Primary tabs
-
எழுபத்து நான்காம் பாட்டு குழவி இறப்பினும் எனத் தொடங்குவது. இப்பாட்டைப் பாடியவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. இவ்வேந்தன் திருப்போர்ப் புறம் என்ற இடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைப்பிடிக்கப்பட்டு, சங்கிலியாற் பிணைக்கப்பட்டுச் சிறையிற் கிடந்தான். அப்போது அவன் சிறைக்காவலரிடம் தண்ணீர் வேண்டினான். அவர்கள் காலந்தாழ்த்து, அவனைச் சிறிதும் மதியாது தண்ணீர் தந்தனர். அந்நீரைப் பருகாமல், அவன் உயிர் விடுங்கால் இப்பாட்டை எழுதி வைத்துச் சென்றான். இதனால் சேரமன்னனின் மானம் காக்கும் பண்பு வெளிப்பட்டுள்ளது.
இப்பாட்டு ஏழு அடிகளைக் கொண்டது. திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
“குழந்தை இறந்து பிறந்தாலும், உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அரசக் குடியினர், அதனை ஆள் அன்று என்று கருதாமல் வாளால் பிளந்து அடக்கம் செய்வர். அப்படிப்பட்ட குடியிற் பிறந்த நான் பகைவர் வாளால் உயிர் விடாமல், சங்கிலியாற் பிணிக்கப்பட்ட (கட்டப்பட்ட) நாய்போலக் கட்டுண்டேன்; இவ்வாறு என்னை இங்கே இருத்தி வைத்துள்ள அல்லாத உறவினர்களின் உதவியால் வந்த தண்ணீரைப் பிச்சையாகக் கேட்டு உண்ணும் நிலையுடையேன் இல்லை என்று கூறும் மனவலிமை எனக்கு இல்லை. வயிற்றில் உண்டாகும் தீயை ஆற்ற வேண்டி இவ்வாறு தண்ணீரை இரந்து உண்ணும் நிலையினரை அரசக் குடியினர் இவ்வுலகத்திற் பெறுவார்களா? மாட்டார்கள்” என்பது இப்பாட்டின் பொருளாகும்.
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளின் தப்பார்என்பதால் அரசக்குடிப் பிறந்தார் வாளால் புண்பட்டுப் போர்க்களத்தில் வீரச் சாவு பெறுதலே தக்கது எனப் பழந்தமிழர் கருதியமை அறியப்படும். அவ்வாறின்றிப் பிறக்கும் போதே இறந்து பிறந்தாலும், கண் காது மூக்கு இன்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றையும் வாளால் கீறி, போரில் இறந்தோர் செல்லும் வீர உலகத்திற்கு இவையும் செல்க என்று கூறி அடக்கம் செய்வர். [கேளல் கேளிர் (கேள் = உறவு) - கேள் அல்லாத கேளிர் = உறவு அல்லாத உறவினர், சிறைக்காவலர்: மதுகை = வலிமை.]
பாட்டின் திணை, துறை விளக்கம்
இப்பாட்டின் திணை பொதுவியல். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளிலும் கூறப்படாத, அவற்றுக்குப் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல். மானம் இழந்து உயிர் வாழ்தல் தக்கது அன்று என்ற மாந்தர் அனைவர்க்கும் பொதுவாக உரிய செய்தியைக் கூறியமையின் இது பொதுவியலாயிற்று.
இதன் துறை முதுமொழிக் காஞ்சி. சான்றோர் தாம் கண்ட வாழ்வியற் பேருண்மைகளைக் கூறுதல் முதுமொழிக் காஞ்சியாகும். மானத்தோடு வாழ்தல் வேண்டும். இல்லையேல் இறத்தலே தக்கது என உணர்த்தியமையின் முதுமொழிக் காஞ்சித் துறையாயிற்று.