தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-5.5-ஏழாம் பாட்டும் எட்டாம் பாட்டும்

  • 5.5 ஏழாம் பாட்டும் எட்டாம் பாட்டும்

    நன்னுதல் விறலியர் என்ற ஏழாம் பாட்டில் இடம் பெற்றுள்ள செய்திகளையும், பேரெழில் வாழ்க்கை என்ற எட்டாம் பாட்டிலுள்ள செய்திகளையும் பார்ப்போம்.

    5.5.1 நன்னுதல் விறலியர் (ஏழாம் பாட்டு)

    நன்னுதல் விறலியர் என்பது இப்பாட்டின் பெயர். நல்ல நெற்றியை உடைய ஆடுமகளிர் என்பது இதன் பொருள். நன்னுதல் என்னும் சொல் குறிப்பாகக் கற்பில் சிறந்தவள் என்பதை உணர்த்தும் மரபுச் சொல்.

    பாட்டின் கருத்து

    சேரன் பகைவரை அழித்து வேர் அறுக்கும் செயலில் ஓய்வதில்லை. ஒவ்வொரு முறை அவன் போரிடும் போதும், யானைகளைப் பரிசிலாகப் பெறுவதில் கலைஞர்கள் ஓய்வதில்லை. மலை மேலிருந்து வீழும் அருவி போல மாடங்களின் உச்சியில் இருந்து காற்றால் அலைக்கப் படும் கொடிகள் தெருவில் அசையும். அத்தெருக்களில் எரியும் விளக்குகளில் நெய்யை ஊற்றுவர். அந்நெய் விளக்கின் உட்பகுதியிலிருந்து நிரம்பி வழிவதால் விளக்கின் பருத்த திரி பெரிதாக எரியும். அவ்வொளியில் நல்ல நெற்றியையுடைய விறலியர் ஆடுவர். அத்தகைய ஊர்களில் எல்லாம் குட்டுவனைப் பற்றிய புகழுரைகள் ஓய்தல் இல்லை'' என்று சேரனைப் புகழும் இப்பாடலில், ஆடும் தொழிலையுடைய மகளிரும் குலமகளிர்போல் கற்பிற் சிறந்து விளங்கினர் என்று அவன் நல்ல ஆட்சித் திறன் பாராட்டப்படுகிறது. இதனால் நன்னுதல் விறலியர் என்னும் தொடரால் இப்பாடல் பெயர் பெற்றது.

    பாட்டின் துறை முதலியன

    இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு முதலியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டவையே. பாட்டின் பெயர் நன்னுதல் விறலியர்.

    5.5.2 பேரெழில் வாழ்க்கை (எட்டாம் பாட்டு)

    இப்பாட்டின் பெயர் பேரெழில் வாழ்க்கை. பெருமையும் அழகும் உடைய வாழ்க்கை என்பது இதன் பொருள்.

    பாட்டின் கருத்து

    ''பாணர்களுக்குப் பொன்னால்ஆன தாமரையை அணியத் தருபவனே! விறலியர் சூடப் பொன்னரி மாலை அளிப்பவனே! பல புகழும் நிலைபெறக் கடற் பரப்பிற் சென்று பகைவரோடு போர் செய்த குளிர்ந்த கடல்துறையை உடைய பரதவனே! கடலில் மிக்க துன்பங்களுக்கு இடையே பகைவருடன் கடும்போர் செய்து, வென்று பெருஞ் செல்வங்களைக் கொண்டு வந்தாய். அவ்வாறு அரிய முயற்சியால் பெற்ற பொன்னையும் பொருளையும் இரக்கக் குணத்தினால் மிக எளிதாக வாரி வழங்கி விடுகிறாய். அதுவும், உன் புகழைச் சிறப்பாகப் பாடும் திறமையில்லாதவர்கள் பாடும் தகுதியற்ற பாடல்களுக்கு! இதனால் உன்னை, ‘பாட்டின் தரம் உணர இவன் உண்மையில் கல்லாதவன்’ என்று எண்ணிக் கொண்டு அந்தப் புலவர்களும் பாணர்களும் தங்கள் சுற்றத்தாராகிய மற்ற கலைஞர்களின் கைகளை ஏந்தச் செய்து பொருள்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

    அன்புடையவர்களுக்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் நீ. பகைவரின் ஊரைச் சுடுதலால் வாடிய மலர் மாலையையும் காய்ந்த சந்தனம் பூசிய மார்பையும் உடையவன் நீ! உன் நாட்டில் உள்ள மலையிலே தோன்றி, உன் நாட்டில் உள்ள கடலிலே கலக்கும் நீர் நிறைந்த ஆற்றில் கொண்டாடப்படும் புனலாட்டு விழாவும், சோலையில் கொண்டாடப்படும் வேனில் விழாவும் உடையது, பெருமையும் அழகுமுடையது, உன் வாழ்க்கை. உன்னுடைய சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு செல்வ மக்கள் கூடி விளையாடும் காஞ்சி என்னும் ஆற்றின் துறையில் பரந்த நுண்ணிய மணலை விட எண்ணிக்கையில் மிகுந்த, பல்லாண்டுகள் நீ வாழ்வாயாக!''.

    இவ்வாறு வாழ்த்தும் பரணர் குட்டுவனைக் கொடைமடம் கொண்டவனாகக் காட்டுகிறார். தகுதி இல்லாதவர்க்குக் கொடை தருவது கொடை மடம் ஆகும். ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துவது சங்க காலக் கவிதை மரபு.. வேனிற்காலத்தில் அரண்மனையில் வாழாமல், இனிய சோலையில் பகைவர் பற்றிய அச்சம் இன்றித் திரியும் குடிமக்களுடன் வாழும் அழகிய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கை எனப்பட்டது. இதுவே பாடலின் பெயர் ஆகியது.

    பாட்டின் துறை முதலியன

    இப்பாட்டின் துறை இயன்மொழி வாழ்த்து. இது செங்குட்டுவனின் கொடை இயல்பைக் கூறியமையின் இப்பாட்டு இயன்மொழி வாழ்த்துத் துறை பெற்றது. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் பேரெழில் வாழ்க்கை.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:43:40(இந்திய நேரம்)