தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவர்தல்

  • 2.4 கவர்தல்

    இத்திணையின் துறைகள் பத்தொன்பதையும் ஐந்து நிலைகளில் பிரித்துப் பார்க்கலாம் என்று கண்டோம். அவற்றுள் முதல் நிலை கவர்தல். இதில் வெட்சி அரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள் என்னும் ஏழு துறைகள் அடங்கும்.

    2.4.1 வெட்சி அரவம்

    கவர்தல் என்னும் முதல் நிலையின் முதல் துறை வெட்சி அரவம். வெட்சி - நிரை கவர்தல்; அரவம் - சத்தம், ஒலி, ஓசை. நிரை கவர்தலை விரும்பிய வெட்சி மறவர்கள் ஒன்று கூடிச் செல்லும் போது எழும் ஓசை காரணமாக இத்துறை வெட்சி அரவம் எனப் பெற்றது .

    • கொளுப் பொருளும் கொளுவும்

    பகைவரது ஆநிரைகளைக் கவர்வதற்காக, அவர்களது போர்முனைக்குச் செல்ல வெட்சி மறவர்கள் விரும்புவார்கள். அவ்வாறு விரும்பியதை விளம்புவது வெட்சி அரவம் என்னும் துறையாம்.

    கலவார் முனைமேல்
    செலவு அமர்ந்தன்று.

    (கலவார் = பகைவர் ; முனை = போர்முனை ; செலவு = செல்லுதல் ; அமர்தல் = விரும்புதல் )

    என்பது கொளு. நூற்பாவின் நுட்பத்தைச் சிறு சொற்களில் சுருக்கமாகக் கூறுவது கொளு எனப்படும். இதுவும் நூற்பாவைப் போலவே அளவில் சுருங்கியும் பொருள் ஆழம் மிகுந்தும் இருக்கும். இதனை விளக்கும் வகையில் ஒரு வெண்பாப் பாடல் வரும். இந்த அமைப்பை நூல் முழுதும் காணலாம். வெட்சியரவம் துறைக்குத் தரப்பட்டுள்ள வெண்பா :

    நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
    அடிபடுத்து ஆரதர் செல்வான் - துடிபடுத்து
    வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
    கட்சியுள் காரி கலுழ்ம்.

    • இதன் பொருள்

    நெடிய வேற்படையைக் கொண்ட வெட்சி மறவர்கள் தமது காலில் வீரக்கழலைப் பூட்டி, சிள்வீடு என்னும் வண்டுகள் ஒலிக்கும் காட்டின்கண் கடத்தற்கரிய வழியைத் துன்பமின்றிக் கடப்பதற்காகப் பாதங்களில் செருப்பை அணிந்து, துடியைக் கொட்டி வெட்சிப் பூவைச் சூடுகின்றார்கள். துடியைக் கொட்டியதும் பகைவருடைய ஆநிரைகள் தங்கும் காவற்காட்டில் காரி என்னும் பறவை தீநிமித்தத்தை அறிவிப்பது போல அழுகையொலியை எழுப்புகின்றது. வெட்சியார் நாட்டில் துடி ஒலி ; பகைவரது காவற்காட்டில் காரியின் அழுகை யொலி.

    • துறையமைதி

    காட்டில் வண்டின் (சிள்வீடு என்னும் வண்டின்) அரவம், துடியின் அரவம், காரிப் புள்ளின் அரவம் எனப் பல்வேறு அரவங்கள் மறவர்களின் அரவமொடு இணையும் அழகைக் காண்கின்றோம்.

    2.4.2 விரிச்சி

    வெட்சியரவத்தை அடுத்து வரும் துறை விரிச்சி. விரிச்சி - நற்சொல். தாம் மேற்கொண்ட செயலின் விளைவு நன்றாய் முடியுமோ என்பதனை முன்கூட்டியே அறிய விரும்புவோர் விரிச்சி கேட்பர். இது மரபு. ஆநிரை கவர்தல் நிமித்தமாகப் போர் முனை செல்லக் கருதுவோர், பொதுவாக, அந்த நேரத்தில் முன்பின் தெரியாதவர் வாயினின்று வெளிவரும் சொல்லைக் கூர்ந்து கேட்டுப் பொருள் கொள்வது விரிச்சி எனப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    பகை மன்னனது ஆத்திரளைக் கைக்கொள்ள விரும்பிய வெட்சி மறவர், தாம் விரும்பிய ஆநிரை கவர்தலாகிய செயலின் விளைவு நன்மையில் முடியுமா என்று அறிவதற்காக இருள் மண்டிய மாலைப் போதில் தம்மொடு தொடர்பில்லாத அயலவரின் நற்சொல்லைக் கேட்பது விரிச்சி என்னும் துறையாம்.

    வேண்டிய பொருளின் விளைவு நன்குஅறிதற்கு
    ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று.

    எடுத்துக்காட்டு வெண்பா

    எழுஅணி சீறூர் இருள்மாலை முன்றில்
    குழுஇனம் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
    குடக்கள் நீ கொண்டுவா என்றாள் கனிவில்
    தடக்கையாய் வென்றி தரும்.

    • இதன் பொருள்

    நமது சிற்றூரில், இருள் சூழ்ந்த மாலை நேரத்தில், திருக்கோயில் முற்றத்தின்கண் நிமித்தம் பார்க்கும் நம்மவர்கள் கைகூப்பித் தெய்வத்தைத் தொழுது நின்றார்கள். நின்ற அவ்வேளையில், ஒருத்தி ‘ஏணியில் வைத்துள்ள குடத்துக் கள்ளை நீ கொண்டு வா’ என மற்றொருத்தியிடம் கூறினாள். ஆதலால், நம் செயல் உறுதியாக வெற்றியைத் தரும் என்று நிமித்தம் பார்த்த ஒருவன், படைத் தலைவனுக்குக் கூறுகிறான்.

