தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-1.1

  • 1.1 சங்க இலக்கியங்களில் புறநானூறு பெறும் இடம்

    சங்ககால அக இலக்கியங்களில் குறுந்தொகையும் புற இலக்கியங்களில் புறநானூறும் பலரால் எடுத்தாளப் பெற்ற சிறப்புடையன. புறநானூற்றில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல். கைக்கிளை, பெருந்திணை என்னும் பன்னிரண்டு திணைக்குரிய பாடல்கள் உள்ளன. இப் பாடல்களுக்குரிய துறைகள் அறுபத்தைந்து. திணை துறையில்லாத பாட்டு 289ஆம் பாட்டாகும். சங்க இலக்கியங்களில் மிகுதியான போர்ச் செயல்களைக் கூறும் நூல் இதுவே. எனினும் போரின்றி உலகோர் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தேவையினையும் இந்நூல் வற்புறுத்துகின்றது. போற்றத் தக்க சான்றோர்களின் வரலாறாகத் திகழ்வது புறநானூறு. சங்க இலக்கியங்களில் இன்றும் பலராலும் விரும்பிப் பயிலப்பெறும் இலக்கியம் புறநானூறு ஆகும்.

    1.1.1 புறநானூற்றின் பழைமையும் பெருமையும்

    புறநானூற்றில் உள்ள பாடல்களின் காலம் கி.மு. 1000 முதல் கி.பி. 300 வரையாகுமென அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை எனக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் இஃது என அறியலாம். மகாபாரதப் போர் பற்றிய செய்தி இந்நூலின் இரண்டாம் செய்யுளில் உள்ளது. இராவணன் சீதையை வலிந்து கொண்டு சென்ற நிகழ்ச்சி இந்நூலின் 378ஆம் செய்யுளில் உள்ளது. பாரதப் போர் பற்றிக் கூறுகையில் பாரதப் படை வீரர்களுக்கு உதியன் சேரலாதன் என்ற சேர அரசன் பெருஞ்சோறு தந்தான் என்று குறிக்கப் பெறுகின்றது. எனவே இச்சேர அரசன் பாரதப் போர்க் காலத்தவன் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். இச்சான்றுகளால் புறநானூற்றின் சில பாக்கள் கி.மு. 300க்கும் முற்பட்டவை என அறியலாம். கரிகாற் பெருவளத்தான் என்ற சோழ மன்னனின் காலம் கி.பி. 75 முதல் 115 வரை எனக் கருதப் பெறுகின்றது. இவ்வேந்தனைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. எனவே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு தொகைநூல் புறநானூறு என அறியலாம்.

    பண்டைத் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பைப் புறநானூறு நன்கு புலப்படுத்துகின்றது. சான்றோர் எனப் பெறுவோர் யார்? - என்ற வினாவிற்கு, 'பழியோடு உலகனைத்தையும் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ளாதவர்; புகழ் எனின் உயிரையும் கொடுக்குவர்; தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர் என்று விடை கூறுகின்றது. பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் வேந்தரைப் பாடியவர் அல்லர். வேந்தனோ, சிற்றரசரோ செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறிப் போலிப் புகழுரை செய்தவரும் அல்லர். கல்வி, புலமை, அஞ்சாமை, நடுவுநிலைமை ஆகியன தலைசிறந்து விளங்கிய ஒருகாலத்தைக் காட்டும் பெருமையுடையது புறநானூறு.

    1.1.2 புறநானூறு - ஒரு வரலாற்றுக் களஞ்சியம்

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழக வரலாற்றை எழுதுவதற்குப் புறநானூறே பெரிய ஆதார நூலாகும். மூவேந்தர்களுக்குள் நிகழ்ந்த போர்கள், வேந்தர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையே நிகழ்ந்த போர்கள், வேந்தர்களிடையே இருந்த பகையைப் புலவர் நீக்கியது, ஒளவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றது, பெருந்தலைச் சாத்தனார் தம் உரையால், தமையனைக் கொல்ல விரும்பிய இளங்குமணன் மனத்தை மாற்றியது, மன்னன் வரிவாங்கும் நெறி பற்றிக் கூறிப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறம் உரைத்தது. வெள்ளைக்குடி நாகனார் கிள்ளி வளவனுக்கு அறிவுரை கூறி மக்களின் நிலத்திற்கு விதிக்கப்பட்ட பழைய வரியை நீக்கியது எனப் பலப்பல வரலாற்று நிகழ்வுகள் புறநானூற்றில் இடம்பெறுகின்றன. எனவே இந்நூலை ஒரு வரலாற்றுக் களஞ்சியம் எனலாம்.

    1.1.3 புறநானூறு ஒரு பண்பாட்டு ஆவணம்

    ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலை எழுதிய அறிஞர் கனகசபைப் பிள்ளை அவர்களும் தமிழர் வரலாறு எழுதிய அறிஞர் பி.டி. சீனிவாச ஐயங்காரும் புறநானூற்றையே பெரிய சான்றாதாரமாகக் கொண்டனர். போர் செய்யப் புகும் அரசன் பசுக்கள், பார்ப்பனர், பெண்கள், நோயுற்றார், பிள்ளைகளைப் பெறாதோர் ஆகியோர் பாதுகாப்பான இடம் சென்று சேர்க என அறிவித்துப் பிறகே போர் செய்யும் பண்பாட்டைப் புறநானூறு (9) காட்டுகின்றது. ஒருவரது செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் வளர்க்க வேண்டும் என்று இந்நூல் (28) கூறும். அரசரது வெண்கொற்றக்குடை வெயில் மறைப்பதற்கல்ல; குடிகளுக்கு நிழல் தர என இந்நூலிற் புலவர் (35) அறிவுறுத்துவர். இவ்வுலகில் புகழ்பெற வாழ்வோரே மறுமையுலகு எய்துவர் என இந்நூல் (50) காட்டும். கல்வியே ஒருவனுடைய மேன்மையைக் காட்டுமேயன்றிக் குடிப்பிறப்பன்று என இந்நூல் (183) கூறும். எங்கு மனிதர் நல்லவராய்த் திகழ்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லதாக அமையும் என இந்நூலின் ஒரு பாட்டு (187) உரைக்கும். சான்றோர் வாழும் சூழலில் இருப்போர் இளமை மாறாது இருப்பர் என ஒரு செய்யுள் (191) காட்டும். இவ்வாறு பல அரிய பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்நெறிகளையும் புறநானூறு வழி அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:38:26(இந்திய நேரம்)