்தகைய சேரனை நோக்கிப் புலவர் 'எந்தச் சூழலிலும் நீ மாறாது நீடு வாழ்வாயாக' என்று வாழ்த்துகின்றார். பூதங்கள் இயற்கை மாறினால் உலகம் அழியும். சேரன் மாறினும் உலகழியும் எனவே அவன் மாறாது நிலைபெறுக என்றார்.

    பாட்டின் திணை, துறை விளக்கம்

    சங்க காலப் பாடல்கள் திணை, துறை என்ற அடிப்படை அமைப்புகளுள் அடங்குவன. அக்காலத்தில் அகத்திணைகள் ஏழாகவும், புறத்திணைகள் ஏழாகவும் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் உட்கூறாக அமையும் துறைகள் பல இருந்தன. பிற்காலத்தில் புறத்திணைகள் பன்னிரண்டாகப் பெருகின. புறத்திணை பன்னிரண்டு என்ற அடிப்படையில் புறநானூற்றுக்குத் திணை துறைகள் வகுக்கப்பட்டன. இவ்வகையில் புறநானூற்றின் இவ்விரண்டாம் பாட்டு பாடாண் திணைக்குரியது. துறைகளில் இப்பாட்டு செவியறிவுறூஉத் துறைக்கு உரியது. (செவி + அறிவு + உறு = செவியறிவுறூஉ = செவி(காது) ஏற்றுக் கொள்ளும்படி அறிவு கூறுதல்)

    பாடாண் திணையென்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், ஆற்றல், கொடைமை, வீரம் ஆகிய போற்றத்தக்க பண்புகளைப் பாராட்டுவது. செவியறிவுறூஉ என்பது பெரியோர்க்கு அடங்கி அவர்கள் கூறும் மெய்ம்மொழிகளைச் செவியிற்கேட்டு அவற்றின் வழி நடக்க எனக் கூறுவது.

    சேரன் ஐம்பெரும் பூதங்களின் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டவன் என்றும், ஞாயிறு தோன்றி மறையும் இரண்டு திசைகளுக்குட்பட்ட பெருநிலப்பரப்பை ஆண்டவன் என்றும் போற்றுவதால் இப்பாட்டுப் பாடாண் திணைக்குரியதாயிற்று.

    பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நால்வேத நெறிமாறினாலும், நீ மாறாமல் இருக்க வேண்டும் எனச் சேரனை அறிவுறுத்தியதால் இப்பாட்டுச் செவியறிவுறூஉத் துறை ஆயிற்று.

    1.2.2 வாழ்த்தும் மரபு (ஒன்பதாம் பாட்டு)

    புலவர்கள் வேந்தர்களை வாழ்த்தும்போது, 'நீ நெடுங்காலம் வாழ்க! வானம் வழங்கும் மழைத்துளிகளைவிட மிக்க பல ஆண்டுகள் வாழ்க, ஆற்று மணலைவிடப் பல்லாண்டுகள் வாழ்க' என்றெல்லாம் வாழ்த்துவது பண்டைய மரபு. அத்தகைய வாழ்த்தினைப் புறநானூற்றின் ஒன்பதாம் பாட்டில் புலவர் நெட்டிமையார் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி்க் கூறுகின்றார்.

    பாட்டும் கருத்தும்

    இப்பாட்டு பதினோர் அடிகளைக் கொண்டது. பாட்டை முழுமையாக நூலகப் பகுதிக்குச் சென்று அறியலாம்.

    “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். அவன், தனக்கு முன்னோனாகிய பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கியவனும், கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தவனுமாகிய நெடியோன் என்ற வேந்தனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்பது இப்பாட்டின் கருத்துரை.

    புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......

    என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

    பாட்டின் திணை, துறை விளக்கம்

    இப்பாட்டின் திணை பாடாண்; துறை இயன்மொழி.

    பஃறுளி என்ற ஆற்றின் மணலைவிடப் பல்லாண்டுகள் நீ வாழ்க என வாழ்த்தியமையால் இப்பாட்டும் பாடாண் திணை ஆயிற்று. பாடப்பெறும் தலைவனின் இயல்பை மொழிவது இயன்மொழித்துறை. எம் அம்பு தொடுக்கப்படுகிறது. போரின் போது பாதுகாக்கப் பெறவேண்டிய நீங்கள் பாதுகாப்பான இடம் சேர்க என்று கூறும் அறநெறியைத் தன் பண்பாக, இயல்பாகக் கொண்ட சிறப்பை மொழிந்தமையால் இப்பாட்டு இயன்மொழித் துறை ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:38:05(இந்திய நேரம்)