    • துறையமைதி

    ‘தொழுவில் குடக்கள் நீ கொண்டு வா’ என்று ஒருத்தி ஏவும் நற்சொல்லைக் கேட்டோம்; ‘குனிவில் தடக்கையாய்! வெற்றி உண்டாகும்’ என்னும் கருத்து வெளிப்படுவதால் துறைக் கருத்துப் பொருந்துகின்றது. இவ்வாறே பிற துறைகளுக்கும் கொளுவும் உதாரண வெண்பாவும் புறப்பொருள் வெண்பாமாலையில் காணலாம்.

    2.4.3 செலவு

    ஆநிரை கவர முற்பட்ட வெட்சி மறவர்கள் குழுமினார்கள். நற்சொல்லும் கேட்டார்கள். பின்னர்ச் செய்ய வேண்டுவது போர்முனைக்குச் செல்வதுதானே! அதனைச் செய்கின்றனர். ஆதலின், அடுத்த துறை செலவு எனப் பெற்றது.

    2.4.4 வேய்

    அடுத்துச் சொல்லப்படும் துறை வேய். வேய் என்பதன் பொருள் ஒற்று என்பதாகும். இதனை வேவுபார்த்தல் என உலக வழக்கில் வழங்குவர். ஒற்று ஒற்றிப் பார்த்தல் காரணமாக வேய் எனப் பெயர் பெற்றது இத்துறை.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    வெட்சியாருடைய ஒற்றர்கள், பகைவருடைய ஆநிரைகள் நின்ற காவற்காட்டின்கண் சென்று, காவற்காட்டின் (மிளை/இளை) வலி (பாதுகாப்பு), அதனைக் காக்கும் மறவர்கள் வலி (ஆற்றல், எண்ணிக்கை), ஆநிரைகளின் அளவு போன்றவற்றை அறிந்துவந்து உரைப்பது வேய் என்னும் துறையாம்.

    பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து
    ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று.

    2.4.5 புறத்திறை

    புறத்து - காவற்காட்டின் புறத்தில் (வெளியே); இறை - தங்குதல். ஆநிரையைக் கவர நினைத்த மறவர் காவற்காட்டின் புறத்தே தங்கியிருத்தல் காரணமாக இத்துறை, புறத்திறை என்னும் பெயர் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    காவற்காட்டின் உள்ளிருப்போர் பல வழிகள், வாயில்கள் வழியே தப்பிப் போகாதபடி வெட்சி மறவர் அதன் புறத்தே தங்கியதைப் பேசுவது புறத்திறை என்னும் துறையாம்.

    நோக்கஅரும் குறும்பின் நூழையும் வாயிலும்
    போக்குஅற வளைஇப் புறத்து இறுத்தன்று.

    (குறும்பு = சிற்றூர் ; நூழை = சிறு வாயில், துளை)

    2.4.6 ஊர்கொலை

    அடுத்தது ஊர்கொலை என்னும் துறை. குறிஞ்சி நிலத்து எயினரின் சிற்றூர் குறும்பு எனப்படும். ஆவும் கன்றும் இருக்கின்ற தொழுவங்களையுடைய சிற்றூர் குறும்பு. இதனை, ஊர் எனக் குறிப்பிட்டனர். கொலை - அழித்தல். எனவே, அத்தொழுவங்களையுடைய குறும்பை அழிப்பது ஊர் கொலை என்பதாயிற்று.

    2.4.7 ஆகோள்

    அடுத்து வரும் துறை. - பசு. கோள் - கொள்ளுதல். எதிர்த்த மறவரை வீழ்த்திய பின்னர்த் தொழுவின்கண் இருந்த ஆநிரையைப் பற்றிக் கொள்வது ஆகோள் எனப் பெற்றது.

    • கொளுவின் பொருளும் கொளுவும்

    வென்றி (வெற்றி)யை உடைய வெட்சி மறவர்கள் தங்கள் பகைவரை வென்று ஆரவாரம் செய்து காவற்காட்டில் இருந்த கன்றுகளுடனே ஆன்நிரையைக் கைப்பற்றியது ஆகோள் என்னும் பெயருடைய துறையாம்.

    வென்றுஆர்த்து விறல்மறவர்
    கன்றோடும் ஆதழீஇயன்று.

    வெட்சி மறவர்கள் ஊர் நடுவில் புகுந்தார்கள். பகை மறவரின் காவலில் இருந்த ஆநிரையைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியவர்கள், அந்த இடத்தினின்றும் அகலாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களது நிலை, புலிகள் பல தம்முள் இணைந்து ஓரிடத்தே கூடியிருந்ததனை ஒப்பதாய் இருந்தது. இதுவே உதாரண வெண்பாவின் கருத்து.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1)
    ‘திணை’ எனும் சொல் தரும் பொருள்கள் யாவை?
    2)
    ஆநிரையைக் கவர்வோர் எந்தப் பூவைச் சூடுவர்?
    3)
    வெட்சி எந்த அகத்திணையின் புறன்?
    4)
    வெட்சித் துறைகளை எத்தனைப் பகுப்புகளில் அடக்கலாம்? அவை யாவை?
    5)
    வெட்சித் திணையின் துறைகள் எத்தனை?
    6)
    வெட்சியின் வகைகள் எத்தனை? அவை யாவை?
    7)
    ‘விரிச்சி’ எனும் வெட்சித் துறையை விளக்குக.
    8)
    ‘வேய்’ என்னும் வெட்சித் துறையின் பொருளைத் தருக.
    9)
    ‘ஊர்கொலை’ - துறைப் பொருள் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 17:21:44(இந்திய நேரம்)