Primary tabs
5.4 ஐந்தாம் பாட்டும் ஆறாம் பாட்டும்
ஐந்தாம், ஆறாம் பாடல்களாக இடம் பெற்றிருப்பவை ஊன்துவை அடிசில், கரைவாய்ப் பருதி என்பவையாகும்.
5.4.1 ஊன்துவை அடிசில் (ஐந்தாம் பாட்டு)
ஊன்துவை அடிசில் என்பது இப்பாட்டின் பெயர். ஊன் என்பது கறி, இது மாமிசம், இறைச்சி எனப்படும். ஊனோடு குழைத்துச் சமைத்த சோறு என்பது இத்தொடரின் பொருள் இப்பாட்டு சேரன் செங்குட்டுவனின் வீரச் சிறப்பைக் கூறுகின்றது.
பாட்டின் கருத்து
''பொன்னால் செய்யப்பட்ட அழகிய தும்பைப் பூவையும், புற்றில் அடங்கிய பாம்பு போல நெருப்புப் பொறி பறக்கும் அம்பறாத் தூணியில் ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளையும் வில்லையும், வளையாத நெஞ்சையும் யானைகளைத் தாக்கிக் கொல்வதால் நுனி முறிந்த வேலையும் கொண்டவர்கள் உன் வீரர்கள். இவர்கள் செய்யும் போரின்கண், பகையரசர் எழுவரின் முடிப் பொன்னாற் செய்த ஆரத்தை மார்பில் அணிந்து தோன்றும் செங்குட்டுவனே! கேட்பாயாக! ஆழ்ந்த அகழிகளை உடைய மதில் பல கடந்து உட்புகுந்து அழித்த உன் வீரர்கள், அரண்களைக் காக்கும் அங்குள்ள கணைய மரம் போன்ற தம் தோளை உயர்த்தி ஆடுவர். அவர்கள் ஆடும் அக்களத்தில் பிணங்கள் குவிந்து கிடக்கும். இவ்வாறு முன்பும் பல முறை உன் வீரர்கள் வெற்றி பெற்ற களத்தில் துணங்கை என்னும் வெற்றிக் கூத்து நிகழ்த்தியிருக்கின்றனர். சோறு வேறு ஊன் வேறு என்று பிரித்து அறிய முடியாதவாறு ஊன் குழைந்த சோற்றைப் பகைவரை அழித்த வீரர்களுக்குப் பெருவிருந்தாகக் கொடுத்தல் அரசர்களின் வழக்கம். அவ்வாறு செய்த அரசர்களுக்குள் உனக்கு ஒப்பானவர் ஒருவரும் இல்லை.
பகைவரின் குதிரைகள் முதலியன வருவதைத் தடுக்க முள் இட்டு வைத்தலை அறியாத எல்லைப் புறத்தையும், பகைவரின் அம்பு வேகத்தை அடக்கும் கேடயத்தையும் கொண்ட அரசர்களில் நீ ஒப்பு அற்றவன்.
கடல், மேகங்கள் வந்து முகந்து கொள்ளுதலால் குறைந்து போவதில்லை. ஆறுகள் வந்து சேர்வதால் நிரம்பி வழிவதும் இல்லை. காற்றால் அசைக்கப்பட்டு அலைகள் ஓயாமல் உள்ளது அக்கடல். அதன் மீது வேலைச் செலுத்தி, அக்கடலிடத்தே எதிர்த்த பகைவரை வெற்றி கொண்ட உன்னை ஒத்தவர் இனிப் பிறக்கப் போவதில்லை. உன் முன்னோரிலும் ஒருவரும் இல்லை.'' இவ்வாறு பரணர் சேரனைப் புகழ்கிறார்.
சோறு வேறு, ஊன் வேறு என்று பிரித்தறிய முடியாதவாறு இரண்டும் ஒன்றாய்க் குழைந்த சோறு ஊன் துவை அடிசில் ஆகும். அந்த உணவை உண்ணும் உன் வீரர்களுக்குத் 'தம் உடம்பில் உள்ள ஊன் வேறு; நீ தந்த சோறு வேறு’ என்று பிரித்துப் பார்க்காத அளவுக்குச் செஞ்சோற்றுக் கடன் என்னும் நன்றி உணர்வு உள்ளது. அதனால்தான் மிக்க வீரத்துடன் போர் செய்கின்றனர். வெற்றியைக் குவிக்கின்றனர். இந்தக் குறிப்புப் பொருளை உணர்த்தும்படி நயமாக அமைந்துள்ளது இந்தத் தொடர். இதனால்தான் இப்பாடலுக்குப் பெயராக அமைந்தது.
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும். பாட்டின் பெயர் ஊன் துவை அடிசில்
5.4.2 கரைவாய்ப் பருதி (ஆறாம் பாட்டு)
கரைவாய்ப் பருதி என்பது இப்பாட்டின் பெயர். ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச் சக்கரம் என்பது பொருள். (பருதி = சக்கரம்; கரை = ஓரம், விளிம்பு)
பாட்டின் கருத்து
''நல்ல அணிகலன்களையும் காதில் குழைகளையும் கழுத்தில் மாலையையும் உடைய பெண்கள், ஒளிமிக்க வளையலை அணிந்த முன்கையைக் கொண்டவர்கள்; மணிமாலை விளங்கும் மார்பினை உடையவர்கள்; வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்; அக்கூந்தலைக் கொண்டையாக முடித்தவர்கள் அந்தப் பாடல் மகளிர், அவர்கள் நரம்பால் தொடுக்கப் பெற்ற யாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத குட்டுவனின் உழிஞைத் திணைச் செயலைப் புகழ்வர். அவர்களுக்குக் குட்டுவன் இனிய கொடை பல அளிப்பான். போர்க்களத்தில் காடுகள் போன்ற தடைவழிகள் பலவற்றின் வழியாகச் செலுத்தப்படும் தேரின் சக்கரத்தின் ஓரத்தில் குருதிக் கறை படியப் பல வீரர்களின் தலைகள் அச்சக்கரத்தில் அகப்பட்டு நலியும். அத்தகைய போர்கள் பலவற்றை வென்ற, கொல்லும் இயல்புடைய யானைகளையுடைய வேந்தன் குட்டுவன். தன் வேற்படையால் கடலை இடமாகக் கொண்டு போர் செய்தோரையும் தோற்றோடச் செய்தான். பெருமை மிக்க அச்செங்குட்டுவனின் புகழைப் பாடிப் பரிசு பெற்றோர் தம் ஊர்க்கு மீண்டு செல்லக் கருத மாட்டார்.
இவ்வாறு சேரன் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு அன்புடன் முகம் மலர்ந்து கொடை வழங்கும் பண்பைப் பரணர் பாராட்டுகிறார். அதே நேரத்தில் தன் பகைவர்களுக்கு எந்த அளவு கடுமை பொருந்தியவன் என்பதை, அவனது தேர்ச்சக்கரத்தை வைத்தே குறிப்பாக உணர்த்துகிறார். இனிய முகம் கொண்ட இவனது தேரின் சக்கரம் இரத்தக் கறை படிந்த வாயாகக் காட்டப்படுகிறது. இந்தச் சிறப்பினால் கரைவாய்ப் பருதி என்னும் தொடர் பாடலின் பெயராக ஆயிற்று.
உழிஞைத்திணை என்பது உழிஞைப் பூவைச் சூடிப் படையெடுத்துச் சென்று பகைவரின் கோட்டை மதிலை வளைத்து முற்றுகைப் போர் செய்வது.
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும். பாட்டின் பெயர் கரைவாய்ப் பருதி.