தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--கைக்கிளையின் பாகுபாடு

  • 4.2
    கைக்கிளையின் பாகுபாடு

    முதல் நூற்பா களவுக்கு வரையறை செய்தது. அடுத்த நூற்பா, தலைவனும் தலைவியும் அறிந்து சந்திப்பதற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகளை எடுத்துரைக்கின்றது.

    1. காட்சி
    2. ஐயம்
    3. துணிவு
    4. குறிப்பறிதல்

    எனும் நான்கும் களவிற்கு முன் நிகழ்வனவாகும். இந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வன. இவற்றைப் படிநிலைகள் என்றும் குறிப்பிடலாம். இந்நான்கும் தலைவனின் விருப்பம் என்கிற ஒருபக்கக் காதலை மட்டும் அடிப்படையாகக் கொண்டன. எனவே ஒருதலைக் காமம் என்கிற கைக்கிளை ஒழுக்கமாக இவை கருதப் பெறுகின்றன.

    4.2.1
    காட்சி

    காட்சி - காண்பது.

    தலைவனும் தலைவியும் தனி இடத்து எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் காண்பது காட்சி ஆகும். இக்காட்சி நல்வினைப் பயனாக ஏற்படுவதாகும்.

    வினை இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாகும்.

    நல்வினை - தலைமக்களை ஒன்றுசேர வைப்பது.

    தீவினை - தலைமக்களைப் பிரிப்பது.

    இவற்றுள் சேர்த்து வைக்கும் பாங்குடைய நல்வினைப் பயனாய் - முதன் முதலாக எதிர்ப்படும் தலைமக்கள் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்வது - காட்சி எனப்படும்.

    தலைமக்கள் இருவரும் எல்லா நிலைகளிலும் ஒத்தவராய் இருப்பர்; இருக்க வேண்டும். எனினும் தலைவன் மேம்பட்டவனாய் இருப்பதும் குற்றமில்லை என்பதும் ஓர் இலக்கணம் ஆகும்.

    4.2.2

    ஐயம் - சந்தேகப்படுதல்.

    இது, கைக்கிளையில் தலைவனிடம் நிகழும் என்பது இலக்கண விதி.

    ஒரு பெண்ணின் தோற்றமும், அவளைக் கண்ட இடமும் சிறப்பு மிக்கதாக அமைந்துவிடும் போது, அவளைப் பற்றிய ஐயம் தலைவனுக்கு எழுவது இயற்கை.

    அப்பெண் மானுடப் பெண்ணா ! தெய்வப் பெண்ணா! என்பது போலத் தலைவன் உயர்ந்த எண்ணத்தில் ஐயம் கொள்வான்.

    சான்று :

    அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. - (குறள், 1081)

    என்னும் குறட்பா தலைமகன் ஐயம் கொண்டதற்குச் சான்றாகும்.

    தன் முன் வந்து தோன்றும் அழகிய தலைவியைக் காணும்போது அவள் சாதாரண மானுடப் பெண்ணா? தெய்வமா? ஆடும் மயிலா? என்றெல்லாம் தலைவன் ஐயுறுவதாக இக் குறட்பா அமைந்துள்ளது. (தலைவிக்கு ஐயம் ஏற்படுதல் மரபு இல்லை)

    தலைவியைக் கண்டபோது அவள் தெய்வப் பெண்ணா? மானுட மகளா? என்று ஐயப்பட்ட தலைவன், பின்னர்த் தன் ஐயம் நீங்கி, அவள் மானுடப் பெண்ணே என்ற முடிவுக்கு வருவான். அவ்வாறு அவன் ஐயம் நீங்கி ஒரு முடிவுக்கு வருவதைத் துணிவு என்று கூறுவர். அத்தகைய துணிவுக்கு வர, சில அடையாளங்கள் துணைபுரிவதாக அமையும். அவையாவன:

    1. உடலில் எழுதப்பட்ட வல்லிக்கொடி
    2. அணிந்திருக்கும் அணிகலன்களின் அமைப்பு
    3. சூடிய மலர் வாடுதல்
    4. மலரை வண்டு மொய்த்தல்
    5. பாதம் தரையில்பட நடந்து வருதல்
    6. இமைக்கின்ற கண்கள்
    7. தலைவி அடைகின்ற அச்சம்

    இவை காரணமாக, தலைவன் தலைவியை மானிடப் பெண் எனக் கண்டு ஐயம் தீர்வான்.

    தலைவியைக் காண்பது; ஐயம் கொள்வது; மானுடப் பெண்ணே என்று துணிவது; இவற்றின்பின் தலைவி தன்னை விரும்புகிறாளா என்பதை அறியும் ஆவல் தலைவனுக்கு ஏற்படும். அதற்காக, தலைவி ஏதேனும் குறிப்புக் காட்டுகிறாளா என்று நோக்குவது தலைவனது இயல்பு. அதையே குறிப்பறிதல் என்று குறிப்பிடுவர்.

    தலைமகள், தன் உள்ளத்தில் உள்ள தலைவன் மீதான விருப்பத்தைக் கண்களின் வழிப் புலப்படுத்துவாள். இதுவே அவள் காட்டும் குறிப்பாகும் என்பது இலக்கண வரையறை.

    • அரிவை நாட்டம் (தலைவியின் கண்கள் காணும் பார்வை)
    • அகத்துநிகழ் வேட்கை (மன விருப்பம்)
    • தெரிய உணர்த்தும் (வெளிப்படுத்தும்)
    • குரிசிற்கு என்ப (தலைவனுக்கு)

    என்பது அகப்பொருள் நூற்பா (6).

    குறிப்பு : காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் இந்நான்கும் நிகழ்ந்த பின்னரே (தலைவியின் காதல் குறிப்பு வெளிப்பட்ட பின்னர்) ஐந்திணைக்குரிய களவு தொடங்கும். அதுவரை தலைவனிடம் மட்டுமே காதல் உணர்வு இருப்பதால் இந்நான்கையும் கைக்கிளைக்குரிய படிநிலைகளாகவே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:50:38(இந்திய நேரம்)