தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இயற்கைப் புணர்ச்சி

  • 4.4
    இயற்கைப் புணர்ச்சி

    இது களவிற்குரிய கிளவிகளில் ஒன்று.

    முதன் முதலாகத் தலைவனும் தலைவியும் தாமே கண்டு கூடுவது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். தெய்வம் கூட்டுவிக்கத் தன்மனம் வேறாய் (திரிந்து) நின்ற தலைவன், தலைவியைக் கூடுவான். இதனை,

    1. தெய்வத்தால் எய்துவது
    2. தலைவியால் எய்துவது

    என இருநிலைகளாகக் காணலாம்.

    1. கலந்து மகிழ்தல்
    2. அழகினைப் பாராட்டல்
    3. ஏற்ற அணிகளை அணிதல்

    என்னும் மூன்றும் தெய்வத்தால் அடையப்பெறும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகள் ஆகும்.

    இவையாவும் தலைவியால் நிகழும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகளாகும்.

    தலைவியால், தலைவன் கூடும் இயற்கைப் புணர்ச்சியானது

    1. தலைவிக்குத் தலைவன் தன் வேட்கையை உணர்த்துதல்.
    2. தலைவனது வேட்கையைத் தலைவி முதலில் மறுத்தல்.
    3. தலைவனது வேட்கையைத் தலைவி பின்னர் ஏற்று உடன்படுதல்.
    4. அதன்பின் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.

    என நான்கு பிரிவுகளை உடையது.

    • தலைவியால் அடையும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவு

    இயற்கைப் புணர்ச்சியின் ஒரு வகை தலைவியின் மூலம் நிகழும் என்று கண்டோம். அக்கூட்டத்தினை ஒட்டி நிகழும் பல்வேறு செயல்பாடுகளை அகப்பொருள் இலக்கண நூல் தொகுத்துக் கூறியுள்ளது. அவையாவன :

    1
    இரந்துபின் நிற்றற்கு எண்ணல்
    :
    தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்பதற்கு நினைத்தல்.
    2
    இரந்து பின்னிலை நிற்றல்
    :
    தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்றல்.
    3
    முன்னிலையாக்கல்
    :
    தலைவன் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறுதல்.
    4
    மெய் தொட்டுப் பயிறல்
    :
    தலைவன் தலைவியின் உடலைத் தொட்டு நெருங்கிப் பழகுதல்.
    5
    பொய் பாராட்டல்
    :
    தலைவன் தலைவியிடம் உள்ளதையும் இல்லாததையும் சேர்த்துக் கூறுதல்.
    6
    இடம் பெற்றுத் தழால்
    :
    தலைவன் தலைவி நிற்கும் இடத்திற்குச் சென்று அவளைத் தழுவ விரும்பிக் கூறுதல்.
    7
    வழிபாடு மறுத்தல்
    :
    மேற்கண்டவாறெல்லாம் தலைவன் கூறியதைத் தலைவி முழுவதுமாக மறுத்தல்
    8
    இடையூறு கிளத்தல்
    :
    தலைவி நாணிக்கண் புதைத்ததனால் (வெட்கப் பட்டுக் கண்ணை மூடியதால்) உண்டான துன்பத்தைத் தலைவன் கூறுதல்.
    9
    நீடு நினைந்து இரங்கல்
    :
    தலைவன் தலைவியைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து வருத்தப்பட்டுப் பேசுதல்
    10
    மறுத்து எதிர்கோடல்
    :
    தலைவி, முன்பு மறுத்ததனை மாற்றிக் கொண்டு தலைவன் கருத்தை ஏற்றல்.
    11
    வறிதுநகை தோற்றல்
    :
    தலைவியின் முகத்தில் சிறிது புன்னகை தோன்றுதல்.
    12
    முறுவல் குறிப்பு உணர்தல்
    :
    தலைவியின் புன்முறுவல் புலப்படுத்தும் குறிப்பைத் தலைவன் உணர்ந்து கொள்ளுதல்.
    13
    முயங்குதல் உறுத்தல்
    :
    தலைவி தன்னோடு சேர்வதற்கு உடன்பட்டதைத் தலைவன் வலியுறுத்திக் கூறுதல்.
    14
    புணர்ச்சியின் மகிழ்தல்
    :
    தலைவன் தலைவியோடு கூடிய புணர்ச்சியால் மகிழ்தல்.
    15
    புகழ்தல்
    :
    தலைவியின் அழகு நலத்தைத் தலைவன் புகழ்ந்துரைத்தல்.

    தன் மதிப்பீடு : வினாக்கள்-I

    1.
    எண்வகை மணங்கள் யாவை?

    2.
    களவு - வரையறை தருக.

    3.
    கைக்கிளையின் பாகுபாடுகள் எத்தனை? யாவை?

    4.
    தலைவன் ஐயம் நீங்கித் துணிவு பெற உதவுவன எவை?

    5.
    இயற்கைப் புணர்ச்சி என்றால் என்ன? அதன் இரு நிலைகளைக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 15:31:46(இந்திய நேரம்)