Primary tabs
-
2.8 வணங்கல்
வணங்கல் என்பதில் கொற்றவை நிலை, வெறியாட்டு ஆகியவை அடங்கும்.
கொற்றம் - வெற்றி, கொற்றவை - வெற்றியைத் தரும் தாய்த் தெய்வம். நிலை - நிலைமை, முறைமை. வழிபடும் முறைமை. வழிபடும் முறைமை பல வகைப்படும். அவை, பராவல், பழிச்சுதல், பலி நேர்தல், சூளுரைத்தல் என்பனவாம். கொற்றவையைப் பராவியது கொற்றவை நிலை எனப் பெற்றது.
- கொளுவின் பொருளும் கொளுவும்
கொற்றவை, ஞானப் பாவை ; வெற்றியைத் தரும் சூலப் படையினை உடையவள். சற்றும் கருணையினின்றும் அகலாதவள். அவளது அருள் சிறப்பை வியந்து உரைப்பது கொற்றவை நிலை என்னும் துறையாம்.
ஒளியின்நீங்கா விறல்படையோள்
அளியின்நீங்கா அருள்உரைத்தன்று.எடுத்துக்காட்டு வெண்பா :
ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை - மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந்து உறும்.- இதன் கருத்து
கொற்றவையாம் தெய்வம், நம்முடைய பகைவரின் அரண் அழியும்படி, நம் தலைவனின் படை புறப்படுவதற்கு முன்பாகப் புறப்பட்டு எழுந்து சென்று, வெற்றியை அருளுகின்றாள் என்று அவளது அருள்நிலையைப் போற்றிப் பராவுகின்றனர் வெட்சி மறவர்.
வெறி - வள்ளிக் கூத்து ; ஆட்டு - ஆட்டம். ஆடுவோர், மறவரின் மனைவியர், ஆகோள் வினை (ஆநிரை கவர்தல்).நன்கு முடிய வேண்டி, முருகனின் வேலினைக் கையகத்தே கொண்ட வெறியாடுபவனுடன் வள்ளியைப் போல வேடம் பூண்டு ஆடும் ஆட்டம் ஆதலின், வெறியாட்டு எனப் பெயர் பெற்றது.
- கொளுவின் பொருளும் கொளுவும்
தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் பின்னர்ப் புரிய இருக்கும் போர்வினையை வெற்றியில் முற்றுவிக்கும் பொருட்டு, மறத்தியராம் மனைவியர்கள் வள்ளியைப் போல் வேடம் புனைந்து தெய்வம் ஏறப் பெற்ற வேலன் என்பானுடன் சேர்ந்து ஆடுவது வெறியாட்டு என்னும் துறையாம்.
வால்இழையார் வினைமுடிய
வேலனொடு வெறியாடின்று.